Published : 13 Nov 2016 07:03 PM
Last Updated : 13 Nov 2016 07:03 PM

இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது: இங்கிலாந்துக்கு தார்மீக வெற்றி

ராஜ்கோட் டெஸ்ட் போட்டி இந்தியாவின் போராட்ட 2-வது இன்னிங்ஸிற்குப் பிறகு டிராவில் முடிந்தது. கடைசியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்த போது ஆட்டம் டிரா ஆனது.

49 ஓவர்களில் 310 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து போராடி டிரா செய்தது. கேப்டன் விராட் கோலி 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும், ஜடேஜா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் டிராவுக்கு உதவினர்.

82 டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஸ்பின் பவுலர்கள் தங்களிடையே 385 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டுள்ள ஆதிக்க நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர்கள் 41 டெஸ்ட் போட்டிகளில் 117 விக்கெட்டுகளை மட்டுமே தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர், ஆனால் இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து, இந்திய ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை 797 ரன்களை இந்த டெஸ்ட்டில் அடிக்க விட்டனர்.

49 ஓவர்கள்தான் என்றாலும் இங்கிலாந்து விரைவில் தங்கள் ஓவர்களை வீசியதால் 52.3 ஒவர்கள் வரை வீசி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

முன்னதாக அலிஸ்டர் குக்கின் 30வது டெஸ்ட் சதத்துடன், அறிமுக வீரர் ஹமீதின் அபாரமான 82 ரன்களுடனும் இங்கிலாந்து 260/3 என்று டிக்ளேர் செய்தது.

இந்திய அணி களமிறங்கிய போது கடும் நெருக்கடியில் ஆடிய கவுதம் கம்பீர் 6 பந்துகள் தடுமாறி ரன் எதுவும் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்ப் லைனில் சற்றே எழுப்ப கம்பீர் வழக்கம் போல் எட்ஜ் செய்து ரூட்டிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் இவர் தனக்கு கொடுத்த வாய்ப்புக்கான பொறுப்புறுதியுடன் ஆடவில்லை. முரளி விஜய்க்கு கடினமான கேட்சை ஸஃபர் அன்சாரி பிடித்திருந்தால் அல்லது புஜாராவுக்கு பிராட் எளிதான கேட்சை விட்டிருக்காவிட்டால் இந்தியா தோல்விக்கு அருகில் இன்னும் கொஞ்சம் சென்றிருக்கும் இன்னும் கூட நெருக்கடிக்குள்ளாகி தோற்றிருக்கும்.

அதே போல் அஸ்வினுக்கு ஒரு அவுட் ரிவியூ செய்து கொடுக்கப்படவில்லை, கால்காப்பில் பட்ட பந்து ஸ்டம்பைத் தாக்கினாலும், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை, 3-ம் நடுவர் அஸ்வின் பந்தை ஆட முயற்சி செய்தாரா என்று கேட்டார், நடுவர் ஆம் என்றதால் தப்பித்தார், ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அஸ்வின் பந்தை மட்டையில் ஆட முயற்சி செய்யவில்லை, மட்டையை அவர் பேடிற்கு பின்னால் ஒளித்தே ஆடினார் என்று திருப்திகரமாக வாதாடியும் பலிக்கவில்லை. அப்போது அஸ்வின் 7 ரன்கள், அதன் பிறகு அவர் 32 ரன்களை எடுத்தே ஆட்டமிழந்தார், ஒரு 14 ஓவர்கள் காலாவதியாயின.

அதன் பிறகு இங்கிலாந்து களவியூகத்தில் நெருக்குதலையும், பந்து வீச்சில் ஆக்ரோஷத்தையும் கூட்டியது. புஜாரா 18 ரன்களை எடுத்து ஆடி வந்த போது அடில் ரஷித்தின் சாதாரண பந்தை, முன்னால் வந்த் ஆடியிருக்க வேண்டிய பந்தை, பின்னால் சென்று ஆடினார், பந்து லேசாக திரும்பி கால்காப்பில் தாக்கியது அவுட் என்றார் நடுவர், இதனை ரிவியூ செய்திருக்கலாம் ஏனெனில் பந்து பிட்ச் ஆனது லெக் ஸ்டம்புக்கு வெளியே, நாட் அவுட்டாகவும் வாய்ப்பிருந்தது. ஆனால் புஜாரா ரிவியூ செய்யவில்லை.

முரளி விஜய் நன்றாக ஆடி 31 ரன்களை எடுத்த நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அடில் ரஷீத்த்தின் லெக் பிரேக் ஒன்று திரும்பி விஜய் மட்டையின் உள்விளிம்பில் பட்டு அவரது நெஞ்சில் பட்டு அருகில் கேட்ச் ஆனது. அஜிங்கிய ரஹானேவுக்கு மோசமான டெஸ்ட் ஆக அமைந்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்களில் அன்சாரியிடன் பவுல்டு, இந்த இன்னிங்ஸில் மொயின் அலியின் ஆஃப் ஸ்பின்னை தவறாக கணித்து கட் செய்ய முயன்று தோல்வியடைய பேடில் பட்டு பவுல்டு ஆனார், இவ்வளவு திரும்பும் என்று 5-ம் நாளில் ஒரு பேட்ஸ்மென் எதிர்பார்க்காதது தவறு. ரஹானே 1 அவுட்.

71/4 என்று ஆனது, இதன் பிறகுதான் அஸ்வின் 7 ரன்களில் நடுவரால் பிழைத்தார், அஸ்வினும் கோலியும் இணைந்து 14 ஓவர்கள் ஆடி ஸ்கோரை 118 ரன்களுக்கு உயர்த்தினர் அஸ்வின் அப்போது 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு முன்னால் அன்சாரியை 3 பவுண்டரிகள் அடித்தார். முன்னதாக மூன்று முறை அவர் பந்தை ஆடாமல் விட்ட போது பேடைத் தாக்கிய போதும் நடுவர் நாட் அவுட் என்றார், நடுவில் வாங்கியதைத்தான் இங்கிலாந்து ரிவியூ செய்து விரயம் செய்தது. அதாவது பேட்ஸ்மென் பந்தை விளையாட முயன்றாரா இல்லை பாவ்லா செய்தாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் 3-ம் நடுவருக்கு இல்லை. இதனால் அஸ்வின் பிழைத்தார்.

சஹா இறங்கி வந்து ஆடினார் ஸ்பின்னர்களை, ஒரு முறை லாங் ஆனில் தூக்கி ஒரு பவுண்டரி அடித்த போது கோலி அவரைப் பாராட்டினார், ஆனால் 9 ரன்களில் அவர் அதே முறையில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் கோலி ஒருமுனையில் அவ்வளவு திருப்திகரமாக சரளமாக ஆடாவிட்டாலும் டிராவை உறுதி செய்தார். அதாவது ஸ்பின்னர்களை அடித்து ஆடி நெருக்கமான களவியூகத்தை தவிர்ப்பதுதான் ஆக்ரோஷம் பேசும் வீரர்களுக்கு அழகு, ஆனால் மேன்மேலும் லொட்டு வைத்ததால் அலஸ்டைர் குக் (இவர் எதிர்மறை அணுகுமுறை பெயர்பெற்றவர்) ஒன்று, இரண்டு, மூன்று என்று பீல்டர்களை அருகில் நெருக்கி கடைசியில் குடை போல் சுற்றி பீல்டர்களைக் கொண்டு வந்து கோலியையும் ஜடேஜாவையும் நெருக்கினார். ஆனால் ஜடேஜா அடித்து ஆடி 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும் விராட் கோலி 98 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் டிரா செய்தனர்.

வெற்றிதான் எனது உயிர் மூச்சு என்று கூறிய விராட் கோலிக்கு இந்த டெஸ்ட் ஒரு சிறந்த ஆத்ம பரிசோதனைக்கான வாய்ப்பை அளித்துள்ளது. அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 230 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது அவருக்கு ஒரு மறக்க வேண்டிய டெஸ்ட் போட்டி பவுலிங்கைப் பொறுத்தவரை. பேட்டிங்கில் 70 முக்கிய ரன்களை எடுத்தார். ரஹனே ஒவ்வொரு தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் மோசமாக சொதப்புவது வழக்கமாகி வருகிறது. குழி பிட்ச்களில் காட்டும் ஆக்ரோஷம் இந்திய அணியினிடத்தில் நல்ல பிட்ச்களில் வரவில்லை. ஆட்ட நாயகனாக மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் நம் லெக்ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 158 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியினர் 270 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தைரியமாக டிக்ளேர் செய்து பார்த்திருந்தால் ஒரு அரிதான ஒரு 5-ம் நாள் வெற்றியைக் கண்டிருக்க முடியும். எனினும் தார்மீக வெற்றி இங்கிலாந்துக்குத்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x