Published : 21 Nov 2016 10:49 AM
Last Updated : 21 Nov 2016 10:49 AM

இந்தியாவிடம் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. வெற்றிபெற 405 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 455 ரன்களையும், இங்கிலாந்து அணி 255 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 56 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த ஜோடி விரைவாக ரன்களைச் சேர்த்து இங்கிலாந்துக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்துடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் அவர்களை விரைவாக ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் வேகமாக விக்கெட் களையும் எடுக்கத் தொடங்கினர். ரஹானே (26 ரன்கள்), அஸ்வின் (7 ரன்கள்), சாஹா (2 ரன்கள்), விராட் கோலி (81 ரன்கள்) ஜடேஜா (14 ரன்கள்), உமேஷ் யாதவ் (0) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க இந்திய அணி 162 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெயந்த் யாதவும், முகமது ஷமியும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு போக்குக் காட்டினர். அதிலும் முகமது ஷமி 2 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மொயின் அலி பிரித்தார். 19 ரன்களை எடுத்த முகமது ஷமி, மொயின் அலியின் பந்துவீச்சில் பேர்ஸ்டாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 204 ரன்களுக்கு 2-வது இன்னிங்சை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, அடில் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

நிதான ஆட்டம்

வெற்றிபெற 405 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இங்கிலாந்து அணி கவனமாகவும், நிதானமாகவும் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலாஸ்டர் குக்கும், ஹமீதும் பசை போட்டு ஒட்டியதைப் போல கிரீசில் நின்று பந்துகளைத் தடுத்து ஆடினர். வெகு அபூர்வமாக ரன்களைச் சேர்த்த அவர்கள் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொள்வ திலேயே முழு கவனத்தையும் செலுத்தினர்.

நத்தை வேகத்தில் ஆடி 50 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்த இந்த ஜோடி 51-வது ஓவரில் பிரிந்தது. அஸ்வின் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஹமீத் அவுட் ஆனார். 144 பந்துகளை எதிர்கொண்ட ஹமீத் 25 ரன்களை மட்டுமே சேர்த்தபோதிலும், இங்கிலாந்தின் வீழ்ச்சியைத் தடுப்பதில் நேற்று அவரது பங்கு சிறப்பாக இருந்தது.

ஹமீத் அவுட் ஆனதை அடுத்து ரூட்டுடன் சேர்ந்து கேப்டன் குக் தடுப்பு ஆட்டத்தைத் தொடர்ந்தார். மிகப் பொறுமையாக ஆடி 188 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்த குக், நேற்றைய கடைசி ஓவரில் ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார். 4-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 318 ரன்களை எடுக்கவேண்டும். ஆனால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறுவதை விட தோல்வியைத் தவிர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற முயற்சிப்போம்

நேற்றைய ஆட்டம் குறித்து நிருபர்களிடம் கூறிய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடு, “எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்தினர். தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை விக்கெட் எடுப்பதில் இருந்து தடுத்து நிறுத்தினர். நாங்கள் இன்னும் இந்த டெஸ்ட் போட்டியை இழக்கவில்லை. இதில் வெற்றிபெற முயற்சிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x