Last Updated : 14 Oct, 2016 04:48 PM

 

Published : 14 Oct 2016 04:48 PM
Last Updated : 14 Oct 2016 04:48 PM

இந்தியா-நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய ஆதிக்கம் தொடருமா?

டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 என்று ஒயிட்வாஷ் செய்யப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணி ஒரு தனிப்பட்ட சக்தியாக விளங்குகிறது.

இரு அணிகளுக்குமிடையுமான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (16) தரம்சலாவில் தொடங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 5 போட்டிகளில் நியூஸிலாந்து அணி 4-ல் வென்றுள்ளது ஒரு போட்டி ஜடேஜாவின் அபார பேட்டிங்கினால் ‘டை’ ஆனது.

இது வரை இரு அணிகளும் தங்களுக்கிடையே 93 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 46 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி 41 போட்டிகளிலும் வென்றுள்ளன, 5 போட்டிகள் முடிவு தெரியாதது, ஒரு ஆட்டம் டை.

இந்தியாவும் நியூஸிலாந்தும் 1975 உலகக்கோப்பையில் ஒருநாள் போட்டியில் முதன் முதலாக மோதின, அப்போது 60 ஓவர்கள் கொண்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிளென் டர்னர் 114 ரன்கள் எடுத்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 230 ரன்களை எடுத்தது, அபிட் அலி அதிக பட்சமாக 70 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து 1.1 ஓவர் மீதமிருக்கையில் இலக்கை துரத்தி வெற்றி கண்டது. அடுத்த 3 போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி கண்டது.

அதன் பிறகு 1980-81-ல் பென்சன் ஹெட்ஜஸ் கோப்பை ஒருநாள் முத்தரப்பு தொடரில் ஒரு போட்டியில் ரிச்சர்ட் ஹேட்லி 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 162 ரன்களுக்குச் சுருண்டது, சந்தீப் பாட்டீல் மட்டுமே அபாரமாக ஆடி அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். 163 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி ராஜர் பின்னியின் (4/41) ஸ்விங்கிற்கு 157 ரன்களுக்கு மடிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. இதே தொடரில் இன்னொரு போட்டியிலும் நியூஸி.யை இந்தியா அணி வீழ்த்தியது, அப்போதும் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது நியூஸிலாந்து அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நியூஸிலாந்துக்கு எதிராக 3-வது வெற்றிக்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று, அது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளாகும், ஆஸ்திரேலியாவில் 7 நாடுகளுக்கிடையே நடைபெற்ற மினி உலகக்கோப்பையாகும் அது. இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் கேப்டனாக இருந்தார். இதில் முக்கியப் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து அணி 206 ரன்களுக்குச் சுருண்டது, மதன்லால் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ரவி சாஸ்திரி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள். இலக்கை விரட்டிய இந்திய அணி 43.3 ஓவர்களில் நியூஸிலாந்தை வீழ்த்தியது, வெங்சர்க்கார் தனது ராஜ கவர்டிரைவ்கள் மூலம் 63 ரன்களையும் கபில்தேவ் ரிச்சர்ட் ஹேட்லியை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்து 54 அதிரடி ரன்களையும் எடுக்க இருவரும் 105 ரன்கள் கூட்டணி அமைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பிறகு இறுதிப் போட்டியில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் அதிரடியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

கடைசியாக நியூஸிலாந்துடன் ஆடிய 5 போட்டிகளில் நியூஸிலாந்து 4-ல் வென்று ஒரு போட்டி டை ஆனது. இந்த டை ஆன போட்டி அருமையான போட்டியாகும். நியூஸிலாந்து அணி மார்டின் கப்தில் (111) கேன் வில்லியம்சன் (65) ஆகியோரின் ஆட்டத்தினால் 314 ரன்களைக் குவிக்க, இந்திய அணி தவண், ரோஹித் சர்மா மூலம் நல்ல தொடக்கம் கண்டது, ஆனால் நியூஸிலாந்து அபார பந்து வீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 18-வது ஒவரில் இந்தியா 79/4 என்று இருந்தது. ரெய்னா தோனி இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரெய்னா 31 ரன்களில் ஆட்டமிழந்தார், கேப்டன் தோனி அருமையான அரைசதம் எடுக்க ஸ்கோர் 184ஆக இருந்த போது தோனி ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா, அஸ்வின் நியூஸிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தனர். 9.1 ஓவர்களில் 85 ரன்களை இருவரும் சேர்த்தனர். அஸ்வின் 65 ரன்களில் வெளியேறினார். புவனேஷ் குமார், ஷமி விரைவில் வெளியேற ஜடேஜா வசம் ஆட்டமிருந்தது. 47.5 ஓவர்களில் இந்தியா 286/9 என்று இருந்தது. 2.1 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்திய அணி 28 ரன்கள் எடுக்க வேண்டும். ஜடேஜா மைதானம் நெடுக பந்தை விரட்டினார். ஆனால் கடைசியில் டை-தான் செய்ய முடிந்தது. ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசியாக இரு அணிகளும் ஜனவரி 31, 2014-ல் வெலிங்டனில் ஆடிய போட்டியில் நியூஸிலாந்து 303 ரன்களை குவிக்க இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இந்நிலையில் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட விறுவிறுப்பான ஒருநாள் தொடரில் சந்திக்கின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற தோல்வியை தோனியும் இந்திய அணியினரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

நியூஸிலாந்து அணியில் ஒருநாள் போட்டிகளில் மார்டின் கப்தில் தொடக்கத்தில் அதிரடி முறையில் ஆடி வருகிறார். ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், வாட்லிங், ரோங்கி என்று நியூஸி இப்போதும் வலுவாகத் திகழ்கிறது. பவுலிங்கில் டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஹென்றி, நீஷம், சாண்ட்னர், இஷ் சோதி, சவுதி உள்ளனர்.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது நியூஸிலாந்து அணிக்கு சாதகமானது. எனவே அமித் மிஸ்ரா, அக்சர் படேல் இந்திய ஸ்பின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி: தோனி (கேப்டன்), பும்ரா, கேதர் ஜாதவ், விராட் கோலி, தவல் குல்கர்னி, மந்தீப் சிங், அமித் மிஸ்ரா, மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஆண்டன் டெவ்சிச், மார்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லேதம், ஜேம்ஸ் நீஷம், லுக் ரோங்கி, சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங்.


போட்டி அட்டவணை:

அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகள்; ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும்.

முதல் போட்டி அக்.16, தரம்சலா

2-வது போட்டி அக்.20, டெல்லி

3-வது போட்டி அக்.23, மொஹாலி

4-வது போட்டி அக்.26, ராஞ்சி

5-வது போட்டி. அக்.29, விசாகப்பட்டனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x