Last Updated : 20 Dec, 2016 08:15 PM

 

Published : 20 Dec 2016 08:15 PM
Last Updated : 20 Dec 2016 08:15 PM

இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி

18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி.

மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது:

இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இழந்தது, இரண்டாவது உலகக்கோப்பை டி20., ஆனால் ஆசியக் கோப்பையை வென்றோம், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றோம், அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்றோம். மறக்க முடியாத 2016-ம் ஆண்டு எனக்கு உண்மையில் இது பெருமையாகவே உள்ளது

இத்தகைய நல்ல ஆண்டில், நல்ல சீசனில் முக்கியமாக மாறிவரும் அணியுடன் பெற்ற வெற்றிகள் உண்மையில் நாம் பெருமையடையக்கூடியதே. ஆனல் இது ஒரு அடித்தளம் மட்டுமே. இது ஒரு தொடக்கம் மட்டுமே. நாங்கள் சாதிக்க விரும்புவதை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை. அதில் ஒருதுளி கூட இது இல்லை. எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், அணி எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அவ்விடத்தை நோக்கி முன்னேற வீரர்கள் இதே மாதிரியான உழைப்பை செயல்படுத்துவர் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்த அணியை விராத்தின் டீம் இந்தியா என்று அழைக்கலாமா? என்று கேட்டதற்கு, “அதை எப்படி நான் கூற முடியும்?” என்றார்.

மேலும், அவர் கூறும்போது, “இந்தத் தொடர் ஒரு முழுநிறைவான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய தொடராக அமைந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்தினால் நெருக்கடிக்கு ஆளானது முதல் அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளை வென்றது வரை முழுநிறைவான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய தொடராக அமைந்தது. 4 முறை டாஸில் தோற்று 3 முறை டெஸ்ட் போட்டியை வென்றோம் என்பது திருப்தி அளிக்கிறது. ஒரு கேப்டனாக இது முழுநிறைவான தொடர் என்று உணர்கிறேன். பல்வேறு தருணங்களில் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர், முக்கியமாக என்னைப் பொருத்தவரை கீழ்வரிசை வீரர்கள் பங்களிப்பு தனித்துவமானது என்றே கூறுவேன்.

வசதிகள், உள்கட்டமைப்புகள் மேம்பட வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தொழில்பூர்வமாக மாறிவருகின்றனர். அவர்களது மனநிலை நல்லதாக உள்ளது, யார் அணிக்குள் வந்தாலும் அணி சில அளவுகோல்களை வைத்துள்ளது என்பதை அறிந்து வைத்துள்ளனர். அதாவது ஆட்டத்திறன், மனநிலை என்று அளவுகோல்கள் உள்ளன. இந்திய அணிக்குள் நுழையும் போது அந்தப் போட்டிக்கு முழு அளவில் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு ஓராண்டு கற்றுக் கொள்ளும் காலமாக இருக்க முடியாது. ஏனெனில் இதில் நிறைய நேரத்தை செலவிட நேரிடும்.

பல வீரர்கள் இந்த அழுத்தத்தை சந்திக்க முடியாது, ஆனால் தயாராக இருந்தால், தொழில்நேர்த்தியுடன் இருந்தால், கடினமாக பாடுபடவேண்டுமென்று தெரிந்திருந்தால் மட்டுமே சிறப்பாக ஆட முடியும். கருண் நாயர், ராகுல் ஆட்டத்திறன் இப்படிப்பட்டதே. அடுத்த தலைமுறை வீரர்கள் பிறரைப் பார்த்து இன்னும் சாதுரியமாக இருக்க முடியும். அதாவது இந்திய அணியில் நுழைந்து விட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம். களத்தில் இறங்கி முச்சதம் அடிப்பதைப் போன்று ஒருவர் தன்னை வேறு விதத்தில் வெளிப்படுத்திக் கொள்ள முடியாது.

சில வேளைகளில் இளம் வீரர்கள் உடனடியாக தேவையை உணர்ந்து செயல்படுவது ஆச்சரியமாகவே உள்ளது. இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர் என்பது களத்தில் இவர்கள் ஆடுவதை வைத்தே கூற முடிகிறது” இவ்வாறு கூறினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x