Published : 28 Jan 2017 04:30 PM
Last Updated : 28 Jan 2017 04:30 PM

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் செரீனா: ஸ்டெஃபி கிராப் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சை நேர் செட்களில் வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.

இது செரீனாவின் 23-வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டமாகும், இதன் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வைத்திருந்த ஸ்டெபி கிராபின் 22 பட்டங்கள் சாதனையை முறியடித்தார் செரீனா வில்லியம்ஸ். மேலும் முதலிடத்தையும் பிடித்தார் செரீனா.

இன்று, சற்று முன் முடிந்த இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சகோதரை வீனசை வீழ்த்தினார். ஆனால் இந்த ஸ்கோர் காட்டும் அளவுக்கு செரீனாவுக்கு சுலபமாக அமையவில்லை, வீனஸ் வில்லியம்ஸ் கடைசி வரை கடுமையாக போராடினார், தனது தவறுகளினாலேயே இழந்தார்.

முதல் செட் முதல் சர்வை வீனஸ் தொடங்க இரண்டு பேக்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க செரீனா 30-0 என்று முன்னிலை பெற்று பிறகு ஒரு சக்தி வாய்ந்த பேக்ஹேண்ட் ஷாட் மூலம் வீனஸின் முதல் சர்வை பிரேக் செய்து செரீனா 1-0 என்று முன்னிலை பெற்றார்.

முதல் செட் 2-வது சர்வில் செரீனா, வீனஸின் உடலை நோக்கிய சர்வ்களை அடித்து 30-15 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு செரீனா தனது சர்வில் ஒரு டபுள் பால்ட் மற்றும் பேக் ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க வீனஸ் வில்லியம்ஸ் பிரேக் செய்தார், இதனையடுத்து ஆட்டம் பரபரப்பு தொடக்கம் கண்டு 1-1 என்று இருந்தது.

ஆனால் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ் சர்வை செரீனா அருமையாக ஆடி பிரேக் செய்தார், வீனஸின் சர்வ் கைகொடுக்காததால் செரீனா அவரது சர்வை எடுத்து அருமையான ரேலிகளை இருவரும் ஆடினர். கடைசியில் ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்று வலுவானதாக அமைய வீனஸ் மீண்டும் சர்வை இழந்தார். செரீனா 2-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் செரீனா வில்லியம்ஸ் தனது சர்வில் மீண்டும் டபுள் பால்ட் செய்ய மீண்டும் வீனஸ் பிரேக் செய்து பதிலடி கொடுக்க செட் 2-2 என்று இருந்தது.

4 சர்வ்கேம்களும் பரஸ்பர சர்வ் முறியடிப்புகளில் சென்று கொண்டிருந்தது. அடுத்த சர்வ் கேமில் வீனஸ் 30-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு செரீனா ஒரு போர்ஹேண்ட் ஷாட், ஒரு பேக்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க தன் சர்வை முதல் தடவையாக இந்த செட்டில் வென்றார் வீனஸ், இப்போது வீனஸ் சார்பாக ஆட்டம் 3-2 என்று இருந்தது.

அடுத்த சர்வை செரீனா தொடங்கவும் வீனஸ் வில்லியம்ஸ் ஒரு அருமையான போர்ஹேண்ட் ஷாட்டை அடிக்க செரீனா 0-15 என்று பின் தங்கினார். மீண்டும் ஒரு தவறை செரீனா இழைத்தார், ஆனால் ஏஸ் சர்வ் அடித்து 30-30 என்று சமன் செய்தார் செரீனா. இந்த சர்வை செரீனா தக்க வைக்க 3-3 என்று முதல் செட் நெருக்கமாக சென்றது. இப்போதுதான் திருப்பு முனை ஏற்பட்டது, வீனஸ் வில்லியம்ஸ் தன் சர்வில் ஒரு ஏஸ் போட்டதோடு டபுள் பால்ட் செய்தார். பிறகு செரீனா வலையருகே வந்து ஒரு அருமையான வாலி செய்ய வீனஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை, மீண்டும் பிரேக் பாயிண்ட். இப்போது வீனஸ் ஷாட்டை திருப்பி அருமையாக பேக் ஹேண்ட் ஷாட்டை செரீனா அடிக்க பிரேக் செய்யப்பட்டது, ஆட்டம் செரீனா சார்பாக 4-3 என்று ஆனது.

அடுத்த சர்வில் செரீனா பின் தங்கிய நிலையிலிருந்து அருமையான ஆட்டத்தின் மூலம் 3 கேம்களை வென்று 5-3 என்று முன்னிலை வகித்தார். ஆனால் வீனஸ் தன் சர்வை படாதபாடு பட்டு வசப்படுத்த 5-4 என்று ஆட்டம் இன்னமும் செரீனா பக்கமே இருந்தது. செட்டைக் கைப்பற்றுவதற்கான சர்வை செரீனா வீச, ஒரு போர்ஹேண்ட் ஷாட், இரண்டு ஏஸ்கள் என்று முதல் செட்டை செரீனா 6-4 என்று கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் முதல் சர்வை வீனஸ் வீச போராடியே தனது சர்வை தக்கவைத்தார் அவர். ஆனால் 2-வது சர்வ் கேமில் செரீனா தனது சர்வ்களை கண்டுபிடித்துக் கொண்டு ஏஸ்களை அடித்து வென்றார். ஆட்டம் 1-1. மீண்டும் வீனஸ் சர்வ் செய்ய 3 பிரேக் பாயிண்ட்களை வீனஸ் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு வீனஸ் அருமையான ஃபோர்ஹேண்ட் ஷாட்டை ஆடி செட் 2-1 என்று ஆனது. அடுத்த செரீனா சர்வில் டபுள் பால்ட் செய்ய வீனஸுக்கு பிரேக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வலையில் ஷாட்டை அடித்து கோட்டை விட்டார் வீனஸ். ஆட்டம் 2-2. அடுத்து தனது சர்வை வீனஸ் சவுகரியமாகவே வெல்ல ஆட்டம் 2-3 என்று இருந்தது

செரீனா தனது சர்வை வென்றார், ஆனால் அவர் நினைத்த அளவுக்கு அது சவுகரியமாக அமையவில்லை. வீனஸ் சில அலட்சியமான ஷாட்களை ஆடி பிரேக் வாய்ப்பை கோட்டை விட்டார். இதனால் ஆட்டம் 3-3 என்று சமனிலை எய்தியது. அடுத்ததாக வீனஸ் சர்வை செரீனா வென்று பிரேக் செய்தார். பிறகு தன் சர்வை செரீனா தக்கவைத்தார், இந்த சர்விலும் வீனஸ் ஷாட் சரியாக அமையவில்லை, நெட்டில் பட்டது. இதனையடுத்து 5-3 என்று செரீனா முன்னிலை பெற்றார். அதற்கு அடுத்த தனது சர்வை வீனஸ் வீசி அருமையாக போராடி 40-15 என்று முன்னிலை பெற்று தனது சர்வை தக்கவைத்தார்.

5-4 என்ற முன்னிலையில் சாம்பியன்ஷிப்புக்கான சர்வை செரீனா வீச முதல் சர்வையே வீனஸ் அருமையான பேக் ஹேண்ட் ஷாட் ஆடி 15-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் செரீனா விடுவாரா? அவரும் ஒரு பேக்ஹேண்ட் ஷாட்டில் 15-15 என்று சமன் செய்தார். அடுத்ததாக செரீனா சர்வை எடுத்த வீனஸ், செரீனாவை தனது அபாரமான ஷாட்கள் மூலம் கோர்ட்டில் வலது மூலைக்கும் இடது மூலைக்கும் அலைக்கழித்தார். இது செரீனாவின் போர்ஹேண்ட் ஷாட் தவறில் முடிய 30-15 என்று வீனஸ் தனது விடாப்பிடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்நிலையில் வீனஸ் இரண்டு தவறுகளை இழைத்தார். இதனையடுத்து செரீனா இரண்டாவது செட்டையும் 6-4 என்று கைப்பற்றி 23-வது சாம்பியன் பட்டம் வென்றார்.

செரீனா வில்லியம்சின் 7-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டமாகும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x