Published : 20 Jan 2016 10:45 AM
Last Updated : 20 Jan 2016 10:45 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் நடால் - மகளிர் பிரிவில் சிமோனா, வீனஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹல்ப், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து வெளியேறினர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெர்போர்னில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் சகநாட்டை சேர்ந்த பெர்ணான்டோ வெர்டஸ்கோவை எதிர்த்து ஆடினார்.

நடால் தோல்வி

ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் செட்டை 7-6 என வெர்டஸ்கோ கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என நடால் தனதாக்கினர். மூன்றாவது செட்டை நடால் எளிதாக கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெர்டஸ்கோ கடும் நெருக்கடி கொடுத்து அந்த செட்டை 7-6 என வென்றார்.

இருவரும் தலா இரு செட்கள் வென்றதால் ஆட்டம் 5வது செட்டுக்கு சென்றது. இந்த செட்டில் நடாலால் தகுந்த பதிலடி கொடுக்க முடியவில்லை. வெற்றியை தீர்மானித்த இந்த கடைசி செட்டை 2-6 என நடால் இழந்தார்.

முடிவில் வெர்டஸ்கோ 7-6(6), 4-6, 3-6, 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் நடாலை தோற்கடித்தார். நடாலின் போர்ஹேண்டை குறிவைத்து வெர்டஸ்கோ ஆடியதால் அவரால் வெற்றி பெற முடிந்தது. 45வது இடத்தில் உள்ள வெர்டஸ்கோவிடம் நடால் வீழ்ந்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை பங்கேற்றுள்ள நடால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.

ஆன்டி முர்ரே வெற்றி

தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் 83வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸிவிரெவை 6-1, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பீட்டர் கோஜோவ்ஸியை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் லைடன் ஹூவிட்7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டை சேர்ந்த ஜேம்ஸ் டக்வொர்த்தை தோற்கடித்தார். 4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ரஷ்யாவின் டிமிட்ரி டர்ஸ்னவை முதல் சுற்றில் சந்தித்தார். இதில் வாவ்ரிங்கா 7-6(2), 6-3 என முன்னிலை வகித்த போது டிமிட்ரி காயம் காரணமாக விலகினார். இதனால் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றில் நுழைந்தார்.

சிமோனா ஹல்ப் வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹெல்ப் 4-6,3-6 என்ற நேர் செட்டில் சீனாவின் ஸூவாய் ஜங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 133வது இடத்தில் உள்ள 26 வயதான ஸூவாய் ஜங் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி தொடர்பாக ஸூவாய் ஜங் கூறும்போது, 2ம் நிலை வீராங்கனையை தோற்கடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தை எனது வாழ்க்கையில் மறக்க முடியாது என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 23 வயதான இங்கிலாந்தின் ஜோஹன்னாவிடம் தோல்வி கண்டார்.

சுமார் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள வீனஸ், அறிமுக வீராங்கனையும் தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள ஜோஹன்னாவிடம் சரண்டராகி தொடரில் இருந்து வெளியேறினார்.

2வது சுற்றில் முகுருஸா

தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள கார்பைன் முகுருஸா 6-0, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக 85வது இடத்தில் உள்ள எஸ்டோனியாவின் அநெட்ஹோன்டவேயிட்டை வீழ்த்தி 2வது முற்றுக்கு முன்னேறினார். செர்பியாவின் முன்னணி வீராங்கனையான அனா இவானோவிக் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் தம்மி பேட்டர்ஸனை வென்றார்.

மற்றொரு செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜன்கோவிக் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஸ்லோவேனியாவின் போலோனா ஹார்கை வீழ்த்தினார். தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் ஹெர்பர் 6-7, 7-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி ஜப்பானின் மிஸாகியை தோற்கடித்து 2வது சுற்றில் நுழைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x