Last Updated : 27 May, 2015 04:12 PM

 

Published : 27 May 2015 04:12 PM
Last Updated : 27 May 2015 04:12 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படாதது ஏன்?- சந்தர்பாலுக்கு கிளைவ் லாய்ட் கடிதம்

மேற்கிந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் சந்தர்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மே.இ.தீவுகள் விளையாடும் கிரிக்கெட் தொடருக்கு சந்தர்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணங்களை விளக்கி சந்தர்பாலுக்கு தலைமை தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாய்ட் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சந்தர்பாலின் கடைசி 6 டெஸ்ட் போட்டிகள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது என்றும் அதில் சந்தர்பால் சோபிக்கவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“பயிற்சியாளர் சிம்மன்ஸ், மற்றும் தேர்வுக்குழுவினர் உங்களது கடைசி 6 டெஸ்ட் போட்டிகளை பரிசீலனை செய்தனர். தென் ஆப்பிரிக்கா, மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் நீங்கள் விளையாடியுள்ளீர்கள். இதில் 183 ரன்களை மட்டுமே எடுத்துள்ளீர்கள். உங்கள் சராசரி 16.64 என்பது குறிப்பிடத்தக்கது.” என்று எழுதியுள்ளார்.

11,867 டெஸ்ட் ரன்களை 30 சதங்களுடன் 51 என்ற சராசரியில் எடுத்துள்ளார் சந்தர்பால்.

ஆனால், லாய்ட் தனது கடிதத்தில், “எதிர்கால நன்மையைக் கருதி இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய முடிவெடுத்தோம். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உங்களை தேர்வு செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணி கரீபிய மண்ணில் கிரிக்கெட் தொடர் ஆடிய போது சந்தர்பால் அந்தத் தொடரில் 48 ரன்கள் சராசரி விகிதத்தில் ரன்கள் எடுத்தார். பிறகு வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 270 ரன்கள் எடுத்தார், இதில் அவுட் ஆகவேயில்லை.

லாய்ட், சந்தர்பாலை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் சந்தர்பாலை பிடிக்க முடியவில்லை, “என்னுடைய அழைப்புக்கு நீங்கள் பதில் அழைப்பு விடுக்கவில்லை, நான் இந்த முடிவுக்கு முன்பாக உங்களுடன் கலந்தாலோசிக்க விரும்பினேன், ஆனால் முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பலத்தின் உச்சம் நீங்கள். நீங்கள் உங்கள் பங்களிப்புக்காக எப்போதும் நினைவு கொள்ளப்படுவீர்கள்” என்று லாய்ட் கூறியதோடு சந்தர்பாலை ‘கிரேட் கிரிக்கெட்டர்’என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் அதலபாதாளத்தில் தத்தளித்த காலங்களில் சந்தர்பாலின் பல இன்னிங்ஸ்கள் அந்த அணியின் மானத்தைக் காப்பாற்றியதை ஒருவரும் மறக்கலாகாது. ஆனால் சந்தர்பாலுக்கும் வயது 40 ஆகிவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x