Published : 16 Dec 2016 05:11 PM
Last Updated : 16 Dec 2016 05:11 PM

ஆஸி. வேகப்பந்தில் 8 விக்கெட்டுகளை 97 ரன்களுக்குப் பறிகொடுத்து பாக். திணறல்

பிரிஸ்பனில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று பாகிஸ்தான் அணி தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானின் வழக்கமான எளிதான கேட்ச்களை விடுவது, எதிரணியினரின் பின்கள வீரர்களை ரன் எடுக்க அனுமதிப்பது, பேட்டிங்கில் கொத்தாக விக்கெட்டுகளை விடுவது ஆகியவை தொடர்ந்தபடியே உள்ளன. யூனிஸ் கானின் ஸ்கோர் இப்படியாக இருக்கிறது: 0, 2, 1, 2, 11, 0, எனவே இவையெல்லாம் மாறாத வகையில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா போல் ஆஸ்திரேலியாவில் சாதிப்பது கடினம், வஹாப் ரியாஸ் வேகம்தான் ஏதோ கிரிக்கெட் உயிர் மூச்சு என்பது போல் பேசினார், ஆனால் முதல் நாளில் ஆஸ்திரேலியா 288/3 என்று வலுவாக இருந்த போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்றுதான் இங்கு என்ன லெந்தில் வீசுவது என்பதை வஹாப் புரிந்து கொண்டார். ஆமீரும், இவரும் அருமையான சில ஓவர்களை இன்று ஆஸ்திரேலிய நடுவரிசை வீரர்களுக்கு வீசினர், பந்தில் வேகம், ஸ்விங் இரண்டும் இருந்ததால் அடிக்கடி பந்து மட்டையின் விளிம்பைத்தட்டிச் சென்றது. பிரிஸ்பன் பிட்சும் முதல்நாளை விட இன்று வேகம் அதிகமாக இருந்தது, இதனையடுத்து தங்களது கடைசி 7 விக்கெட்டுகளை 106 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியில் நேற்று அதிர்ஷ்டத்துடன் அபாரமாக ஆடி கேப்டன் ஸ்மித் 110 ரன்களை எடுத்து இன்று களமிறங்கி 130 ரன்களில் வஹாப் ரியாஸின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்மித்திற்கு நேற்று ஒரு கேட்ச் விடப்பட்டதோடு, ஸ்மித் எட்ஜ் செய்து கேட்சும் பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் அப்பீல் செய்யவேயில்லை. மொகமது ஆமிரும் அப்பீல் செய்யவில்லை. இந்த அதிர்ஷ்டங்களுடன் அவர் மேலும் தொடர்ந்து ஆடி 130 ரன்களில் மோசமான ஷாட் தேர்வில் வெளியேறினார். ‘ஆட்டத்தின் போக்கை விரைவில் மாற்றுவார்’ என்று விதந்தோதப்பட்ட மேடிசன் 1 ரன்னில் வஹாப் ரியாஸிடம் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை மொகமது ஆமிர் வீழ்த்தினார். சமீபத்தில் அறிமுகமான மற்றொரு வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப் அருமையாக ஆடி 10 பவுண்டரிகள், யாசிர் ஷாவை ஒரு சக்தி வாய்ந்த சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸ் ரவுண்ட் த விக்கெட்டில் விசி உள்ளே வந்த பந்தை தேர்ட்மேன் திசையில் ஆட நினைத்து உள்ளே வாங்கி விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

கடைசி விக்கெட்டுகளை அரைபந்திலேயே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இருந்த போது வீழ்த்திவிடுவார்கள், ஆனால் இன்று நேதன் லயன் 24 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும், ஜேக்சன் பேர்ட் 19 ரன்களையும் எடுத்து கடைசி விக்கெட்டுக்காக 49 ரன்களைச் சேர்க்க அனுமதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா 130 ஓவர்களில் 429 ரன்களை எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில் ஆமிர் 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வஹாப் ரியாஸ் 89 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். யாசிர் ஷா 43.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்றாலும் இவரது பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் திருப்திகரமாக ஆடவில்லை. நிச்சயம் இன்னும் உதவிகரமான பிட்சில் 4-5ம் நாள் ஆட்டத்தில் (அதுவரை பாகிஸ்தான் பேட்டிங் கொண்டு சென்றால்) இவரது பந்து வீச்சு ஆஸி.க்கு அச்சுறுத்தலே.

பாக்.விக்கெட்டுகள் மளமள சரிவு:

தங்களது பேட்டிங்கைத் தொடர இறங்கிய பாகிஸ்தான், நல்ல பிட்சில் பிரிஸ்பன் விளக்கொளியில் பந்துகள் வேகம், ஸ்விங், எழுச்சி என்று தன் வேலையைக் காட்ட மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

முதலில் அசார் அலி 5 ரன்களில் ஸ்டார்க் ஒரு பந்தை தனது இடது கை வீச்சாளர்களுக்குரிய கோணத்தில் வீசி எழுப்ப காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் வைத்து பந்தை இடிக்க கவாஜாவிடம் கேட்ச் ஆனது. பாபர் ஆசம், சமி அஸ்லம் இணைந்து போராடி 37 ரன்களை 2-வத் விக்கெட்டுக்காகச் சேர்த்த நிலையில் ஹேசில்வுட்டின் ஆடத்தேவையில்லாத பந்தை ஆடி 19 ரன்களில் பாபர் ஆஸம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். இதே ஓவரின் அடுத்த பந்தில் அனுபவசாலியான யூனிஸ் கான், ஹேசில்வுட் பந்து ஒன்று உள்ளே வந்து லேசாக வெளியே எடுக்க எட்ஜ் ஆகி வெளியேறினார். மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக் ஆகியோரும் முறையே ஜேக்சன் பேர்ட் மற்றும் ஸ்டார்க்கிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற 5 பேட்ஸ்மென்கள் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 48 ரன்களில் வெளியேறினர்.

சமி அஸ்லம் ஒரு முனையில் போராடி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷாட்டை சரியாக ஆடாமல் பேர்ட் பந்தில் லெக் திசையில் வேடிடம் கேட்ச் கொடுத்தார். வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஹேசில்வுட் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யாசிர் ஷாவுக்கு ஸ்டார்க் ஒரு ஏத்து ஏத்தினார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் 66/8 என்று சரிவு கண்ட நிலையில், விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது (31 நாட் அவுட்), மொகமது ஆமிர் (8 நாட் அவுட்) மேலும் சேதமில்லாமல் 97/8 என்ற நிலையில் ஆட்டம் முடிந்தாலும் பாகிஸ்தான் 332 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ ஆன் தவிர்ப்பது கடினமே என்று தெரிகிறது.

ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஜேக்சன் பேர்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x