Published : 23 Feb 2017 12:29 PM
Last Updated : 23 Feb 2017 12:29 PM

ஆஸி. உறுதியான தொடக்கம்: இடைவேளை வரை விறுவிறுப்பான ஆட்டம்

புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், அந்த அணியின் தொடக்க வீரர் அருமையாக ஆடிவந்த நிலையில், உடல் நலக்கோளாறு (வயிற்று உபாதை என்று கூறப்படுகிறது) காரணமாக ரிட்டையர்டு ஆக வேண்டியிருந்தது.

டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இசாந்த் சர்மாவும், அஸ்வினும் தொடக்கத்தில் பந்து வீசினர். வார்னருக்கு எதிராக அஸ்வின் இதுவரை சிறப்பாக வீசி அவரை வீழ்த்தியிருப்பதால் அதைப் பயன்படுத்த கோலி முடிவெடுத்திருக்கலாம்.

9-வது ஓவரிலிருந்தே பந்துகள் கடுமையாக திரும்பின. ஆட்டத்தின் 10-வது ஓவரை அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீச தொடர்ச்சியாக 3 முறை வார்னர் மட்டையை நூலிழையில் கடந்து சென்றது பந்து. ஆனால் எட்ஜ் ஆகவில்லை.

ஒரு முறை ரென்ஷாவுக்கு எட்ஜ் ஆனதாக அஸ்வின் பந்தில் மிகப்பெரிய முறையீடு எழுந்தது. கோலி ரிவியூ செய்தார் ஆனால் அது விரயமானது. கோலி வெறுப்பானார். தொடக்கத்திலேயே 2 அனுமதிக்கப்பட்ட ரிவியூக்களில் ஒன்றை விரயம் செய்ததை அவர் விரும்பவில்லை என்பது அவரது உடல்மொழியில் வெளிப்பட்டது. ஏனெனில் அவ்வளவு அருகில் இருக்கும் சஹா தன்னம்பிக்கையுடன் அப்பீல் செய்தது ரிவியூவுக்கு வழி வகுத்தது.

மற்றபடி ஜெயந்த் யாதவ் பந்துகளும் திரும்பின, வார்னர் அவரை 4 பவுண்டரிகள் அடித்தார், அத்தனையும் அடிக்க வேண்டிய பந்துகள் என்பதில் ஐயமில்லை.

ஒருமுறை ஜெயந்த் யாதவ் பந்தில் வார்னர் பவுல்டு ஆனார். லெக் ஸ்டம்பைக் காட்டிக் கொண்டு அவர் ஷாட் ஆட முயன்று பவுல்டு ஆனார், ஆனால் அது நோ-பால் என்பதோடு பவுண்டரிக்கும் சென்றது. ஒரே பந்தில் நோ-பால், பை, பவுல்டு, 4 ரன்கள் என்று அனைத்தும் நிகழ்ந்தது.

மேத்யூ ரென்ஷா தனது உயரத்தைக் கொண்டு கால்களை நன்றாகப் பயன்படுத்தி ஸ்பின்னர்களை அருமையாக ஆடினார். ஜடேஜாவை மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை லாங் ஆனில் அடித்தார். அவர் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து உடல்நலக்குறைவினால் பெவிலியன் சென்றுள்ளார்.

வார்னர் பெரும்பாலும் அஸ்வினைத் தடவினார், அவரை ஆதிக்கம் செலுத்த நினைத்தபோதெல்லாம் பீட்டன் ஆனார். ஒருமுறை எல்.பி.க்கு கடுமையான முறையீடு எழுந்தது, ஆனால் அது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்பதால் களநடுவர் தீர்ப்பு நாட் அவுட்.

ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் ஒரு வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளரை முதன் முதலாக பந்து வீச அழைப்பது அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும், உமேஷ் யாதவ்வை இன்று அப்படித்தான அழைத்தார் கோலி.

28-வது ஓவரில்தான் உமேஷ் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார், எதிர்பார்த்தது போல் அவர் வார்னரை பவுல்டு செய்தார். நல்ல அளவில் வீசப்பட்ட பந்திற்கு வார்னர் முன்னால் காலை நகர்த்தாமல் டிரைவ் ஆட முனைந்து பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. வார்னர் 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்திலேயே உமேஷுக்கு கொடுத்து அவர் வார்னரை வீழ்த்தியிருந்தால் அஸ்வினுக்கு பந்துகள் கன்னாபின்னாவென்று திரும்புவதற்கு 2-3 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம், உமேஷ் யாதவ்வும் வார்னரை 4-5 முறை வீழ்த்தியுள்ளார். முதல் 2 மணி நேரம் ஆஸ்திரேலியாவுக்குரியதே. காரணம் தொடக்கத்திலிருந்தே திரும்பிய பிட்சில் முதல் விக்கெட்டுக்காக 82 ரன்கள் சேர்த்தது பெரிய விஷயமாகும். மொத்தம் 33 ஓவர்களில் 16 ஓவர்களை அஸ்வின் வீசியுள்ளார். ஜடேஜா 6 ஓவர்களை வீசினார். பாதிக்குப் பாதி அஸ்வின் என்பது பாரபட்சமான அணுகுமுறையே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x