Published : 11 Jul 2015 03:45 PM
Last Updated : 11 Jul 2015 03:45 PM

ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 412 ரன்கள்

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 412 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கவுள்ளது. ஆனால் பிட்ச் சுலபம் இல்லை. அதில் பந்துகள் சீரற்ற முறையில் எழும்பியும் தாழ்ந்தும் வருகிறது. எனவே இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா என்பதுதான் இப்போதைய ஆர்வம்.

ஆஸ்திரேலியா வெற்றிகரமாக 412 ரன்கள் இலக்கை துரத்தி விட்டால் புதிய ஆஷஸ் சாதனையாக அது அமையும். 1948-இல் பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணி 404/3 என்று ஹெடிங்லேயில் வெற்றி பெற்றது.

நேற்று இங்கிலாந்துக்கு அபாரமான தினமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவை துல்லியமான பவுலிங்கினால் முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்குச் சுருட்டியது, பிறகு 207/4 என்ற நிலையிலிருந்து கடைசி 6 விக்கெட்டுகளை 82 ரன்களுக்கு இழந்தது. நேதன் லயன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விமர்சனங்களை சந்தித்த மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அலிஸ்டர் குக் ஸ்டார்க்கின் ஒரு சாதாரண அவுட் ஸ்விங்கருக்கு லயனிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். கேரி பேலன்ஸுக்கு ஒன்றும் சரியாக அங்கு அமையவில்லை. ஸ்டார்க் அவரை கொஞ்சம் கஷ்டப்படுத்தினார், அதனால் ரன்னே எடுக்க முடியாமல் 0-வில் ஜோஷ் ஹேசில்வுட் பந்து ஒன்று எகிற விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவுட் ஆஃப் பார்ம் இயன் பெல் இறங்கியது முதல் பாசிட்டிவ்வாக ஆடத் தொடங்கினார். மிட்செல் ஸ்டார்க்கை 2 அபார பவுண்டரிகள் மூலம் தனது நோக்கத்தை தெரிவித்தார். 60 ரன்களில் 11 அழகான பவுண்டரிகளை அடித்து மிட்செல் ஜான்சன் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். தொடக்க வீரர் ஆடம் லித், நேதன் லயனை ஒரு சிக்ஸ் அடித்து நானும் இருக்கிறேன் என்று அறிவித்துக் கொண்டதனால் வந்த வினை, நேதன் லயன் ஒரு அபார பந்தில் அவரை கிளார்க்கிடம் கேட்ச் கொடுக்க வைத்தார்.

207/4 என்ற நிலையில் இங்கிலாந்து சரிவு தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் சத நாயகன் ஜோ ரூட் 60 ரன்கல் எடுத்து ஹேசில்வுட்டின் அபார இன்ஸ்விங்கரில் ஸ்டம்ப்களை இழந்தார். 9 ஓவர்களில் 38 ரன்களுகு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. பட்லர் 7 ரன்களுக்கு லயனிடம் வீழ்ந்தார். மொயீன் அலியும் 15 ரன்னில் ஜான்சன் பந்தில் அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் கட்டுப்பாட்டுடன் ஆடி 42 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். பிராட் 4 ரன்னில் லயன் பந்தில் வெளியேறினார். ஆனால் கடைசியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் விளாச இங்கிலாந்து 289 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முன்னிலையும் 411 ரன்கள் ஆனது.

ஜான்சன், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லயன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x