Published : 30 Aug 2014 06:53 PM
Last Updated : 30 Aug 2014 06:53 PM

அஸ்வின், தோனி அபாரம்: 227 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தோனியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடக்க விக்கெட்டுக்காக குக் மற்றும் ஹேல்ஸ் 18 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்ததோடு இங்கிலாந்தின் மகிழ்ச்சி முடிவுற்றது. அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்பின்னர்கள் தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். மீண்டும் இங்கிலாந்து இந்தியச் சுழலில் சிக்கியது.

முதல் 4 விக்கெட்டுகளுமே தோனியின் உதவியுடன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரெட்வெல் கடைசியில் 30 ரன்கள் எடுக்க கடைசி 5 ஓவர்களில் தேவையில்லாமல் இந்தியா 45 ரன்களை விட்டுக் கொடுத்தது. முதலில் அலெக்ஸ் ஹேல்ஸ் 42 ரன்கள் எடுத்து ரெய்னாவின் பந்தை ஸ்வீப் செய்து தோனியிடம் எளிதான கேட்சில் சிக்கினார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அலிஸ்டர் குக் 44 ரன்கள் எடுத்து ராயுடு பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று லெக் திசைப் பந்தில் பீட்டன் ஆக தோனி ஸ்டம்ப்டு செய்தார். ஆனால் அது மட்டையின் விளிம்பில் பட்டுச் சென்றதால் உண்மையில் கேட்ச்தான். ஆனால் ஸ்டம்ப்டு என்றே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட்டிற்கு ஜடேஜா அபாரமான பந்தை வீசினார். முன்னால் வந்து தடுத்தாடிய ஜோ ரூட்டின் மட்டையைக் கடந்து பந்து செல்ல தோனி ஸ்டம்ப்டு செய்தார்.

அபாய வீரர் மோர்கன் 10 ரன்கள் எடுத்து அஸ்வினின் திரும்பிய, எழும்பிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். முதல் 4 விக்கெட்டுகளிலும் தோனியின் உதவியால் கைப்பற்றப்பட்டது.

இயன் பெல் பவுண்டரி அடிக்காமல் 28 ரன்கள் எடுத்து. மோகித் சர்மாவின் அபாரமான த்ரோவில் ஸ்டம்பில் பந்து நேரடியாகப் பட ரன் அவுட் ஆனார். வைட் லாங் ஆஃபிலிருந்து நேராக ஸ்டம்பில் அடித்தார் மோகித் சர்மா.

ஸ்டோக்ஸின் துயரம் தொடர்கிறது. 2 ரன்கள் எடுத்து அவர் அஸ்வின் பந்தை எட்ஜ் செய்ய முதல் ஸ்லிப்பில் ரெய்னா வலது புறம் டைவ் அடித்து அபாரமான கேட்சைப் பிடித்தார்.

கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் எடுத்து மொகமது ஷமியின் ஷாட் பந்தை புல் செய்து மோகித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 182/7 என்று ஆனது.

கிறிஸ் பட்லர் தன் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவரை எழும்ப விடவில்லை இந்தியப் பந்து வீச்சும் பீல்டிங்கும். கடைசியில் டிரெட்வெல் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 227 ரன்களை எட்டியது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், குமார், ஷமி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இந்தப் பிட்ச் ரன்கள் குவிக்கும் பிட்ச், அதனால் இந்தியா 228 ரன்களை எளிதில் எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x