Published : 10 Oct 2016 04:41 PM
Last Updated : 10 Oct 2016 04:41 PM

அஸ்வினின் அபாரப் பந்து வீச்சில் 299 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து; இந்தியா மீண்டும் பேட்டிங்

இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 557 ரன்களுக்கு எதிராக நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 3-ம் நாளான இன்று 299 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின் 6 விக்கெடுகளைச் சாய்த்தார்.

இந்தியா தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. கம்பீர் காயமடைந்து பெவிலியன் செல்ல புஜாராவும், விஜய்யும் களத்தில் உள்ளனர்.

258 ரன்களை முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா நியூஸிலாந்துக்கு பாலோ ஆன் கொடுக்கவில்லை. அஸ்வின், ஜேம்ஸ் நீஷம் (71) விக்கெட்டை எல்.பியில் வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 20-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார்.

28/0 என்று தொடங்கிய நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில், டாம் லேதம் அபாரமாக ஆடினர், டாம் லேதம் 104 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுத்து அஸ்வின் வீசிய அபாரமான மிக மெதுவான பந்துக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மட்டையின் முன் விளிம்பில் பட்டு அஸ்வினிடம் எளிதான கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்காக கப்தில், லேதம் இணைந்து 118 ரன்களைச் சேர்த்தனர். மார்டின் கப்தில் 86 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக ஷமி, உமேஷ் யாதவ் நல்ல முறையில் வீசினர், ஆனால் ஜடேஜா பிளாட்டாக வீசினார், பந்தை ஏனோ அவர் தூக்கி வீசவில்லை, அஸ்வினையும் டாம் லேதம், கப்தில் நன்றாக கணித்து ஆடினர், அவ்வப்போது பீட்டன் ஆனாலும் மொத்தமாக நன்றாக எதிர்கொண்டனர்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் கொஞ்சம் விரிசலுற்றதும், பந்தும் கொஞ்சம் தேய திரும்பலானது. இதனால் 118/1 இலிருந்து 148/5 என்று ஆனது நியூஸிலாந்து. கேன் வில்லியம்சன் அஸ்வின் பந்தை படுக்கை வச மட்டையினால் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார், அவர் நேர் மட்டையில் ஆடியிருந்தால் ஒருவேளை தப்பியிருக்கலாம், கேன் வில்லியம்சன் 8 ரன்களில் ஆட்டமிழக்க அஸ்வின் அவரை 3-வது முறையாக வீழ்த்தினார். ராஸ் டெய்லருக்கு அருமையான ஒரு பந்தை வீசினார், பந்து திரும்பும் என்று நினைத்தார் ராஸ் டெய்லர், ஆனால் அவரது மட்டைவந்த விதம் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்ள போதுமானதல்ல, பந்து சற்றே நின்று நேராக வந்தது முன்னாலும் வராமல் பின்னாலும் செல்லாமல் மோசமாக ஆடி டெய்லர் ரஹானேயிடம் கேட்ச் ஆனார். ரன் இல்லை.

அதற்கு அடுத்தபடியாக 144 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில், ரோங்கி பேட்டிங் முனையில் இருந்து அடித்த அருமையான நேர் டிரைவை அஸ்வின் தடுக்கும் முயற்சியில் விரலில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது, கப்தில் கிரீசை விட்டு நகர்ந்திருந்தார் இதனால் ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். இதுவும் அஸ்வினின் ஒரு முயற்சியினால் உருவான அவுட்டே. துரதிர்ஷ்டவசமாக மார்டின் கப்தில் நல்ல இன்னிங்ஸிற்குப் பிறகு வெளியேறினார்.

அடுத்ததாக இந்தத் தொடரில் அருமையாக ஆடி வந்த லுக் ரோங்கி ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் எட்ஜ் எடுக்க ரஹானேயின் அபார கேட்சிற்கு வெளியேறினார். 148/5 என்று சரிவு கண்டது நியூஸிலாந்து.

ஜேம்ஸ் நீஷமும், வாட்லிங்கும் இணைந்து ஸ்கோரை 201 ரன்களுக்கு உயர்த்தினர். வாட்லிங் 23 ரன்களில் ஜடேஜாவிடம் ரஹானே கேட்சிற்கு வீழ்ந்தார்.

பிறகு சாண்ட்னர், நீஷம் ஜோடி 7வது விக்கெட்டுக்காக மேலும் 52 ரன்களைச் சேர்த்தனர், சாண்ட்னர் அருமையான 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் கோலி கேட்சிற்கு வீழ்ந்தார், இந்த இடத்தில் கோலியின் கேப்டன்சி பாராட்டுக்குரியது. ஜேம்ஸ் நீஷம் இந்தத் தொடரில் அதிகம் ஆடவில்லையென்றாலும் அருமையாக விளையாடி 115 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து அஸ்வினின் சாதுரியப் பந்துக்கு எல்.பி.ஆனார். அதன் பிறகு படேல் 3 பவுண்டரிகளையும் ஹென்றி 2 பவுண்டரி 1 சிக்சரையும் அடித்தனர். இந்நிலையில் ஜீதன் படேல் 18 ரன்கள் எடுத்த நிலையில் கப்தில் போலவே அஸ்வின் கையில் பந்து பட்டு ஸ்டம்பைத் தாக்க ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். ஹென்றி கவர் டிரைவ் ஆடும் முயற்சியில் தோல்வியடைய பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு அஸ்வினிடம் கேட்சாக வந்தது கேட்சை விட்டார் ஆனால் பந்து ரன்னர் முனை ஸ்டம்ப்பில் பட படேல் ரன் அவுட் ஆனார்.

டிரெண்ட் போல்ட் வருவது வரட்டும் என்று அஸ்வினை மேலேறி வந்து ஒரு ஷாட்டை தூக்கி அடிக்க சரியாக சிக்காமல் புஜாராவிடம் கேட்ச் ஆனது. போல்ட் டக் அவுட். அஸ்வின் 6 விக்கெட்டுகள். ஹென்றி 15 நாட் அவுட்டாக இருக்க 91-வது ஓவரில் நியூஸிலாந்து 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 27.2 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அஸ்வின் 6 விக்கெட்டுகள் என்றாலும் இரண்டு ரன் அவுட்களிலும் அவரது பங்கு இருந்தது, மொத்தம் 8 விக்கெட்டுகள் சரிய அஸ்வின் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீர் காயம்:

மீண்டும் இந்தியா தன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்க ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியுடன் 6 ரன்களில் இருந்த கம்பீர், போல்ட் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பிளிக் செய்து விட்டு 2 ரன்களை ஓடினார், அப்போது டைவ் அடித்து ரீச் செய்ய வேண்டியிருந்ததால் மீண்டும் வலது தோளில் காயம் ஏற்பட்டது உடற்கூறு மருத்துவர் மைதானத்துக்கு வந்தார், கம்பீர் வலது கையை அசைக்குமாறு கூறினார், கம்பீரால் முடியவில்லை, பெவிலியன் திரும்ப புஜாரா இறங்கினார்.

விஜய் 11 ரன்களுடனும் புஜார 1 ரன்னுடனும் ஆட்ட முடிவில் களத்தில் இருக்க இந்தியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் 18 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x