Published : 20 Oct 2016 03:06 PM
Last Updated : 20 Oct 2016 03:06 PM

அவுட் ஆன 3 முறையும் டிஆர்எஸ்-சில் தப்பிய மொயின் அலி: இங்கிலாந்து அணி திணறல்

சிட்டகாங்கில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 முறை டி.ஆர்.எஸ். முறையீட்டில் தப்பிய மொயின் அலி, இங்கிலாந்தை ஓரளவுக்கு மீட்டார்.

சிட்டகாங்கில் வங்கதேசம்-இங்கிலாந்து இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சற்று முன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

வங்கதேச அணியில் 3 அறிமுக வீரர்கள்: கம்ருல் இஸ்லாம் ராபி, மெஹ்தி ஹசன் மிராஸ், சபீர் ரஹ்மான்.

இங்கிலாந்து அணியில் டக்கெட் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.

மூன்று முறை பிழைத்த மொயின் அலி:

27-வது ஓவரின் 5-வது பந்தை ஷாகிப் அல் ஹசன் ஓவர் த விக்கெட்டிலிருந்து வீச ஸ்வீப் ஆட முயன்ற மொயின் அலி கால்காப்பில் வாங்கினார், தர்மசேனா அவுட் என்று கையை உயர்த்தினார், ஆனால் மொயின் அலி ரிவியூ செய்தார். அதில் பந்து லேசாக மட்டையில் பட்டது தெரியவர நாட் அவுட் ஆனது.

29-வது ஓவரில் இதே ஷாகிப் அல் ஹசன் மீண்டும் மொயின் அலி பேடில் வாங்கினார். நடுவர் விரலை உயர்த்தினார். மொயின் மீண்டும் ரிவியூ செய்தார். இம்முறையும் ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்காது என்று தெரியவர அவுட் தீர்ப்பு திருத்தப்பட்டது.

அதே ஓவரில் மீண்டும் 4-வது பந்தில் மீண்டும் மொயின் அலி ஸ்வீப் செய்ய பெரிய முறையீடு மீண்டும் தர்மசேனா கையை உயர்த்தினார், மீண்டும் மொயின் அலி ரிவியூ செய்தார். இம்முறையும் பந்து ஸ்டம்பு லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது ரிவியூவில் தெரியவர மீண்டும் அவுட் தீர்ப்பு நாட் அவுட் என்று மாற்றப்பட்டது. 6 பந்துகளில் 3 முறை தர்மசேனா கையை உயர்த்தி மூன்று முறையும் டி.ஆர்.எஸ். மொயீன் அலியை காப்பாற்றியது.

இதை விட வங்கதேசத்திற்கு வேதனையான நகைமுரண் என்னவெனில் மொயின் அலி 1 ரன்னில் இருந்த போது மெஹெதி ஹசன் மிராஸ் பந்து கால்காப்பை தாக்க பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், இதனை வங்கதேசம் டி.ஆர்.எஸ். மேல்முறையீட்டு தீர்ப்பை கேட்டிருந்தால் அவுட் என்று தீர்ப்பாகியிருக்கும்.

இந்த தப்பித்தல்களினால் மொயின் அலி தற்போது 63 ரன்களுடன் ஆடி வருகிறார்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்ய முடிவெடுத்தது. அறிமுக வீரர் டக்கெட் 14 ரன்களில் அறிமுக ஸ்பின் பவுலர் மெஹெதி ஹசன் மிராஸிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.

கேப்டன் அலிஸ்டர் குக் 26 பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஷாகிப் அல் ஹசனின் நன்றாகத் திரும்பிய பந்து ஒன்றில் பவுல்டு ஆனார்.

பாலன்ஸ் களமிறங்கி 7 பந்துகளில் 1 ரன் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எல்.பி.ஆனார். இதுவும் ரிவியூவில் வந்த அவுட்தான்.

ஜோ ரூட் தனது வழக்கமான பாணியில் சரளமாக 49 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்டோக்ஸ் களமிறங்கி ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசனின் மீண்டும் ஒரு நல்ல திருப்பம் கண்ட பந்தில் பவுல்டு ஆனார்.

இவர் அவுட் ஆகும் போது வங்கதேசம் 106/.5 என்று திணறியது. அதன் பிறகுதான் மொயின் அலி ஒரு முறை ரிவியூ செய்யப்படாமலும் 3 முறை ரிவியூ செய்தும் தப்பித்தார், கடைசியில் 68 ரன்களில் மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இம்முறை சந்தேகமில்லை.

அறிமுக வீச்சாளர் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 19 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். மொயின் அலி, பேர்ஸ்டோ இணைந்து 88 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x