Last Updated : 04 Sep, 2015 09:55 AM

 

Published : 04 Sep 2015 09:55 AM
Last Updated : 04 Sep 2015 09:55 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா, ஜோகோவிச், நடால்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், செர் பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன் னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம் பியனுமான செரீனா வில்லியம்ஸ் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 110-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த தகுதி நிலை வீராங்கனை கிகி பெர்டென்ஸை தோற்கடித்தார். முதல் செட்டில் செய்த தவறுகளால் பின்னடைவைச் சந்தித்த செரீனா, டை பிரேக்கரில் அபாரமாக ஆடி அந்த செட்டை கைப்பற்றினார்.

33 வயதாகும் செரீனா, இந்த ஆண்டில் இதுவரை 52 ஆட் டங்களில் விளையாடி அதில் 50-ல் வெற்றி கண்டுள்ளார். கிராண்ட்ஸ் லாம் போட்டியில் தொடர்ச்சியாக 30-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த முறை அவர் சாம்பியனாகும்பட்சத்தில் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றவர் என்ற பெருமையைப் பெறுவதோடு, ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) பட்டம் வென்றவரான ஸ்டெபி கிராஃபின் சாதனையையும் சமன் செய்வார். ஓபன் எராவில் அமெரிக்க ஓபனில் அதிகமுறை (7) சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைப்பார்.

செரீனா தனது 3-வது சுற்றில் சகநாட்டவரான பெத்தானி மடேக் சேன்ட்ஸை சந்திக்கிறார். சேன்ட்ஸ் தனது 2-வது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வந்தேவேகை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர் லாந்தின் பெலின்டா பென்சிச் 5-7, 7-6 (3), 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசாக்கி டோயை வீழ்த்தினார். பென்சிச் தனது 3-வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்திக்கிறார். வீனஸ் தனது 2-வது சுற்றில் 6-3, 6-7 (2), 6-2 என்ற செட் கணக் கில் சகநாட்டவரான ஐரினா பால்கோனியை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் கனடா வின் யூஜீனி புச்சார்டு 6-3, 6-7 (2), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லாவேனியாவின் போலானா ஹெர்காக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நடால் வெற்றி

ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ரஃபேல் நடால் 7-6 (5), 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மானை வீழ்த்தினார். 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான நடால், டீகோவை வீழ்த்தியதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 750-வது வெற்றியைப் பதிவு செய்தார்.

உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாஸ் ஹைதர் மவுரெரை தோற்கடித்தார். ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனின் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆண்டில் பல்வேறு போட்டிகளில் 17 முறை இறுதிச்சுற்றுக்கு முன் னேறியுள்ளார். அதில் 14-ல் சாம்பியனாகியுள்ளார்.

சிலிச் வெற்றி

போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-2, 6-4, 6-7 (5), 7-6 (1) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர் டாஸ்கோவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் ரயோனிச் 18 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார்.

போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் சர்வதேச தர வரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் சிலிச் 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார்.

ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 7-5, 7-5, 7-6 (4) என்ற நேர் செட்களில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சை வீழ்த்தினார். காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் விளையாடாத ஃபெரர் இப்போது மீண்டும் பார்முக்கு திரும்பியிருக்கிறார்.

பயஸ், போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்-நிகோலஸ் மன்றோ ஜோடியைத் தோற்கடித்தது.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள போபண்ணா-மெர்ஜியா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் போலந்தின் மெரியூஸ் ஃபிர்ஸ்டென்பெர்க்-மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் ஜோடியை சந்திக்கிறது.

இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-7 (5), 7-6 (3), 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் தாமஸ் பெட்னரேக்-ஜெர்ஸி ஜானோவிச் ஜோடியைத் தோற்கடித்தது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 7-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் ஹாரி-சி லியூஸ் ஜோடியை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x