Last Updated : 02 Sep, 2016 09:45 AM

 

Published : 02 Sep 2016 09:45 AM
Last Updated : 02 Sep 2016 09:45 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முகுருஸா, ரயோனிக் அதிர்ச்சி தோல்வி: இந்திய ஜோடிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபனில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, 5-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோர் 2-வது சுற்றில்அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் 2-வது சுற்றில் 49-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்லி விலகியதால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ரயோனிக் தோல்வி

ஜோகோவிச் தனது 3-வது சுற்றில் அர்ஜென்டினாவின் குயிடோ பெலா அல்லது ரஷ்யாவின் மிகைல் யோஷ்னியை எதிர்கொள்ளக்கூடும். 5-ம் நிலை வீரரும் விம்பிள்டனில் இறுதி போட்டி வரை முன்னேறியவருமான கனடாவின் மிலோஸ் ரயோனிக் 7-6, 5-7, 5-7, 1-6 என்ற செட் கணக்கில் 120-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ரேயன் ஹாரிசனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஹாரிசன் 3-வது சுற்றில் நுழைவது இதுவே முதன்முறையாகும்.

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-0, 7-5, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலி யின் அன்ட்ரியாஸ் செபியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டிகளில் செபிக்கு எதிராக 9 ஆட்டங் களில் விளையாடி உள்ள நடால் 8-வது முறையாக அவரை வீழ்த்தி உள்ளார். நடால் தனது அடுத்த சுற்றில் ரஷ்யாவின் ஆந்த்ரே குஸ்நெட்சோவை சந்திக்கிறார்.

முகுருஸா வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ரோபர்ட்டா வின்சி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலேவையும், 14-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-6, 6-3 என்ற நேர் செட்டில் துருக்கியின் கேஹ்லாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

3-ம் நிலை வீராங்கனையும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 5-7, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

5 வருடங்களாக அமெரிக்க ஓபனில் வெற்றி பெறாத நிலையில் செவஸ்டோவா இந்த முறை 3-வது சுற்றில் கால்பதித்துள்ளார். 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 7-6 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் லூசிக் பரோனியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த சுற்றில் கெர்பர் 17 வயதான அமெரிக்காவின் சிசி பெலிஸை சந்திக்கிறார்.

இந்திய ஜோடிகள் அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் சாச்சியா, பிரான்சஸ் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆடவர் இரட்டைர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டென்மார்க்கின் நில்சன் பிரெட்ரிக் ஜோடி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் ஸ்டபனேக், செர்பியாவின் நினாட் ஜிம்மோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது. போபண்ணா ஜோடி 2-வது சுற்றில் அமெரிக்காவின் பிரையன் பேக்கர், நியூஸிலாந்தின் மார்க்கஸ் டேனியல் ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோ ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜடா மியி, எனா ஷிபாஹரா ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x