Last Updated : 11 Sep, 2015 09:58 AM

 

Published : 11 Sep 2015 09:58 AM
Last Updated : 11 Sep 2015 09:58 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா பலப்பரீட்சை,சைமோனா ஹேலப்புடன் மோதுகிறார் பிளேவியா பென்னட்டா

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவ ரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சகநாட்டவரும், நெருங் கிய நண்பருமான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஃபெடரர் 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார். காஸ்கட்டுடன் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபெடரர், அவருக்கு எதிராக 15-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஓபனில் 10-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரர், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் கடந்த 45 ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் வாகை சூடிய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

அரையிறுதியில் சகநாட்டவரான வாவ்ரிங்காவை சந்திக்கிறார் ஃபெடரர். இவர்கள் இருவரும் இதுவரை 19 போட்டிகளில் மோதி யுள்ளனர். அதில் ஃபெடரர் 16 வெற்றிகளையும், வாவ்ரிங்கா 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள னர். கடைசியாக இருவரும் பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் மோதினர். அதில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார். எனினும் ஃபெடருக்கு எதிராக வாவ்ரிங்கா பெற்ற வெற்றிகள் அனைத்துமே களிமண் ஆடுகளத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்ரிங்கா தனது காலிறுதியில் 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் வாவ்ரிங்கா 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 2013-ல் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார்.

அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய ரோஜர் ஃபெடரர், “அரையிறுதிக்கு முன்னதாக நல்ல தூக்கம் மிக முக்கியமானதாகும். 4-வது சுற்றில் ஜான் இஸ்னருடன் மோதிய பிறகு தாமதமாக தூங்க சென்றதால், எதிர்பார்த்த அளவுக்கு தூங்க முடியவில்லை. நன்றாகத் தூங்கினால் அது போட்டியில் சிறப் பாக ஆடுவதற்கான ஆற்றலைத் தரும். எனவே தூக்கம் மிக முக்கியமானதாகும்.

வாவ்ரிங்கா கடுமையான பயிற்சி பெற்று அரையிறுதியில் களமிறங்குவார் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்திருக்கிறார். அதுதான் அவர் சமீபகாலமாக சாதிப்பதற்கு காரணம். ஆனால் அவரிடம் போது மான நம்பிக்கையில்லை” என்றார்.

வாவ்ரிங்கா பேசுகையில், “இந்த முறை நானும், ஃபெடரரும் களம் காணும்போது பதற்றத்தோடு இருப்போம் என நினைக்கிறேன். இதற்கு முன்னர் நான் மட்டுமே பதற்றத்தோடு இருந்திருக்கிறேன். ஏனெனில் அப்போது நான் அவருக்கு இணையான வீரராக இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மோதும் போது ஃபெடரரும் பதற்றத்தோடு இருப்பதை அனைவரும் பார்த் திருக்கலாம். அதுதான் இப் போதுள்ள பெரிய வித்தியாசம்” என்றார்.

ஹேலப்-பென்னட்டா மோதல்

மகளிர் ஒற்றையர் அரையிறுதி யில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பெலாரஸின் விக்டோ ரியா அசரென்காவை தோற்கடித் தார். இதன்மூலம் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் ஹேலப்.

வெற்றி குறித்துப் பேசிய ஹேலப், “இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது என்பது எனக்கு தெரியவில்லை. இங்கு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேற விரும்பினேன். இப்போது அது நடந்துவிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்” என்றார்.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் பிளேவியா பென்னட்டா 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய பென்னட்டா, “மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி நம்ப முடியாத ஒன்று. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இவ்வளவு தூரம் நான் முன்னேறுவேன் என நினைத்ததில்லை. எனவே இந்தத் தருணத்தில் இது எனக்கு சிறப்பான ஒரு வெற்றி” என்றார்.

அரையிறுதியில் பென்னட்டா வும், ஹேலப்பும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் 4 முறை மோதியுள்ளனர். அதில் பென்னட்டா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

பென்னட்டாவுக்கு எதிரான அரை யிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய ஹேலப், “ஒவ்வொரு பந்துக்கும் நான் போராட வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஒவ்வொரு பந்தை யும் கடைசி ஒன்றாக நினைத்து ஆட வேண்டியிருக்கும். அவர் வலு வான வீராங்கனை என்பது எனக்குத் தெரியும். நானும் ஒருநாள் வலு வான வீராங்கனையாக இருப்பேன்” என்றார்.

இறுதிச்சுற்றில் பயஸ், சானியா ஜோடிகள்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீன தைபேவின் யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-சாம் கியூரி ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானி-பிளேவியா பென்னட்டா ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x