Last Updated : 03 Sep, 2015 09:48 AM

 

Published : 03 Sep 2015 09:48 AM
Last Updated : 03 Sep 2015 09:48 AM

அமெரிக்க ஓபனில் ஃபெடரர், முர்ரே, வாவ்ரிங்கா முன்னேற்றம்: காயத்தால் விலகியவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு; லூஸி சபரோவா அதிர்ச்சித் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஃபெடரர், ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் போட்டியில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அர்ஜென்டினாவின் லியானர்டோ மேயரைச் சந்தித்தார்.

இப்போட்டியில் ஃபெடரர் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். 77 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இப்போட்டியில் ஃபெடரர் 12 ஏஸ்களை விளாசினார். 29 வின்னர் ஷாட்களை அடித்ததுடன், 6 முறை மேயரின் சர்வீஸை பிரேக் செய்தார்.

2-வது சுற்றில், பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை எதிர்கொள்கிறார் ஃபெடரர். சைப்ரஸின் பாக் தாதிஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியதை அடுத்து டார்சி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முர்ரே வெற்றி

மற்றொரு போட்டியில், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸை 7-5, 6-3, 4-6, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். இதுவரை 4 முறை கிர்ஜியாஸுடன் மோதியுள்ள முர்ரே, நான்கு முறையும் வென்றுள்ளார். நடப் பாண்டில் மட்டும் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். முர்ரே 2-வது சுற்றில், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

“இப்போட்டி மிகவும் கடின மானதாக இருந்தது. நான் அதிகமாக ஓடவும், தற்காத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது” என முர்ரே தெரிவித்தார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்தி ரேலியாவின் கோக்கினாகிஸ், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்குட்டை எதிர்கொண்டார். ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கோக்கினாகிஸ், போட்டியின்போது 4-6, 6-1, 4-6, 6-3, 2-0 என்ற நிலையில் இருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். முன்னதாக, ஆட்டத்தைத் தொடர்வது அவரின் உடல்நலத்தை மேலும் மோசமாக்கும் என போட்டி நடுவர் எச்சரித்தபோதும் அவர் தொடர்ந்து விளையாடினார். இறுதியில் 5-வது செட்டின்போது போட்டியிலிருந்து விலகினார். இப்போட்டி மூன்றரை மணி நேரம் நடந்தது.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலஸுக்கு எதிரான போட்டியை 7-5, 6-4, 7-6 (8/6) என்ற செட் கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சுங் ஹேயோனைச் சந்திக்கிறார்.

10 பேர் விலகல்

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இதுவரை 10 பேர் காயம் காரணமாக போட்டியி லிருந்து பாதியிலேயே வெளியேறி யுள்ளனர். திங்கள்கிழமை வரை 6 பேர் வெளியேறியிருந்தனர். செவ்வாய்க்கிழமை கோக்கி னாகிஸ், பாக்தாதிஸ், எர்னெஸ்ட் கல்பிஸ், கஜகஸ்தானின் அலெக் ஸாண்டர் நெடோவ்யெசோவ் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். இதனால், ஆடவர் ஒற்றையரில் காயம் காரணமாக முதல் சுற்றிலேயே விலகியவர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் லேடன் ஹேவிட்டுடன் மோதிய கஜகஸ் தானின் அலெக்ஸாண்டர், 6-0, 7-6 (7/2), 1-0 என்ற செட் கணக்கில் இருந்தபோது, வலது தோள் காயம் காரணமாக விலகினார்.

ஹேவிட்டுக்கு இது கடைசி அமெரிக்கன் ஓபனாகும். இவர் தனது 2-வது சுற்றில், பெர்னார்டு டாமிக்கை எதிர்கொள்கிறார். ஜெர்மனியின் பெர்னார்டு டாமிக் முதல் சுற்றில், போஸ்னியாவின் டாமிர் ஸும்குரை 5-7, 7-6 (7/4) 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஜப்பானின் நிஷிகோரி வெளி யேறிய நிலையில், அந்நாட்டின் யோஷிஹிட்டோ, பிரான்ஸின் பால் ஹென்றி மேத்யூவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி யுள்ளார்.

சபரோவா அதிர்ச்சித் தோல்வி

மகளிர் ஒற்றையரில், செகோஸ் லோவோகியாவின் லூஸி சபரோவா முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளி யேறினார். போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சபரோவா, உக்ரைனின் லெஸியா சுரென்கோவிடம் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

நியூஹெவன் டென்னிஸ் அரை யிறுதியில் கடந்த வாரம் சுரென் கோவை, சபரோவா வீழ்த்தி யிருந்தார். தற்போது சுரென்கோ பதிலடி கொடுத்துள்ளார்.

போட்டித் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளில் இதுவரை 4 பேர் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளனர். 7-வது இடத்திலுள்ள இவானோவிச், 8-வது இடத்திலுள்ள கரோலினா லிஸ்கோவா, 10-வது இடத்திலுள்ள சுவாரெஸ் நவர்ரோ மற்றும் சபரோவா ஆகிய நால்வரும் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளனர்.

உலகதரவரிசையில் 2-வது இடத்திலுள்ள சிமோனா ஹாலெப், நியூஸிலாந்தின் மரினா எரகோவிக்குடன் மோதினார். இப்போட்டியில் 6-2, 3-0 என்ற கணக்கில் ஹாலெப் முன்னிலை வகித்த போது, எரகோவிக் முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால், ஹாலெப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2011-ம் ஆண்டு அமெரிக்கன் ஓபன் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா டோசுர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அமெரிக்காவின் ஜாமி லோபை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பர், இத்தாலியின் கரின் நாப் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

படங்கள்: ஏஎஃப்பி / ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x