Last Updated : 27 Aug, 2016 10:35 AM

 

Published : 27 Aug 2016 10:35 AM
Last Updated : 27 Aug 2016 10:35 AM

அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா- மே.இ.தீவுகள் டி 20-ல் இன்று மோதல்: உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா தோனி குழு

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையேயான முதல் டி 20 ஆட்டம் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் லாடர்ஹில் பகுதியில் இன்று இரவு நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அந்த அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொரை 2-0 என வென்று சாதனை படைத்தது. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இரு அணிகளும் இரண்டு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த தொடர் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அந்நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் சமீபகாலமாக அங்கு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றுன.

இதன் ஒருகட்டமாகவே இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டி 20 தொடரும் நடத்தப்பட உள்ளது. புளோரிடா வின் லாடர்ஹில் பகுதியில் உள்ள சென்ட்ரல் புரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

20 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் கரீபியன் டி 20 தொடரின் சில ஆட்டங்கள் மற்றும் இரு சர்வதேச அளவிலான டி 20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கரீபியன் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் பலர் விளையாடி உள்ளனர். இதனால் இந்த மைதானத்தின் தன்மை அவர்களுக்கு பரிச்சயமானதாக இருக்கும்.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக டி 20 ஆட்டம் ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த மைதானத்தில் விளையாடி உள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேவேளையில் இந்திய அணி முதல் முறையாக தற்போதுதான் அமெரிக்காவில் விளையாடுகிறது.

தோனி தலைமையில் இந்திய அணி டி 20 தொடரை சந்திக்கிறது. இந்திய அணி கடைசியாக கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் வெற்றி பெற்றிருந்தது. பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவுக்கு இது குறுகியவடிவிலான போட்டியின் முதல் தொடராகும்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தோனியுடன் முதல்முறையாக பணியாற்ற உள்ளேன். நாங்கள் இருவரும் நீண்ட காலம் இணைந்து விளையாடி உள்ளோம். டி 20 தொடர் குறித்து நாங்கள் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஜஸ்பிரித் பும்ரா போன்ற புதிய வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏற்கெனவே நான் ஐபிஎல் தொடரில் பும்ராவுடன் பணியாற்றி உள்ளேன். தற்போது இந்திய அணியின் ஓய்வறையில் மீண்டும் பும்ரா உள்ளிட்ட வீரர்களை சந்திக்க உள்ளேன்" என்றார்.

டேரன் சமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி கார்லோஸ் பிராத்வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. 28 வயதான பிராத் வெயிட் 3 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, எட்டு டி 20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் அணியை வழிநடத்த உள்ளார்.

டி 20 உலகக் கோப்பை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதேவேளையில் டி 20 உலகக் கோப்பை அரை இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க தோனி தலைமையிலான குழு முழுகவனம் செலுத்தக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி.

மேற்கிந்தியத் தீவுகள்:

கார் லோஸ் பிராத் வெயிட், பிளட்சர், கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, இவின் லீவிஸ், மார்லோன் சாமுவேல்ஸ், ஜான்சன் சார்லஸ், கெய்ரோன் பொலார்டு, லென்டில் சிம்மன்ஸ், சாமுவேல் பத்ரி, சுனில் நரேன், ஜேசன் ஹோல்டர்.

நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x