Last Updated : 07 Jul, 2016 09:48 AM

 

Published : 07 Jul 2016 09:48 AM
Last Updated : 07 Jul 2016 09:48 AM

அபினவ் பிந்திரா: தங்கத்தை சுட்ட விரல்கள்!

கண்களில் குறைபாடு உள்ள ஒரு குழந்தை, தன் தந்தையிடம், “நான் துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புகிறேன்” என்று கூறினால் என்ன பதில் கிடைக்கும்?

“மகனே துப்பாக்கியில் குறி பார்த்து சுடுவதற்கு நல்ல கண் பார்வை அவசியம். அதனால் அது உனக்கு சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது துறையை தேர்ந்தெ டுத்துக் கொள்!” என்று ஆலோ சனை கூறி, அவனுக்கு ஏற்ற வேறு ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுக்கச் சொல்வார்.

ஆனால் அபினவ் பிந்திராவின் அப்பாவான அபிஜித் பிந்திரா, அப்படி செய்யவில்லை. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட தன் மகன், அந்த விளையாட்டில் சிறந்து விளங்க என்ன செய்வதென்று யோசித்தார். துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவன் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். அந்த தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்திரா என்ற துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.

1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்திராவுக்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து அமித் பட்டாசார்ஜீ, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ் பிந்திரா. கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடும் பிரிவில் வேகமாக வளரத் தொடங்கினார்.

“1995-ம் ஆண்டு தனது 13 வய தில் பிந்திரா என்னிடம் பயிற்சிபெற வந்தார். ஏர் ரைபிள் பிரிவில் அதிக ஆர்வம் கொண்ட பிந்திரா, அதிலுள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்காக பல நாட் கள் வகுப்பு முடிந்த பிறகும் என் வீட்டுக்கு வந்து கூடுதலாக கற்பார். ஏழே மாதங்களில் ஒரு துடிப்புள்ள வீரனாக தயாரான அவர், பஞ்சாபில் நடந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி யில் தங்கம் வென்றார். அதே ஆண்டு அகமதாபாதில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 600-க்கு 600 புள்ளிகள் பெற்று தங்கம் வென்ற அவர், அதன்பிறகு திரும் பிப் பார்க்கவே இல்லை. நாட்டுக் காக பல பதக்கங்களை அவரது விரல்கள் குவித்து வருகிறது” என்று பெருமையுடன் சொல் கிறார் அபினவ் பிந்திராவின் பயிற்சியாளர் தில்லான்.

2000-ம் ஆண்டில் தனது 18 வயதில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், இளம் வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் என்ற பெயரைப் பெற்றார். இந்தப் போட்டியில் அவர் பதக்கம் எதையும் பெறாவிட்டாலும் அனுப வத்தைக் கொடுத்தது. சர்வதேச போட்டிகளில் ஜெயிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது, மன உறுதியும் தேவை என்பதை தன் அனுபவத்தால் உணர்ந்த அபினவ் பிந்திரா, போட்டிகளுக்கு முன் சிவப்பு எறும்புகளுக்கு நடுவில் தூங்குவது, ஸ்கை டைவிங் செய்வது என்று வித்தியாசமான பயிற்சிகளையும் மேற்கொண்டார். இந்த பயிற்சிகள் தான் தேசிய போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டிவரை அவருக்கு பல தங்கப் பதக் கங்களை அள்ளிக்கொடுத்தது.

விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார். இந்த தங்க மகனை கவுரவிக்கும் விதமாக ரியோ ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பை அபினவுக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த தங்க மகன் தங்கத்தைச் சுட்டு தாயகம் திரும்ப வாழ்த்துவோம்.

இதுவரை சாதித்தவை

* 2008-ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்

* 2006-ல் நடந்த உலக ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம்

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம்

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள்

* 2000-ல் அர்ஜுனா விருது

* 2001-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது

* 2009-ல் பத்மபூஷண் விருது.

விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x