Published : 31 Aug 2016 08:00 PM
Last Updated : 31 Aug 2016 08:00 PM

அதிவேக ஒருநாள் அரைசத டிவில்லியர்ஸ் சாதனையை அச்சுறுத்திய ஏரோன் பிஞ்ச் அதிரடி

தம்புல்லாவில் நடைபெறும் 4-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 213 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் 18 பந்துகளில் அரைசதம் கண்டு ஆஸ்திரேலிய சாதனையை சமன் செய்தார்.

2-வது ஓவரில் அதிரடியைத் தொடங்கினார் ஏரோன் பிஞ்ச். அபான்சோ என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர் வந்தவுடன் ஸ்வீப்பைத் தொடங்கினார் பவுண்டரி, 2-வது பந்து மிஸ்ஹிட்தான் பீல்டர் கையில் பட்டு ஆஃப் திசையில் பவுண்டரி. பிறகு பாயிண்டில் ஒரு பவுண்டரி, எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரி என்று 17 ரன்கள் அந்த ஓவரில் விளாசினார் பிஞ்ச்.

3-வது ஓவரில் திசர பெரேரா வர 2 பவுண்டரிகள் ஒரு நேர் சிக்ஸ். மீண்டும் அபான்சோ வர வார்னர் முதலில் 2 பவுண்டரிகளை அடிக்க பிஞ்ச்சிடம் ஸ்ட்ரைக் வந்த போது மீண்டும் 2 பவுண்டரிகளை அடித்தார். இம்முறை லாங் ஆன் மற்றும் ஃபைன் லெக் திசையில் பறந்தது.

இந்நிலையில் 14 பந்துகளில் 43 ரன்கள் இருந்த ஏரோன் பிஞ்ச், 2 பந்துகளில் அரைசதம் எட்டினால் 16 பந்துகளில் அரைசதம் என்ற உலக சாதனையை சமன் செய்திருப்பார். டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் ஒருநாள் அரைசதம் எடுத்து சாதனையை வைத்துள்ளார்.

அதன் பிறகு ஸ்ட்ரைக் கிடைத்த போது திலுருவன் பெரேராவை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்து 15 பந்துகளில் 49 என்று அருகில் வந்தார், ஆனால் அடுத்த பந்து எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க முயன்றார் பந்து சிக்கவில்லை ஒரு பை ரன்னாக வந்தது.

6-வது ஓவரை இடது கை வீச்சாளர் பதிரனா வீச முதல் பந்தை கவர் திசையில் பஞ்ச் செய்தார் பிஞ்ச் ஆனால் ரன் இல்லை. ஆனால் அடுத்த பந்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடித்து 18 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அதிவேக ஒருநாள் அரைசதசாதனையை சமன் செய்தார். அடுத்த பந்தே பதிரனா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். 18 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்த பிஞ்ச் 19-வது பந்தில் அவுட் ஆனார். சைமன் ஓ’டன்னலின் 18 பந்து அரைசதத்தை சமன் செய்தார் பிஞ்ச்.

அதே ஓவரில் கவாஜாவும் ஒரு பந்து கழித்து எல்.பி.ஆனார். இது சந்தேகத்துக்கிடமான தீர்ப்பு.

ஆனால் பிஞ்ச் அதிரடியில் முதல் விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களில் 74 ரன்கள் விளாசப்பட்டது. தற்போது வார்னர் விக்கெட்டையும் பதிரனா கைப்பற்ற ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் 114/3 என்று உள்ளது.

ஜார்ஜ் பெய்லி 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 12-வது ஓவரில் ஆஸ்திரேலியா 117/3 என்று உள்ளது. பதிரனா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள்ளார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x