Published : 13 Dec 2014 05:51 PM
Last Updated : 13 Dec 2014 05:51 PM

அடிலெய்ட் டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டத்தில் சொதப்பிய நடுவர்கள்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்கள் அபாரமாக செயல்பட்ட நடுவர்கள் கடைசி நாள் ஆட்ட பரபரப்பில் அபத்தமான தவறுகளை இழைத்தனர்.

இந்திய தோல்விக்கு அது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருவேளை ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களுக்கு எதிரான சில தீர்ப்புகளை அவர்களும் சுட்டிகாட்டியிருக்க கூடும்.

364 ரன்கள் இலக்கை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் நடுவர் அதிர்ச்சி அளித்தார். ஷிகர் தவன், மிட்செல் ஜான்சன் பந்தில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஆனால், அந்த பவுன்சர் தவனின் தோள்பட்டையில் பட்டுச் சென்றது தெளிவாகத் தெரிந்தது. இயன் கோல்டு இந்த மகாதவற்றைச் செய்தார்.

பிறகு முரளி விஜய் ஒரு பந்தை தவறாகக் கணித்து ஆடாமல் விட அது ஸ்டம்புக்கு நேராக கால்காப்பைத் தாக்கியது, நேதன் லயன், ஆஸி.வீரர்கள் கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக முறையீடு செய்தனர். ஆனால் நாட் அவுட் என்றார். அது சரியான அவுட் என்பதாகவே தெரிந்தது. இது நடந்த போது விஜய் 24 ரன்களில் இருந்தார்.

இதே போல் மீண்டும் முரளி விஜய் அவர் 64 ரன்களில் இருந்த போது மற்றொரு நெருக்கமான அவுட் கொடுக்கப்படவில்லை. இதுவும் ரீப்ளேயில் அவுட் என்பதாகவே தெரிந்தது.

பிறகு கோலி 85 ரன்களில் இருந்த போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே நன்றாக பிட்ச் ஆகி கடுமையாக திரும்பிய நேதன் லயன் பந்து சற்றும் எதிர்பாராமல் கணுக்காலுக்குக் கீழே வந்தது கோலியில் பேடைத் தாக்கியது. இதையும் அவுட் என்று கிராபிக்ஸ் காண்பித்தது.

இந்த அவுட் எல்லாம் கூட எல்.பி.டபிள்யூ தீர்ப்பு பற்றியது. இதில் கணிப்புகள் முன்பின் இருக்கலாம். டி.ஆர்.எஸ்.-ஐ இதில் நம்ப முடியாமல் போகலாம்.

ஆனால், கடைசியில் முக்கியமான கட்டத்தில் ரஹானேயிற்கு பேட்டில் பட்டதாக முடிவு செய்து கொடுத்த தீர்ப்பு மிக அபத்தம், இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே பறிபோனது. பந்துக்கும் பேட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

நடுவர் அபத்தங்கள் மீண்டும் ஒரு இந்தியத் தோல்வியில்தான் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x