Published : 29 Jun 2017 07:27 PM
Last Updated : 29 Jun 2017 07:27 PM

மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை

பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது.

இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிகபட்ச பங்களிப்பு என்ற வகையில் முதலிடம் பெறுகிறது. இதன் மூலம் மொத்த ரன் எண்ணிக்கையில் 69.26% பங்களிப்பு செய்து சாதனை புரிந்துள்ளார்.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் லேனிங் முதலில் இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். நடுவரிசையில் சிறிவதனே 24 ரன்களையும் பின் வரிசையில் கவுசல்யா 13 ரன்களையும் எடுத்ததே இந்த ஸ்கோரில் இரண்டு இரட்டை இலக்க ஸ்கோராகும், மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.

அட்டப்பட்டு ஜெயங்கனி மட்டும் ஒரு முனையில் நின்று 61 பந்துகளில் அரைசதமும், 106 பந்துகளில் சதமும், 131 பந்துகளில் 150 ரன்களையும் இறுதியில் 143 பந்துகளில் 22 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 178 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இலங்கை அணி 257 ரன்கள் எடுத்தது.

258 ரன்கள் இலக்கை விரட்டும் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1 விக்கெட்டை இழந்து 9 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x