Published : 17 Jul 2017 08:57 AM
Last Updated : 17 Jul 2017 08:57 AM

இலங்கை அணிக்கு எதிராக ஜிம்பாப்வே போராட்டம்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்து போராடி வருகிறது.

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 356 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்களை எடுத்தது. நேற்று காலை 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரீமர் 125 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கையை விட முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஜிம்பாப்வே அணி ஆடவந்தது. இலங்கை பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சின் முன்னால் அந்த அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. மசகட்சா 7, சகப்வா 6, முசகண்டா 0, எர்வின் 5, வில்லியம்ஸ் 22 ரன்களில் அவுட் ஆக அந்த அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என்று தடுமாறியது.

இந்த நிலையில் சிக்கந்தர் ராசாவும், மூரும் ஜோடி சேர்ந்து ஜிம்பாப்வே அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். மிகப்பொறுமையாக பேட்டிங் செய்த அவர்கள், 6-வது விக்கெட்டுக்கு 86 ரன்களைச் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 145-ஆக இருந்தபோது லஹிரு குமாராவின் பந்தில் மூர் (40 ரன்கள்) ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சிக்கந்தர் ராசாவுடன் வாலர் ஜோடி சேர்ந்தார்.

இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை திறமையாக சமாளித்த இவர்கள், 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை.

இதனால் ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தது. சிக்கந்தர் ராசா 97 ரன்களுடனும், வாலர் 57 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி தற்போது 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x