Published : 23 Oct 2016 01:48 PM
Last Updated : 23 Oct 2016 01:48 PM

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: புது அலுவலகத்துக்குப் பூஜை போடத் தயாரா?

உங்கள் வெப்சைட்டுக்குப் பெயர் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு காரணத்தால் உங்கள் பிசினஸை நிறுத்திவிட்டீர்கள் என்றால்கூட, ‘இன்னார் இந்தச் சேவையைக் கொடுக்கிறார். இவரது வெப்சைட் முகவரி இதோ’ என்று அந்தப் பெயர் இணையத்தில் யார் மூலமாகவோ லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். காரணம் இணைய வெளியில் பதிவாகும் தகவல்கள், புகைப்படங்கள், செய்திகள் போன்றவை நம் கவனத்துக்கு வராமலேயே காப்பி பேஸ்ட், லைக், ஷேர், கமெண்ட் ஆகியவற்றின் மூலம் ஏதேனும் ஓரிடத்தில், ஒரு வடிவில் சுற்றிக்கொண்டே இருக்கும்.

நோக்கத்தைச் சொல்லும் பெயர்

வெப்சைட்டின் பெயரை உங்கள் பெயர், குழந்தைகள் பெயர் என வைத்துக்கொள்ளாமல், பெயரைப் பார்த்தவுடன் நீங்கள் செய்ய இருக்கும் பிசினஸ் அல்லது உங்கள் திறமையை உணர்த்தும் வகையில் தேர்ந்தெடுங்கள். வெப்சைட் பெயரைப் பார்வையாளர்கள் இணையத்தில் டைப் செய்து பார்க்கும்போது, தவறில்லாமல் டைப் செய்யும்படி பெயர் சிறியதாக இருந்தால் சிறப்பு.

உதாரணத்துக்கு www.divya.com, www.gokul.org என்று வெப்சைட்களின் பெயர் இருந்தால் அவை என்ன மாதிரியான சேவையைக் கொடுக்கின்றன என்பது தெரியாமல் போக வாய்ப்புண்டு. மாறாக, www.divyaarts.com, www.gokulcatering.org, www.kamalabooks.com என்று வெப்சைட்களின் பெயர்கள் அமைந்தால், அவை சீக்கிரம் மக்களைச் சென்றடையும்.

உங்கள் இலக்கும் கனவும் வெற்றியாக மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் வெப்சைட் பிரபலமடைந்து, பிராண்ட் ஆகும் என்ற கனவோடு கவனமாக வெப்சைட் பெயரை அமைத்துக்கொள்ளுங்கள்.

வெப்சைட் பிறந்தநாள்

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்துகொண்டுவிட்டால் உலகில் யாராலும் அந்தப் பெயரைத் தனதாக்கிக்கொள்ள முடியாது. உங்கள் பிறந்தநாளை மறக்காமல் இருப்பதைப்போல, உங்கள் வெப்சைட்டின் பிறந்தநாளையும் மறக்காமல் வைத்திருந்து, கட்டணம் செலுத்திப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லை யெனில் அந்தப் பெயர் இணைய வெளியில் பொதுவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுவிடும். ‘யாரோ என் வெப்சைட் பெயரை ஹேக் (Hack) செய்துவிட்டார்கள்’என்று புலம்பாமல் இருக்க, புதுப்பிக்கும் இறுதிநாள்வரை காத்திருக்காமல், முன்கூட்டியே கட்டணம் செலுத்தி உங்கள் வெப்சைட் பெயரை உங்களுக்கானதாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் செய்துகொண்டிருக்கும் பிசினஸுக்கான ஆன்லைன் ஆபீஸ் போல செயல்படும் வெப்சைட், நேரடியாக நீங்கள் செய்துவரும் பிசினஸின் பெயர், உங்கள் பெயர், திறமை, பணி போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே, உங்கள் பணியே பிராண்டாக மாறும்படி வெப்சைட் பெயரை அமைத்துக்கொள்ளுங்கள்.

வெப்சைட் பெயரைத் தேடலாமா?

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வெப்சைட் (டொமைன்) பெயர் இணையத்தில் வேறு யாராவது இதற்கு முன்பே ரெஜிஸ்டர் செய்திருக்கிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு www.whois.com என்ற வெப்சைட் உதவுகிறது.

இதில் Get a Domain Name என்ற தலைப்பின் கீழுள்ள தேடுபொறியில் நமக்குத் தேவையான வெப்சைட்டின் பெயரை டைப் செய்து

Search என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அந்தப் பெயரை இதுவரை இணையத்தில் யாரும் பயன்படுத்தவில்லை என்றால் Available என்ற தகவலும், முன்பே வேறு யாராவாது ரெஜிஸ்டர் செய்திருந்தால் Unavailable என்ற தகவலும் வெளிப்படும். மேலும் நாம் தேர்ந்தெடுத்துள்ள டொமைன் பெயருக்கு இணையாக உள்ள சில டொமைன் பெயர்களை வெளிப்படுத்தும்.

எங்கு பதிவு செய்வது?

ஏராளமான செல்போன் சேவை நிறுவனங்கள் இருப்பதைப்போல, இணையத்தில் வெப்சர்வீஸ் புரொவைடர் களாகச் செயல்படும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்தல், வெப்சைட்டுக்கான இடத்தை வாடகைக்குத் தருதல், வெப்சைட்டை வடிவமைத்தல் என வெப்சைட் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இவை செய்து தருகின்றன.

உதாரணம்: www.bigrock.in, www.goddaddy.com, http://www.registerdomainsindia.in, www.bluehost.in, www.wpengine.com, www.myhosting.com.

இவர்களை அணுகினால் உங்கள் வெப்சைட் பெயரைப் பதிவு செய்து தருவார்கள். நீங்களாகவேகூட இவர்களின் வெப்சைட் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.

கட்டணம் எவ்வளவு?

வெப்சைட் பெயரில் .com. .org. in என்றுள்ள இறுதிப் பகுதி ஒவ்வொன்றுக்கும் தனித் தனிக் கட்டணம். உதாரணத்துக்கு, .com ரூபாய் 600, .in ரூபாய் 950, .org ரூபாய் 750. இந்தக் கட்டணங்கள் மாற்றத்துக்குட்பட்டவை. மேலும், நிறுவனத்துக்கு நிறுவனம் கட்டணமும் வேறுபடும்.

போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் வெப் சர்வீஸ் புரொவைடர்கள் பல்வேறு இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கவர்கிறார்கள். ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற விற்பனைத் தந்திரத்தை இவர்களும் கடைபிடித்து, ஒரு டொமைன் வாங்கினால் ஒரு டொமைன் இலவசம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

உதாரணத்துக்கு, >www.divyaarts.com என்ற உங்கள் டொமைன் பெயரை ரெஜிஸ்டர் செய்தால், www.divyapaintings.com போல உங்களுக்கு விருப்பமான மற்றொரு டொமைனை இலவசமாக ரெஜிஸ்டர் செய்து தருவார்கள்.

நம்பகமான சர்வீஸ் புரொவைடரைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான டொமைன் பெயரை ரெஜிஸ்ட்டர் செய்துகொண்டுவிட்டால், உங்கள் ஆன்லைன் அலுவலகத்துக்குப் பூஜை போட்டுவிட்டீர்கள் என்று பொருள்.

உங்கள் பிசினஸுக்கு அடிப்படையான வெப்சைட்டுக்கு மட்டும் கொஞ்சம் செலவு செய்து, ஆன்லைனில் அலுவலகம் உருவாக்கிவிட்டால் போதும், அதைப் பிரபலப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்த ஏராளமான வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x