Published : 24 Jul 2016 03:06 PM
Last Updated : 24 Jul 2016 03:06 PM

விவாதக் களம் : ஆண்களின் மனநிலை மாற்றமே நிரந்தரத் தீர்வு!

தனியார் போக்குவரத்துச் சேவைகளிலும், வாடகை வண்டிகளிலும் இருக்கிற பாதுகாப்புக் குறைபாடு குறித்து ஜூலை 17-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். ‘பயணங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானவை இல்லையா?’ என்ற கேள்விக்குப் பலரும் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு…

வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் பான், குட்கா போன்ற போதையூட்டும் பொருட்களை இடைவிடாமல் மென்றுகொண்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியளித்தது. இரவு நேரப் பயணங்களின்போது தூக்கத்தைத் தவிர்க்கத்தான் இதுபோன்ற போதைதரும் பொருட்களைப் பயன்படுத்துகிறாராம்.

மனமும் உடலும் ஆரோக்கியமற்ற ஒருவர், எப்படிப் பாதுகாப்பாக வண்டியோட்ட முடியும்? இவர்கள் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? ஓட்டுநரின் போதைப் பழக்கமும் பெண்களின் பாதுகாப்பின்மைக்குக் காரணமாக அமையக்கூடும். ஓட்டுநர் தகுதியில் நன்னடத்தையையும் முக்கிய அம்சமாகச் சேர்க்கப்பட வேண்டும்.

- எம். சுதாமதி பிரபு, காமாட்சிபுரம்.

தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வண்டியில் ஏறியதுமே வண்டி மற்றும் ஓட்டுநர் குறித்த தகவல்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குக் கைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட வேண்டும். தொலைதூரப் பயணமாக இருக்கும்பட்சத்தில் அடிக்கடி கைபேசியில் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுக்குத் தாங்கள் போகும் வழித்தடம் குறித்துத் தகவல் சொல்லலாம். இதனால் ஓட்டுநர் கவனத்துடன் நடந்துகொள்வார். ஓட்டுநர்களும் தங்கள் வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் இடத்தில் தங்கள் வீட்டுப் பெண்களை வைத்து நினைத்தால் தவறான எண்ணம் தோன்றாது.

- வே.த. யோகநாதன், திருச்சி.

பயணங்களின்போது எதிர்பாராமல் நடக்கிற அத்துமீறலையும், தாக்குதலையும் எப்படிச் சமாளிப்பது என்று பெண்களுக்குப் பள்ளி, கல்லூரிகளிலேயே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தொழில்நுட்ப உதவியுடன் ஆபத்து காலங்களில் பயன்படுத்தும் வகையில் கைபேசியில் புதிய அம்சங்களை உருவாக்கலாம்.

வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்துப் போதுமான பயிற்சி வழங்கிய பிறகே களத்தில் அனுமதிக்க வேண்டும். இவை அனைத்தையும்விட அறிவை மழுங்கடித்து, மூளையின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தும் மதுவைத் தவிர்த்தாலே பாதி குற்றங்கள் குறைந்துவிடும்.

- தாரா ரமேஷ், புதுச்சேரி.

பெண்களின் இரவு நேரப் பயணம் பாதுகாப்பாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. அலுவல் ரீதியான பயணமாக இருந்தால், பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடமை.

இரவு நேரத்தில் வெளியே செல்லும் பெண்கள், சரியானவர்கள் அல்ல, எதற்கும் துணிந்தவர்கள் என்ற கருத்து இன்றும் நிலவுவது கண்டனத்துக்குரியது. பெண்களை வக்கிர எண்ணத்துடன் அணுகும் ஆண்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாதவரை பெண்ணுக்குப் பயணங்கள் மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியேறுவதே பாதகமாகத்தான் அமையும்.

- லலிதா சண்முகம், திருச்சி.

பயணங்களின்போது பிரச்சினைகளை எதிர்கொள்கிற பெண்களின் புகாருக்குக் காவல்துறை முன்னுரிமை தர வேண்டும். காவல்நிலைய எல்லை குறித்து விவாதித்துக்கொண்டிருக்காமல், புகாரை உடனடியாக ஏற்றுக்கொள்வதே பெண்ணுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.

தனியார் வாகனங்களிலும் கால் டாக்ஸிகளிலிலும் அலாரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வளவு உஷாராக இருந்தும் நிலைமை கைமீறிப் போவதுபோல இருந்தால் கலங்கவே கூடாது. துப்பட்டா, கைப்பை என்று எது கையில் கிடைக்கிறதோ அதை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். எப்பேர்ப்பட்ட பயில்வானுக்கும் மூக்குப் பகுதி பலவீனமாகத்தான் இருக்கும். ஐந்து விரல்களையும் மூடி ஓங்கி ஒரு குத்து விட்டால் போதும். கைப்பையில் எப்போதும் பெப்பர் ஸ்பிரே, மிளகாய்த் தூளை வைத்துக்கொள்வதும் நல்லது.

-ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ரயிலில் மூன்று வயது குழந்தையுடன் சென்றேன். என் பாதுகாப்புக்காக என் கணவர் அடிக்கடி போன் செய்து பேசுவார். சில சமயம் நான் போனின் நம்பர் போடாமல், என் கணவரிடம் பேசிக்கொண்டிருப்பது போல நடிப்பேன். அதுதான் எனக்குப் பாதுகாப்பு தந்தது. இரவுப் பயணம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் முடிந்தது.

எப்போதும் என் கைப்பையில் சிறிய கத்தி இருக்கும். அனைத்தையும்விட மனோதிடம் முக்கியம்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

ஒரு முறை எங்கள் ஆசிரியருடன் நானும் என் தோழிகளும் கால் டாக்ஸியில் பயணம் செய்தோம். இறங்கும் இடம் வந்தவுடன் எங்கள் ஆசிரியர் வண்டியை நிறுத்தச் சொன்னார். ஆனால், ஓட்டுநர் சிறிது தூரம் தள்ளி நிறுத்தினார். 500 ரூபாய் கொடுத்ததும், “சீ… சில்லறை இல்லாம ஏன் வண்டியில் ஏறணும்? ஒரே கழுத்தறுப்பு” என்று எரிச்சலுடன் கத்தினார். வயதான எங்கள் ஆசிரியரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். “உன்னை வண்டியில் ஏற்றினேனே” என்று அந்த ஓட்டுநர் கத்த, நாங்கள் அசந்து போய் விட்டோம். எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் உண்டுதான். ஆனால் ஓட்டுநர்கள் தங்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பது போல் நடப்பது கேவலம் இல்லையா?

காவல் துறையை அணுகினால் மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்? ஓட்டுநர்களை நியமிக்கும் நிறுவனங்கள் அவர்களைத் தக்க சம்பளத்துடன், தோழமையுடன் நடத்தினால் ஓரளவு மாற்றம் ஏற்படும். அரசாங்கமும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் நவீன தொழில் நுட்பத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். குற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டங்கள் வருவது நலம்.

ஒரு பெண் இறந்த பிறகு பணம் தருவார்கள், அந்தப் பெண்ணின் பெயரில் விருது வழங்குவார்கள். அவர்களால் பெண்ணின் உயிரைத் திருப்பித்தர முடியுமா?

- வீ. ரத்ன மாலா.

பெண்கள் இந்தச் சமூகத்தில் இரண்டாம்பட்சம்தான் என்று ஆண்கள் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

பயணம் செய்யும்போது மட்டுமில்லை, சாலையில் வாகனத்தைத் தனியாக இயக்கும் பெண்களையும் இவர்கள் அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். சமீபத்தில் நானும் எனது சகோதரரும் காரில் பயணிக்கும்போது ஒரு குறுகலான சாலையில் எதிரே ஒரு காரை ஓர் இளம்பெண் ஓட்டி வந்தார். என் சகோதரர் காரை இடது புறமாக இயக்கி இருக்கலாம். ஆனால் அவரோ, “அதெப்படி ஒரு பொம்பளை எனக்கு வழிவிடாம காரை ஓட்டிட்டு வரலாம்?” என்ற கேள்வியோடு விடாப்பிடியாக காரைச் செலுத்தி அந்தப் பெண்ணை மட்டுமின்றி எங்களையும் பதற்றத்துக்குள்ளாக்கினார். அவரை நான் அப்போதே வன்மையாகக் கண்டித்தேன்.

பெண்கள் ஒரு செயலைச் செய்யும் போது ஆண்களிடமிருந்து கண்டனக் குரல், இகழ்ச்சிப் பார்வை, எள்ளல் புன்னகை ஆகியவை எப்போதும் வெளிப்படுகின்றன. இந்தப் போக்கை அவர்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தனியாகப் பயணிக்கும்போது பெண்கள் கூடுமானவரை தங்கள் பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. போக்குவரத்து சேவை நிறுவனங்கள் பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுநரை நியமிக்கலாம். ஆண் ஓட்டுநரால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்கள் அளிக்கும் புகாரை காவல் துறை உடனடியாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெண் தனியாக இருப்பதைத் தனக்கான சந்தர்ப்பமாக ஒரு ஆண் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவளது பாதுகாப்புக்கான ஒரு பொறுப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி பெண்கள் தனியே பயணிக்கும்போது எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் மன உறுதியையும் தைரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

- தேஜஸ், காளப்பட்டி.

பண்பு, ஒழுக்கம் இல்லாத இடத்தில் குற்றங்கள், ஆபத்துகள் வாசம்செய்யும். பெண்களைப் பார்த்தாலே காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துபவர்கள் அதிகம். பெண்களிடமும் வயதானவர்களிடமும் மரியாதை குறைவாக நடப்பது பெரும்பாலான ஓட்டுநர்களின் குணம்.

தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததே தவிர மனிதர்கள் இன்னும் மனிதர்களாக மாறவில்லை.

ஒழுக்கக்கேடாக நடப்பவரைத் தண்டிக்கக் காவல் துறை தயக்கம் காட்டக் கூடாது. காவல் துறையின் மெத்தனம் சட்டத்தை நம்புவது வீண் என்ற நிலைமைக்குப் பெண்களைத் தள்ளிவிடும்.

- வீ. யமுனா ராணி.

ஒருசில ஓட்டுநர்களின் ஒழுக்கக்கேட்டால் ஒட்டுமொத்தமாகப் பயணங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் பயத்தை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியது. இதைத் தவிர்க்க நம்பகமான சேவை நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ய வேண்டும். ஓட்டுநர்களிடம் அளவுக்கு மீறிப் பேசி எரிச்சல் உண்டாக்காமல், தேவையான விவரங்களை மட்டும் பேச வேண்டும்.

தேவைப்படும்போது தயங்காமல் வண்டியை நிறுத்தச் சொல்லிப் பொதுமக்களின் உதவியையோ, ரோந்துப் பணியில் இருக்கும் காவல் துறையின் உதவியையோ நாடுவதில் தவறில்லை.

பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வது பயணங்களின்போது வரும் அச்சுறுத்தல்களுக்குத் தீர்வாக இருக்கும்.

- சுபா தியாகராஜன், சேலம்.

தனியார் போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் பெண்கள் தனியாகச் செல்லும் வண்டிகளில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி அதை அந்தப் பெண் இறங்கும்வரை குறிப்பிட்ட வழியில்தான் கார்கள் செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். காவல் துறையினரும் பெண்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது எந்தப் பகுதி என்று பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் இரவில் ரோந்தை அதிகப்படுத்தி ஆங்காங்கே வாடகை கார்களை நிறுத்தி திடீர் சோதனை செய்ய வேண்டும்.

கார்களில் பவர் விண்டோஸ், பவர் லாக் பொருத்தக் கூடாது என்று அரசு சட்டம் இயற்ற வேண்டும். காரில் செல்லும்போது ஓட்டுநரின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் அமைதியாக இருந்து, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காபி குடிக்க வேண்டும் என்று சொல்லி இறங்கி அருகில் உதவி கேட்கலாம். அல்லது காவல் துறைக்கு போன் செய்யலாம்.

- பெ. குழந்தைவேலு, நாமக்கல்.

ஆண்களுக்கே பாதுகாப்பான பயணம் உறுதியில்லை எனும்போது பெண்களின் நிலை எப்படியிருக்கும்? ஆண் துணையுடன் பயணம் செய்யும் போதே தவறுகள் நிகழ்கின்றன. தட்டிக் கேட்டாலே வீண் விவாதம்தான். போக்குவரத்துக் குறைபாடு, காவல் துறையினரின் அலட்சியம், பயணிகளின் ஒற்றுமையின்மை எல்லாம் சேர்ந்து பெண்களின் மீது காட்டப்படுகிறது. பெண்கள் இளக்காரமாகவே சித்தரிக்கப்படுவதால் ஏற்பட்ட வினை.

- ஜீவன். பி.கே, கும்பகோணம்.

நான் கல்லூரி படித்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு நாள் மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் ஏறினேன். சிறிது தூரம் சென்ற பிறகுதான் கவனித்தேன் பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர் உட்பட மொத்தமே நான்கு ஆண்கள். அடுத்த பஸ் நிறுத்தத்தில் மாணவர் கூட்டம் திமுதிமுவென்று ஏறியது. ஒரு பெண்கூட இல்லை. கலவர பூமியாக நான். ஏறிய வேகத்தில் மனம்போன போக்கில் அவர்கள் என்னைக் கேலிசெய்யத் தொடங்கினார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக கண்டக்டரும் டிரைவரும். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவனின் கிண்டல் பேச்சு என் சுய மரியாதையைச் சீண்ட, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பின்னால் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தேன். அவ்வளவுதான், “டேய் கண்ணகிடா... மாடர்ன் கண்ணகிடா” என்று சில வினாடிகள் சலசலத்துவிட்டுப் பின் எதுவுமே நடக்காதது போல் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நான் கல்லூரி படித்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு நாள் மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் ஏறினேன். சிறிது தூரம் சென்ற பிறகுதான் கவனித்தேன் பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர் உட்பட மொத்தமே நான்கு ஆண்கள். அடுத்த பஸ் நிறுத்தத்தில் மாணவர் கூட்டம் திமுதிமுவென்று ஏறியது. ஒரு பெண்கூட இல்லை. கலவர பூமியாக நான். ஏறிய வேகத்தில் மனம்போன போக்கில் அவர்கள் என்னைக் கேலிசெய்யத் தொடங்கினார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக கண்டக்டரும் டிரைவரும். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவனின் கிண்டல் பேச்சு என் சுய மரியாதையைச் சீண்ட, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பின்னால் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தேன். அவ்வளவுதான், “டேய் கண்ணகிடா... மாடர்ன் கண்ணகிடா” என்று சில வினாடிகள் சலசலத்துவிட்டுப் பின் எதுவுமே நடக்காதது போல் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

அப்போது அந்த டிரைவர், கண்டக்டர் பார்வையில் தெரிந்த மரியாதையைப் பார்க்க வேண்டுமே. என்னை தைரியசாலி என்று அந்த மாணவர்கள் நினைத்ததால்தான் அடங்கிப் போனார்கள் என்பது பிடிபடவே எனக்குப் பல நிமிடங்கள் பிடித்தன. மது அருந்துவதை காபி குடிப்பதைப் போல் சாதாரண விஷயமாகக் காட்டும் சினிமாக்கள் நிறைந்த இந்தக் காலத்தில், ரவுடித்தனம் செய்கிறவனைத்தான் பெண்கள் துரத்தித் துரத்திக் காதலிப்பார்கள் என்ற அபத்தமான திரைப்படங்கள் நிறைந்துள்ள இந்தக் காலத்தில் ஒரு முறைப்புக்கெல்லாம் பலன் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் எல்லாக் காலங்களிலும் பெண் தைரியமற்றவள் என்ற நம்பிக்கையே இந்த மாதிரியான ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. பெண் மனதளவிலும் உடலளவிலும் துணிச்சலை அணிய வேண்டும்.

- ஜே.லூர்து, மதுரை.

பொதுப் போக்குவரத்துகளிலும் பெண்களுக்குப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. என் தோழி அலுவலகப் பணியை முடித்துவிட்டு அரசுப் பேருந்தில் பெண்கள் வரிசையில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறார். அவருடன் அமர்ந்திருந்த பெண் இறங்கிவிடவே, குடி போதையில் வந்த ஒருவன் திடீரென இவருக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறான். எனது தோழியும் ஆண்கள் வரிசையைப் பார்த்திருக்கிறார். ஒரு இருக்கைகூட காலியாக இல்லை. அதனால் இவரும் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரமானதும் ஆண்கள் வரிசை காலியான பிறகும் இவன் மாறி உட்காரவில்லை.

ஆண்கள் வரிசையில் உட்கார்ந் திருந்த ஒருவர் குடிகாரனைப் பார்த்து “ஏம்பா அதான் இங்கே சீட் காலியா இருக்கே, இங்க வந்து உட்காரு” என்று அவனை இடம் மாற்றியிருக்கிறார். அவனும் மாறி உட்கார்ந்திருகிறான். நடத்துநர் அடுத்த நிறுத்தத்தில் யாரெல்லாம் இறங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார். எனது தோழியோ இங்கு நடந்த நிகழ்வுகளால் ஏதோ சிந்தனையில் இருந்துள்ளார். அவருடைய நிறுத்தம் வந்ததும் உடனே இறங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்தக் குடிகாரனும் தோழியைப் பின்தொடர்ந்து இறங்க முயற்சித்திருக்கிறான். இவனை இடம் மாற்றி உட்காரவைத்த அதே நபர்தான் இவன் சட்டையைப் பிடித்து “ஏன்டா இங்க இறங்குற”என்று மறுபடியும் அவனை உள்ளே இழுத்து உட்காரவைத்திருக்கிறார். எனது தோழி இறங்கும்போது உதவி செய்த அந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கியிருக்கிறார். உதவிசெய்த அந்த நபரைப் போல் சக பயணிக்குப் பாதுகாப்பு தர நம்மில் எத்தனை பேர் முன்வருவோம்?

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தாங்கள் செல்லும் வழித்தடங்களில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண் கொடுக்கப்பட வேண்டும். நடத்துநர் மட்டும் ஓட்டுநரின் அவசர அழைப்பின் போது ஜி.பி.எஸ். உதவியுடன் அருகிலிருக்கும் காவல் துறையின் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

- இரா. தினேஷ் குமார், சென்னை.

கடந்த சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் தன் பெற்றோருடன் கிரிவலம் வந்த பெண்ணின் அங்கங்களைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டான் ஒரு இளைஞன். படிப்பும் வசதியும் நிறைந்த அந்தப் பெண்ணால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. வயதான பெற்றோராலும் அவனைப் பிடிக்க முடியவில்லை. என்ன நடந்தது ஏது நடந்தது என்று புரியாமல் அங்கிருந்த மக்களாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. அந்த அழகிய இளம் பெண் தன் முகத்தை மூடிக்கொண்டு கதறியதை இன்னும் மறக்க முடியவில்லை.

பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் மனநிலை ஆண்களிடம் வளர வேண்டும். பெண் என்பவள் உறுப்போடு மட்டுமல்ல; மனதோடும் மூளையோடும்கூட பிறந்திருக்கிறாள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அத்துடன் பெண்களின் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அது வெறும் ஏட்டில் மட்டுமில்லாமல், அந்தச் சட்டங்கள் முழுவதுமாக செயல்பட வேண்டும். அதற்குக் காவல் துறையின் பங்களிப்பு மிக அவசியம்.

- ஸ்ரீதேவி மோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x