Last Updated : 04 Oct, 2015 01:50 PM

 

Published : 04 Oct 2015 01:50 PM
Last Updated : 04 Oct 2015 01:50 PM

வானவில் பெண்கள்: கிராமியக் கலைகளைப் பரப்பும் வெளிநாட்டுப் பெண்கள்

உலகமயமாக்கலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம் பாரம்பரியக் கலைகளைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்களை மகிழ்வித்த பல கலைகள் இன்று சுவடே தெரியாமல் தேய்ந்துவருகின்றன. மறைந்துவரும் இந்தக் கிராமியக் கலைகளை உலகம் முழுவதும் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பெண்கள் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த அனைவருமே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்! சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ருவாண்டா நாடுகளைச் சேர்ந்த இந்தப் பெண்களுக்கு, தமிழகத்தின் கிராமியக் கலைகள் மீதிருக்கும் ஈடுபாடு வியக்கவைக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்றாறு நீர்த்தேக்கம். அதன் மையப் பகுதியில் அமைதி சூழ்ந்த களியல் என்னும் இடத்தை இவர்கள் தங்கள் கிராமியப் பயிற்சிக்குப் தேர்ந்தெடுத்திருந்தனர். பம்பை, தவில், உறுமிகளை ஒருசேர இசைத்துக்ம்மியாட்டம், தேவராட்டம், கரகாட்டம், நாட்டு அடி களரி) போன்றவற்றை அவர்கள் அரங்கேற்றியபோது அந்த இடமே ரம்மியமாக இருந்தது.

நம் பழம்பெரும் கலைகளைத் தேடி இவர்கள் கன்னியாகுமரி முதல் சென்னை வரையுள்ள தமிழகத்தின் குக்கிராமங்களுக்குச் செல்கிறார்கள். இவர்களைப் போன்ற வெளிநாட்டு மாணவிகள் மற்றும் பெண்களைத் தமிழகத்தின் குக்கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கிராமியக் கலைகள் குறித்துப் பயிற்சி அளித்துவருகிறது ‘பொங்கு தமிழ்’ இயக்கம். இந்த அமைப்புடன் கைகோத்து, பாரம்பரிய கிராமியக் கலைகளைப் பரப்பும் ஷர்மிளா, ஸ்ரீவர்ஷினி, லனிருபா, நிரோஷினி, சேக் ஆகியோரைச் சந்தித்தோம். தமிழக கிராமியக் கலைகளுக்கு மேல்நாடுகளில் இருக்கும் வரவேற்பையும், அவற்றைப் பரப்புவதற்கான தங்கள் முயற்சி குறித்தும் அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஷர்மிளாவுக்குப் பூர்விகம் சென்னை என்றாலும் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சிங்கப்பூரில். வங்கியில் பணியாற்றும் இவர், தமிழர்களின் பாரம்பரியக் கலையைக் கற்கும் நோக்கத்துடன் இந்தியா வந்திருக்கிரார்.

“தமிழர்களோட நடனம், பாட்டு ரெண்டையும் கத்துக்கணும்னு சின்ன வயசில இருந்தே எனக்கு ஆசை. பொதுவா தமிழ்நாட்டு நடனம்னா அது பரதநாட்டியம் மட்டும்தான்னு பலர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா கும்மியாட்டம், கரகம், தவில், நாதஸ்வரம், பறை இப்படி எத்தனையோ வாத்தியங்களும் பாரம்பரிய நடனங்களும் இருக்கறதை வெப்சைட்டுகள்ல பார்த்து அங்குள்ள தோழிகள் ஆச்சரியப்படுவாங்க. தமிழர்கள் கிரேட் என அவர்கள் அடிக்கடி சொல்வது என்னை உத்வேகப்படுத்தியது” என்று சொல்லும் ஷர்மிளா, குறைந்தது நூறு சிங்கப்பூர்வாசிகளுக்காவது நம் கலைகளைக் கற்றுத்தர முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

“நாம்தான் மேலைநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அவர்களோ தமிழர்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் நேசிக்கறாங்க. ஒழுக்கத்தைப் போற்றும் தமிழ்ப் பண்புடன் கூடிய வாழ்க்கையை விரும்புறாங்க. அதனாலதான் நானும் நம் பாரம்பரிய கலைகளைக் கற்றுக்கொள்கிறேன். கும்மியாட்டத்தை ஆடும்போதும், தவில் ஓசையுடன் பாடும்போதும் எங்குமே கிடைக்காத நிம்மதியைப் பார்க்கிறேன்” என்று சிலாகிக்கிறார் ஷர்மிளா.

மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷினிக்கு நம் பாரம்பரியக் கலைகளை முறைப்படி பயின்று, மலேசிய மக்கள் முன்னிலையில் அதை அரங்கேற்ற வேண்டும் என்பது ஆசையாம்.

“மகிழ்ச்சி, துயரம், காதல், இல்லறம், உணவுமுறை இப்படி எல்லாவற்றுக்கும் கிராமியப் பாடல்களும், ஆட்டமும் இருக்கு. மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக இருப்பதால், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தாலே பல்லாயிரம் பேர் கூடுறாங்க. நாட்டுப்புறக் கலைகள் பற்றிய அடித்தளம்கூடத் தெரியாமல் ஆடும் கிராமிய நடனத்தையும் பார்த்து தமிழ் உணர்வால் கைதட்டி ஆரவாரம் செய்றாங்க. ஆனால் முறைப்படி நாட்டுப்புற நடனங்களைப் படிக்கணும்னு தமிழக கிராமங்களைத் தேடி வந்திருக்கோம்” என்கிறார் ஸ்ரீவர்ஷினி.

சினிமா இயக்குநராகும் பயிற்சியில் இருக்கிறார் ருவாண்டாவைச் சேர்ந்த சேக். தன் முதல் படம் தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழகக் கிராமியக் கலைகளைப் பற்றிப் படமெடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். தமிழகக் கலைகள் மீதுள்ள ஆர்வத்தால் தன் பெயரை மல்லிகா என்று மாற்றிக்கொண்டார்.

“மனித வாழ்க்கையோடு ஒட்டிய டான்ஸ், பாட்டெல்லாம் தமிழ்நாட்டுலதான் இருக்கு. என் சினிமா பயிற்சிக்கான தளமா இந்தக் கலைகளை நான் தேர்ந்தெடுத்திருக்கேன். இந்தக் கலைகள் விலைமதிப்பற்றவை” என்கிறார் சேக் என்கிற மல்லிகா.

சிங்கப்பூரைச் சேர்ந்த நிரோஷினி, கப்பல் பொறியாளராகப் பணியாற்றுகிறார். சிங்கப்பூரில் தமிழக கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பள்ளி தொடங்க வேண்டும் என்பது நிரோஷினியின் கனவு.

“தமிழ்நாட்டின் பொய்க்கால் குதிரை, தேவராட்டம், கும்மியாட்டம் போன்றவற்றில் நடனத்துடன் கூடிய வாழ்வியல் அர்த்தங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அடுத்த வருடத்துக்குள் எங்கள் உறவினர், தோழிகளில் பத்துப் பேரையாவது தமிழக கிராமங்களுக்கு அழைச்சுட்டு வந்து, பாரம்பரிய நடனங்களைக் கத்துக்கொடுக்கப் போறேன்” என்கிறார் நிரோஷினி.

கிராமியக் கலைகளின் பிறப்பிடத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகப் பெருமையாகச் சொல்கிறார் மலேசியாவைச் சேர்ந்த லனிருபா. இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் அவர், புடவை கட்டிக் காலில் சலங்கையுடன் நடனமாடுவதில் பேரானந்தப்படுகிறார்.

‘பொங்கு தமிழ்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.உஷா, “2013-ம் ஆண்டிலிருந்து தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளைப் பரப்புவதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறோம். மதுரையில் தொடங்கி கும்பகோணம் வழியாக கன்னியாகுமரி மாவட்டம்வரை இந்தப் பயணம் தொடர்ந்துவருகிறது. கும்மியாட்டம் என்ற ஒரு கலை இருப்பதே இன்றைய தலைமுறைக்குத் தெரியவில்லை. கோலாட்டத்துக்கு அடித்தளம் இட்டதே கும்மியாட்டம். தமிழர்களின் விழா, பண்டிகைகளில் இது முக்கியத்துவம் பெற்றுவந்தது. இதைப் போல் களரியில் உள்ள தமிழர்களின் தனித்துவ நாட்டு அடிகளையும் வெளிக்கொணர்கிறோம். நம் கிராமியக் கலைகளை உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மூலம் பரப்ப முடிவெடுத்துள்ளோம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இதை நிறைவேற்றுவதே எங்கள் இலக்கு” என்கிறார்.

கீ போர்டு, கம்ப்யூட்டர் கலவை இல்லாத இசையில் தவில், உறுமி, நாகஸ்வரம், பம்பை, பறை உள்பட தமிழகப் பாரம்பரிய இசைக் கருவிகளுடன் இவர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தவிர நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு நம் பாரம்பரிய தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், மற்றும் சிறு தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தருகிறார்கள்.

“அருகிவரும் கிரமப்புறக் கலைகளை உலக நாடுகளில் கொண்டு சேர்க்கும் எங்களின் முயற்சிக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுப் பலன் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் தமிழ் உணர்வு கொண்ட அந்த வெளிநாட்டுப் பெண்கள்.

படங்கள்: எல்.மோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x