Published : 25 Sep 2016 12:37 PM
Last Updated : 25 Sep 2016 12:37 PM

வரலாற்றில் பெண்களுக்கு இடமில்லையா?

மார்க்ஸிய காந்தி… பெயர் மட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுத்த துறையும் கவனத்தை ஈர்க்கிறது. “இது திரு.வி.க. வைத்த பெயர்” என்று புன்னகைத்தபடியே வந்து அமர்கிற மார்க்ஸிய காந்தி, இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை கல்வெட்டு ஆய்வாளர். இவருடைய அப்பா நாராயணன், விடுதலைப் போராட்ட வீரர். “வ.உ.சி., திரு.வி.க. ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் அப்பா ஈடுபட்டிருக்கிறார்.

மார்க்ஸ், காந்தி இருவருடைய பாதை வெவ்வேறாக இருந்தாலும், வேர் ஒன்றுதான் என்று சொல்லி எனக்கு இந்தப் பெயரை திரு.வி.க. வைத்தாராம்” என்று பெயர்க் காரணம் சொல்கிறார் மார்க்ஸிய காந்தி. சென்னை நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டு வரவேற்பறையில் கல்வெட்டு மற்றும் அகழ்வாராய்ச்சி குறித்த புத்தகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

பொதுவாகவே இந்தியச் சூழலில் ஆராய்ச்சி நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள், அகழ்வாராய்ச்சி நடக்கும் இடங்களுடன் பெண்களின் பிம்பத்தைப் பொருத்திப் பார்ப்பது அரிது. அரிதினும் அரிதாகத்தான் மார்க்ஸிய காந்தியின் வருகையும் தொல்லியல் துறையில் நிகழ்ந்திருக்கிறது. எட்டையபுரத்தில் பிறந்த இவருக்கு இரண்டு அக்கா, ஓர் அண்ணன். அப்பா நாட்டுக்காகப் பாடுபட, வீட்டைத் தன் செவிலியப் பணி வருமானத்தால் நிர்வகித்திருக்கிறார் இவருடைய அம்மா ஆழ்வாரம்மாள். அம்மாவின் வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் காந்தி. மதுரை பாத்திமா கல்லூரியில் எம்.ஏ. தமிழிலக்கியம் படித்தார்.

“எனக்கு விலங்கியல் துறையில் விருப்பம் இல்லை. மீதி இருந்தது தமிழ் மட்டும்தான். அதனால் அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று சொல்லும் காந்தி, தமிழ் மீது தனக்குத் தனிப் பிரியமும் ஈடுபாடும் ஏற்படுவதற்கு தமிழாசிரியர் கணேசன் முக்கியக் காரணம் என்கிறார்.

தமிழிலிருந்து தொல்லியலுக்கு

கல்லூரி முடித்ததுமே, பல்வேறு கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அந்த நேரத்தில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் முதுகலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படும் ஓர் அறிவிப்பு வெளியானது. முதுகலை தமிழ் படித்தவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் மார்க்ஸிய காந்தியும் விண்ணப்பித்தார்.

“சென்னையில் நடந்த நேர்காணலில் கிட்டத்தட்ட 150 பேர் கலந்துகொண்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டுப் பேரில் நானும் ஒருத்தி. இப்படித்தான் தொல்லியல் துறைக்கும் எனக்குமான அறிமுகம் தொடங்கியது” என்று புன்னகைக்கிறார். அதற்குப் பிறகு தொல்லியல் என்னும் பிரம்மாண்ட உலகத்தில் விருப்பத்துடன் உலாவந்தார் காந்தி.

“அதுவரை தொல்லியல் துறை என்பதை வெறும் வார்த்தையாக மட்டுமே அறிந்திருந்த நான், அதன் பன்முகத்தன்மையால் ஆட்கொள்ளப்பட்டேன். பேராசிரியர் நாகசாமிதான் எங்களுக்கு வகுப்பெடுப்பார். இது வரலாற்றை ஆவணப்படுத்தும் துறை என்பதால் சங்க காலத்தில் தொடங்கி களப்பிரர், பல்லவர், பாண்டவர், சோழர், விஜயநகரப் பேரரசுவரை அனைத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எழுத்து வடிவங்கள் ரொம்ப முக்கியம். பிராமி, சித்திர எழுத்து, வட்டெழுத்து, தற்கால எழுத்து என்று அனைத்தையும் வேறுபடுத்தத் தெரிந்திருந்தால்தான் முதல் கட்டத்தைத் தொட முடியும்” என்று காந்தி விவரிக்கையில், மன்னர்கள் காலத்துக்குள் நுழைந்தது போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

தடம் பதித்த தருணம்

டிப்ளமோ படிப்பை முடித்த கையுடன் 1973-ம் ஆண்டு தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார் காந்தி. ஒவ்வொரு மாதமும் பத்து நாட்களாவது களப் பணியில் ஈடுபட வேண்டும். அதற்காகப் புராதனச் சிற்பங்கள் நிறைந்த கோயில்களுக்கு உதவியாளர்களுடன் செல்வார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பல கிராமங்களுக்குப் பேருந்து வசதிகூட இல்லை. பக்கத்து ஊர்களில் இருந்து வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு மண் சாலையில் பயணம் செய்ததை, அத்தனை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் காந்தி.

“என்கூட இன்னும் இரண்டு பெண் ஆய்வாளர்கள் பணியில் சேர்ந்தார்கள். நாங்க மூணு பேரும் சைக்கிள்ல வந்து இறங்கறதை கிராம மக்கள் ஆச்சரியமா பார்ப்பாங்க. அந்தக் கிராமத்துலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்குவோம். ஒரேயொரு லைட் மட்டும் எரியும். மத்தபடி வேறெந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது. ஆனா இந்தத் துறை மேல இருந்த ஆர்வத்துக்கு முன்னால, வேற எதுவுமே பெருசா தெரியலை” என்று சொல்லும் காந்தி, தன் பணிக் காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

தொல்லியல் ஆய்வு மிக நுட்பமானது. ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை அடுத்தடுத்த தலைமுறை எடுத்துச் செல்வார்கள். ஆனால் பானைகளும் செங்கற்களும் மட்டுமே மூதாதையர் வாழ்ந்த இடங்களில் விட்டுச் செல்லப்படும். அவற்றைச் சேகரித்து முன்னோர் வாழ்ந்த காலம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிக்க வேண்டும்.

“இது போன்ற சவால் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இந்தத் துறைக்கு வந்த பிறகு நிறைய படித்தேன். தொல்லியல் துறை குறித்த ஆவணங்களில் பெண்களின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்ற தேடல் ஏமாற்றத்தில்தான் முடிந்தது. அந்தக் காலத்தில் பெண்கள் கோலோச்சவில்லையா அல்லது அவர்களது சாதனைகள் புறக்கணிக்கப்பட்டனவா என்ற கேள்வியும் எழுந்தது” என்று சொல்லும் காந்தி, அரசிகளில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மங்கம்மாள் குறித்த பதிவுகள் மட்டுமே பெண்களின் வீரத்தைப் பறைசாற்றுகின்றன என்று குறிப்பிடுகிறார். ஒன்பது முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை ஆதிக்கத்தில் இருந்த தேவரடியார் பெண்கள் பற்றிய குறிப்புகளும் இருப்பதாகச் சொல்கிறார். இவை தவிரப் பெண்கள் குறித்த பதிவுகள் மிகக் குறைவு என்று வருத்தப்படும் காந்தி, மண வாழ்க்கை எந்த விதத்திலும் தன் பணி வாழ்க்கையைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார்.

ஒருமுறை தென்னார்க்காடு பகுதியில் ஜம்பை என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, தங்குவதற்கு இடம் இல்லாமல் அங்கிருந்த குடிசை வீட்டுத் திண்ணையில் ஓலைத் தடுப்புக்குப் பின்னால் தங்கியிருந்ததையும், திருக்கோவிலூர் சென்றிருந்தபோது கோயில் அர்ச்சகர் வீட்டில் தங்கிருந்ததையும் மறக்க முடியாது என்று சொல்கிறார். 33 வருடப் பணி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொல்லியல் துறை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகிறார். முதலாம் ராஜேந்திர சோழனின் மகன்கள் காலத்துச் செப்பேடுகளைத் தொகுக்க உதவியது, அதில் குறிப்பிடத்தக்கது. 86 செப்பேடுகளைக் கொண்ட இது, ஆசியாவின் மிகப்பெரிய செப்பேட்டுத் தொகுதி!

“இங்கே பலருக்கும் தொல்லியல் ஆர்வலருக்கும் ஆய்வாளருக்கும் வித்தியாசமே தெரிவதில்லை. தொல்லியல் குறித்து கொஞ்சம் பேசினாலே, அவர்கள் எதைப் பேசினாலும் ஆவணமாகப் பதிவுசெய்வது சரியல்ல. பரபரப்பாகப் பேசப்பட்ட சிலைத் திருட்டு வழக்கில் தொல்லியல் துறை சார்பில் அனுபவம் வாய்ந்த பதிவு அலுவலர்களை நியமிப்பதுதான் சரி. அவர்களால்தான் சிலைகளின் புராதனத்தைத் துல்லியமாக மதிப்பிட முடியும். ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள் இங்கே புறக்கணிக்கப்படுவது வேதனை தருகிறது” என்று தன் ஆதங்கத்தைப் பதிவுசெய்கிறார் மார்க்ஸிய காந்தி.

வழியனுப்ப வெளியே வந்தவர் தன் வீட்டு முன்னால் உதிர்ந்திருக்கிற மரமல்லிகளைப் பொறுமையாகச் சேர்த்தெடுக்கிறார். அதுவே ஒரு புராதனச் சிற்பம் போல மனக்கண்ணில் விரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x