Published : 19 Feb 2017 11:56 AM
Last Updated : 19 Feb 2017 11:56 AM

முகம் நூறு; நானே முதலாளி, நானே தொழிலாளி

சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஆட்டோவில் பயணம் செய்வதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனம் ஓட்டுவதையே அதிசயமாகப் பார்க்கும் வெளிநாட்டினர், சர்வசாதாரணமாக ஆட்டோ ஓட்டும் பெண் களைக் கண்டு பிரமித்துப் போகிறார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஆட்டோ ஓட்டுநர்களாக இருக்கும் பதிமூன்று பெண்கள் சாரதியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவருகின்றனர். கணவனை இழந்த பெண்களும் வறுமையில் வாடும் பெண்களும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து ஆட்டோ ஓட்டிவருகிறார்கள்.

கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் அகிலா, “இன்னைக்கு வீட்ல கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதிச்சாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும். அதனாலதான் ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். இந்த வருமானத்தால் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியுது வெளிநாட்டுக்காரங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வாகனம் ஆட்டோதான். அதிலும் நம்ப ஊர்ப் பெண்கள் ஆட்டோ ஓட்டுறதை ஆச்சரியமா பாக்குறாங்க. பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை உற்சாகப்படுத்தவே பலரும் எங்கள் ஆட்டோவில் வருவதாகச் சொல்லியிருக்காங்க” என்கிறார்.

தன்னைப் போன்ற பெண்கள் இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முக்கியக் காரணம் வறுமை என்று குறிப்பிடும் அகிலா, அதற்குத் தன் வாழ்க்கையையே உதாரணமாகச் சொல்கிறார். அகிலாவின் கணவர் குடித்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கணவர் இறந்துவிட, இரண்டு குழந்தைகளுடன் தனிமரமாக நின்றார்.

“என் வாழ்க்கையே கேள்விக்குறியா மாறிடுச்சு. அப்போ எனக்கு ஸ்பீடு டிரஸ்ட் மூலம் உதவி கிடைச்சுது. என் கணவர் இறந்த ஒரு வருடத்திலேயே எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுத்தாங்க. நானும் ஆர்வத்தோடு ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். எனக்கு இப்போ ஒரு தொழில் இருக்கிற காரணத்துலதான் என் பசங்களை நல்லபடியா படிக்கவைக்க முடியுது” என்று சொல்கிறார் அகிலா.

தற்போது குறைந்த கட்டணத்தில் நிறைய வாடகைக் கார்கள் கிடைப்பதால் முன்பு போல வருமானம் கிடைப்பதில்லை என்று சொல்கிறார் அகிலா. சில நேரம் வீட்டு வாடகை கொடுப்பதற்குக்கூடத் தட்டுப்பாடு இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

சென்னையில் உள்ள முக்கிய இடங்களான மாமல்லபுரம், மயிலை கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் சர்ச், மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா, உயர் நீதிமன்றம், நொச்சிக்குப்பம், கோட்டை, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இவர்கள் தங்கள் ஆட்டோவில் அழைத்துப் போகிறார்கள்.

மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான சுமதி, “என்னுடைய கணவர் என் மேல சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை செய்வார். மூணு குழந்தைகளோடு அம்மா வீட்டுக்கு வந்தேன். அப்போ நான் நிறைமாத கர்ப்பிணி. ஆனா கொஞ்ச நாளிலேயே என் அம்மா இறந்துட்டாங்க. அப்புறம் எங்க பாட்டிதான் எங்களைப் பார்த்துகிட்டாங்க. வயசான அவங்களால எனக்கும் என்னோட நாலு குழந்தைகளுக்கும் சோறு போட முடியல. அதுனால என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லிட்டாங்க. ஒரு நாள் நைட் ஒரு கோயில்ல குழந்தைகளோட தங்கினேன். அப்புறம் வேளச்சேரியில கம்பி வேலை செய்துட்டு இருந்த என் தம்பி என்னை டிரஸ்ட்ல சேர்த்தான். சேர்ந்த அன்னைக்கே ஒரு வீடு வாடகைக்குப் பார்த்து வைச்சாங்க. அப்புறம் ஆட்டோ ஓட்ட பயிற்சி கொடுத்து, ஆட்டோவும் வாங்கிக் கொடுத்தாங்க. இப்போ என் நாலு குழந்தைகளும் ஸ்கூலுக்குப் போறாங்க. யார் கிட்டேயும் கைகட்டி வேலை செய்யணுங்கற நிலைமை இப்போ எனக்கு இல்லை. என் தொழிலில் நானே முதலாளி நானே தொழிலாளி” என்கிறார்.

நட்புக் கரம் நீட்ட வேண்டிய ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள், பெண் ஓட்டுநர்களைப் போட்டி மனப்பான்மையுடனும், பெண்கள் ஆட்டோ ஓட்டுவதா என்ற ஏளனத்துடனும் பார்க்கும் சூழல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

“மத்தவங்க இப்படி சொல்றாங்களேன்னு தயங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடாது. பெண்கள் அதிக அளவில் ஆட்டோ ஓட்டுநர்களாக வரும்போதுதான் ஆண்களின் எண்ணம் மாறும்” என்கிறார்கள் இந்தத் தன்னம்பிக்கைப் பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x