Last Updated : 21 Apr, 2014 01:38 PM

 

Published : 21 Apr 2014 01:38 PM
Last Updated : 21 Apr 2014 01:38 PM

முகங்கள்: படிக்க வந்தேன்; பயிற்சி மையம் தொடங்கினேன் - சுஜாதா

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர் சுஜாதா. 2004-ம் ஆண்டு நடந்த நுழைவுத் தேர்வில் எம்.பி.சி பிரிவில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றார். முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும்போது திருமணம் முடிந்து, குழந்தைப்பேறுக்குத் தயாரானார். உடல்நிலையைச் சமாளித்துப் படிக்க நேரமில்லாததால் அந்த முறை முதன்மைத் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அந்தத் தோல்வியில் துவண்டுவிடாமல் அடுத்த வருடத் தேர்வுக்குத் தயாரானார்.

நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும்போதெல்லாம் பிரச்சினை தொடர்ந்தபடி இருந்தது. அம்மாவுக்குப் பக்கவாத பாதிப்பு, அத்தையின் மரணம் என்று ஏதோவொரு காரணம் சுஜாதாவின் ஐ.ஏ.எஸ். கனவைத் தகர்த்துக் கொண்டே இருந்தது. ஏன் தன்னால் முதன்மைத் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகமுடியவில்லை என்று யோசித்தார். அதற்கு விடையாகக் கிடைத்ததுதான் ‘இந்தியன் ஐ.ஏ.எஸ். அகாடமி’.

“என்னால் வீட்டையும் படிப்பையும் ஒழுங்காக சமன்படுத்தத் தெரியவில்லை. என்னுடைய இந்தச் சமநிலையின்மையும், சரியான நேரத் திட்டமிடுதல் இல்லாமையும்தான் என் தோல்விக்கான முதல் காரணங்கள். இதையெல்லாம் எனக்கு யாராவது கற்றுத் தந்திருந்தால் என்னால் நிச்சயம் வெற்றிபெற்றிருக்க முடியும். பாடங்களோடு உளவியல் அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய பயிற்சி மையம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. எது ஒன்றுமே இல்லை என்று புலம்புவதைவிட நாம் ஏன் அதன் ஆரம்பப் புள்ளியாக இருக்கக்கூடாது என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் குறித்த தேடலில் இறங்கினேன். இப்போது என்னவெல்லாம் இருக்கிறது, அதில் எதுவெல்லாம் மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற வரைபடம் எனக்கு ஓரளவுக்குப் புலப்பட்டது. 2008-ம் ஆண்டு சென்னையில் இந்தியன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்” என்று சொல்லும் சுஜாதா, தன் தந்தையின் தேசப்பற்றை நினைவுகூரும்விதமாகத் தன் பயிற்சி மையத்துக்குப் பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

“என் அப்பா ராணுவ வீரர். இந்திய - பாக் போரிலும், சீனப் போரிலும் பங்கேற்றவர். அவருடைய தேசப்பற்றைக் குறிப்பிடும்விதமாகவே ‘இந்தியன்’ என்று பெயர் வைத்தோம். இதுவரை எங்கள் மையத்தில் இருந்து பலர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளிலும், வங்கித் தேர்வுகளிலும் பலர் வெற்றிபெற்றுப் பதவிகளில் இருக்கிறார்கள். போட்டித் தேர்வுகள் தொடர்புடைய புத்தகங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம். ஒவ்வொரு புத்தகமும் தனித்தன்மையுடனும் போதுமான உள்ளடக்கத்துடனும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போது இருக்கும் புத்தகங்களில் விடுபட்டிருக்கிற விஷயங்களாகத் தேர்வு செய்து, முழுமையான வடிவில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்” என்கிறார் சுஜாதா.

இவர்கள் பயிற்சி மையத்தின் இன்னுமொரு சிறப்பு குரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு கலந்துரையாடல். பலருக்குப் பாடம் தொடர்பான அனைத்தும் தெரிந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு அதைச் சரியான விதத்தில் வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். சிலர் சரியாகச் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு எதிர்மறையாக வெளிப்படுத்துவார்கள். வேறு சிலருக்கோ, பாடம் தொடர்பாக முழுமையாகத் தெரியாவிட்டாலும் தங்கள் கருத்தைத் தெளிவுடனும் உறுதியாகவும் வெளிப்படுத்துவார்கள். இவர்களை இனங்கண்டு அதற்கேற்ப அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சிபெறும் மாணவர்களுக்கு உண்மையிலேயே இந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதா என்று தெளிவுபெற்ற பிறகே அவர்களுக்குப் பயிற்சியைத் தொடங்குகிறார்கள்.

“அதுதான் சரியான அணுகுமுறையும்கூட. இங்கே பல பெற்றோர்கள் தங்கள் கனவுகளைப் பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு என்னதான் பயிற்சியளித்தாலும் அது சரியான இலக்கைச் சென்றடையாது. அதனால் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் பேசிய பிறகுதான் பயிற்சியைத் தொடங்குவோம். மாணவர்கள் புத்தகங்களை மட்டும் நம்பியிருக்காமல் அன்றாட வாழ்வில் நடக்கிற சம்பவங்களையும் பாடத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கச் சொல்கிறோம். இந்த அணுகுமுறை நல்ல மாற்றத்தைத் தந்திருக்கிறது” என்று சொல்லும் சுஜாதா, போட்டித் தேர்வு தொடர்புடைய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

“வீட்டையும் படிப்பையும் சமன்படுத்தி அணுகத்தெரியாத நான் இன்று இந்தப் பயிற்சி மையத்தையும் என் வீட்டையும் கச்சிதமாகக் கையாளுகிறேன். இந்த ஆறு வருட அனுபவமும் நான் சந்தித்தப் பிரச்சினைகளும் அதற்கு உதவியிருக்கின்றன” என்று இழப்புகளையும் நேர்மறையாகவே பார்க்கிறார் சுஜாதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x