Published : 22 Mar 2015 01:00 PM
Last Updated : 22 Mar 2015 01:00 PM

பெண் சக்தி: போராட்டத்துக்கு என்றும் ஓய்வில்லை

அஜிதா. 1968-க்குப் பின் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரளத்தைச் சேர்ந்த போராளி. அதேபோன்ற புரட்சி உணர்வுடன் தங்கள் மகள்களும் வளர வேண்டும் என்பதற்காகக் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலரும் ‘அஜிதா’ என்றே பெயர் சூட்டினார்கள்.

இளம் வயதிலேயே ஆயுதமேந்திய வீராங்கனையாக அஜிதா மாறக் காரணம் அவருடைய பெற்றோர் மந்தாகினியும் குன்னிக்கல் நாராயணனும். இருவரும் நக்சலைட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள். களத்தில் சமூகப் பாடங்களைப் படித்த அஜிதாவுக்கு, ஏட்டுப் படிப்பு உவப்பாக இல்லை. ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும் என்ற தீ மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.

மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். கேரள நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து அஜிதாவும் ஆயுதம் ஏந்தினார். அந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் அவர் மட்டும்தான் என்பது, அவரது மனஉறுதியைப் பறைசாற்றும்.

புல்பள்ளித் தாக்குதல்

வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்தில் இருந்து விவசாயிகளை வெளியேற்ற 1968-ல் அரசு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தது. நிலத்தைவிட்டு வெளியேற மறுத்து ஏழாயிரம் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை முறியடிக்கக் காவல்துறை களம் இறக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய வர்கீஸ் தலைமையிலான நக்சலைட் குழு, புல்பள்ளி சிறப்பு காவல் முகாமைத் தாக்கியது. இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பின் நடந்த தேடுதல் வேட்டையில் தலைமை வகித்த வர்கீஸ் சுட்டு கொல்லப்பட்டார். அஜிதா கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தும் வகையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் காவலில் சித்திரவதைக்கும் உள்ளானார். புல்பள்ளித் தாக்குதல் வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அஜிதாவுக்கு 18 வயதுதான். சிறையில் இருந்த காலத்தில் கேரளத்தில் பெண்கள் எதிர்கொண்ட சிக்கல்களை, குறிப்பாகப் பாலியல் தொழிலாளிகள் சந்தித்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

மீண்டும் பொது வாழ்க்கை

‘நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்’ (எதிர் வெளியீடு) என்ற பெயரில் அவரது சுயசரிதை குளச்சல் மு. யூசுபின் மொழியாக்கத்தில் தமிழிலும் வெளியாகி உள்ளது. அவரது நக்சலைட் போராட்டம், சிறை அனுபவங்கள், பிற்காலத்தில் அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் போன்றவற்றுக்கான பின்னணிகளை இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. 27 வயதில் விடுதலையான பிறகு, முன்னாள் தோழர் யாகூபை மணந்தார்.

பத்து ஆண்டுகள் கழிந்தன. 1988-ல் மும்பையில் நடைபெற்ற மகளிர் இயக்கங்களின் மாநாட்டில் பங்கேற்றது அஜிதாவின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார். கோழிக்கோட்டில் ‘அன்வேஷி பெண்கள் ஆலோசனை மைய’த்தை 1993-ல் தொடங்கினார்.

பொது வாழ்க்கையில் அவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் அவருக்குள் எழுந்த தீ அடங்கிவிடவில்லை. அன்றைக்கு, அவருடைய மனதுக்குச் சமூக ஏற்றத்தாழ்வு முக்கியமாகத் தோன்றியது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் கடை நிலையில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கும், பாலியல் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது இன்றைக்கு அவருடைய செயல்பாடாக மாற்றம் கண்டிருக்கிறது. அவரது போராட்ட வடிவம் மாறியிருக்கிறதே ஒழிய, போராட்டம் ஒரு காட்டாற்றைப் போல வேகமாகப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.

‘பெண்கள் கேள்வி கேட்க வேண்டும்'

வா. ரவிக்குமார்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் ‘நீலம்’ அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டார் அஜிதா. அவரைச் சந்தித்துப் பேசியபோது பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பெண்களின் நிலை எல்லாக் காலத்திலும் மோசமாகவே இருந்து வருகிறது. இன்றைக்குப் பல பெண்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். ஆனால், நிலைமை மாறவில்லை. பெண்ணடிமைத்தனம் முன்பைவிட ஆழமாகி இருக்கிறது. ஒடுக்கும் முறைகள் மாறியுள்ளனவே தவிர, பெண்ணுக்கு எதிரான மனப்பான்மை மாறவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி யாரும் அவளை மனிதப் பிறவியாகப் பார்ப்பதில்லை. அவளுக்கு உடலும் ஆன்மாவும் இருப்பதாக நினைப்பதில்லை.

ஆண்களுடைய மனதும் சமூகத்தின் மனதும் ஆணாதிக்க அடிப்படையிலேயே இயங்குகின்றன. பெண்களைத் தனித்த ஆளுமைகளாகக் கருதுவதில்லை, தங்களது அடிமைகளாகவே நினைக்கின்றன.

பாலியல் தொழில் மாஃபியா

நாட்டிலேயே படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளத்திலும் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பெண்கள், இளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலைச் சொல்லலாம். பாலியல் தொழில், அதற்கான கடத்தல் என்று பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதில் அரசியல்வாதிகள், காவல்துறை, நீதித்துறை இடையே கள்ள உறவு நிலவுகிறது. இது ஒரு பெரும் மாஃபியா. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக வழக்குகூடப் பதியப்படுவதில்லை. அன்வேஷியில் எங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், இதைத்தான் சொல்கின்றன. கேரள முன்னாள் அமைச்சர்கள், அரசியல் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் பார்லர் வழக்கிலும் இதுதான் நடந்தது.

பெண்ணுக்கு எதிரான உடல் ரீதியிலான வன்முறை மட்டும், வன்முறை அல்ல. அறிவு ரீதியில் செலுத்தப்படும் ஒடுக்குமுறையும் திணிக்கப்படும் அடிமைத்தனமும் வன்முறைதான்.

பெண்ணுக்கு அறிவு உண்டு

பெண் அறிவுத்திறனுடன் சிந்திக்கக்கூடிய உடலைக் கொண்டவளாக எப்போதும் கருதப்படுவதில்லை. பெண்ணின் அறிவுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டால், அது அரசியல் அமைப்பை ஆட்டம் காணச் செய்துவிடும். தங்கள் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிவிடும் என்று ஆண்கள் அஞ்சுகிறார்கள். அதன் காரணமாகத்தான், முடிவு எடுக்கும் நடைமுறையில் பெண்களுக்கு எந்த இடத்தையும் வழங்காமல் ஆணாதிக்கச் சமூகம் இருந்துவருகிறது.

தங்கள் உரிமைகள் என்ன என்பது குறித்துப் பெண்கள் அறிந்திருக்க வேண்டும். தங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, சுரண்டலுக்கு எதிராகச் சமூகத்தை, அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் பிரச்சினைகள், இக்கட்டுகள் வரத்தான் செய்யும். அவற்றைத் தயங்காமல் எதிர்கொள்ள வேண்டும். உலகம், வாழ்க்கை, உறவு நிலைகள் என அனைத்துத் தளங்களிலும் தங்களுக்கான உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும். தங்கள் சுயத்துடன், சொந்தக் காலில் செயல்பட ஆரம்பித்துப் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கும்போது, உரிய மதிப்பு அவர்களுக்குக் கிடைக்கும்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x