Published : 22 Jan 2017 03:15 PM
Last Updated : 22 Jan 2017 03:15 PM

புதிய பாதை: அன்று புற்றுநோயாளி இன்று யோகா ஆசிரியர்!

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் ஸ்ரீலதா ஸ்ரீகுமார். தளராத தன்னம்பிக்கையால் யோகா கலை பயின்று, இப்போது அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக ஸ்ரீலதா இருக்கிறார்! தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களை ஆற்றுப்படுத்தி, எதையும் எதிர்கொள்கிற உறுதியுள்ளவர்களாக அவர்களை மாற்றும் சேவையில் ஈடுபட்டுவருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சியைச் சேர்ந்த ஸ்ரீலதாவின் வீட்டுக்குள் நுழைந்ததும் பெண்களின் கூட்டம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சிலருக்கு ஆலோசனைகளும் சிலருக்கு ஆறுதலும் சொல்லிக்கொண்டிருந்தார்.

“உங்களையெல்லாம்விட விரக்தியின் விளிம்பில் இருந்தவள் நான். ஆனால் இன்று எப்படி மன திடத்தோடு நிற்கிறேன் என்று பாருங்கள். தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை” என்று தன் சொந்த வாழ்க்கையையே அனுபவப் பாடமாக முன்வைக்கும் ஸ்ரீலதாவைப் பார்த்து நம்பிக்கை பெறுகிறார்கள் பெண்கள்.

ஸ்ரீலதாவின் கணவர் தொலைபேசித் துறையில் பணி செய்தவர். அவரது பணி நிமித்தம் இந்தியா முழுவதும் குடியிருந்தார்கள். ஸ்ரீலதா சிறு வயதிலிருந்தே உடல் ரீதியாகப் பல சுகவீனங்களைத் தாங்கி, இறுக்கமான சூழலிலேயே வாழ்ந்துவந்தவர். கல்லூரிக்குச் சென்று படித்திருந்தாலும் அவரை இனம்புரியாத பயமும் விரக்தியும் துரத்தின. வீட்டுக்கு யாராவது வந்தால்கூடப் பேச மாட்டார். நான்கு கருச்சிதைவுகளுக்குப் பிறகுதான் ஸ்ரீலதாவுக்கு முதல் பிரசவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து முகுகு வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று வாழ்க்கையில் பாதி நாட்கள் படுக்கையில்தான் கழிந்தன.

“தொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகளால் நான் எல்லோர் மீதும் கோபத்தைக் காட்டினேன். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளானேன். விரக்தியின் உச்சத்தில் இருந்தபோது, ‘வாழும் கலை மையத்தின் யோகா பயிற்சி’யில் சேர்ந்தேன். யோகா மூலம் உடல் ரீதியான சில மாற்றங்களை உணர முடிந்தது. மன இறுக்கம் காணாமல் போனது. எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உருவானது. உடல் வலுப் பெற்றது. என்னிடமிருந்த பயம் போன இடமே தெரியவில்லை” என்று சொல்கிறார் ஸ்ரீலதா.

ஸ்ரீலதாவுக்கு யோகாவில் ஆர்வம் அதிகரித்தது. யோகா ஆசிரியையாக மாறினார். அனைவருக்கும் தனது வாழ்க்கையையே பாடமாக்கி, அனுபவ ரீதியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்துப் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.

“எத்தனையோ உடல் நல பாதிப்புகள், மன நல பாதிப்புகளைக் கடந்து, சாதாரண பெண்ணாக இருந்த நான் அசாதாரணப் பெண்ணாக மாறிவிட்டேன். எனக்குக் கிடைத்த நல்ல விஷயங்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுவதைப் பார்க்கும்போது மனம் நிறைவடைகிறது” என்று சொல்கிறார் லதா.

படம்: என்.சுவாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x