Published : 19 Oct 2014 12:46 PM
Last Updated : 19 Oct 2014 12:46 PM

நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்

உலகம் முழுக்க முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆஸ்திரேலிய சகோதரிகள் சத்தமில்லாமல் ஒரு நல்ல செயலில் இறங்கினார்கள். பூரண ‘ஹிஜாப்’ தரித்து (உடல், தலையை மறைக்கும் ஆடை) அவர்கள், முஸ்லிம் பெண்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி தங்கள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் கசப்புணர்வைக் களையவும், சக முஸ்லிம் பெண்களுடன் நல்லிணக்கம் பேணவும் இந்தச் செயலில் இறங்கியவர்கள் பெண்கள்.

அனைவரும் முஸ்லிம் அல்லாத ஆஸ்திரேலியப் பெண்கள்! மலர்ச் செண்டுகளை அளித்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரத்துக்கும் கசப்புணர்வுக்கும் அவர்கள் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். “நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெறுப்புக்கு பதிலாக நாம் அன்பை பறிமாறிக் கொள்வோம்” என்று ஆறுதலும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுடனான நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 26 வயதாகும் அன்னாபெல்லி லீ. “அன்பையும், ஒற்றுமையையும் தோற்றுவிப்பதே இதன் நோக்கம்” என்கிறார் அன்னாபெல்லி.

ஆஸ்திரேலியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசித்துவருகிறார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. இதில் முஸ்லிம்களின் பங்கு 1.7 சதவீதம். செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று கேள்விக்குறியானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய காவல்துறையினர் வடமேற்கு சிட்னியில் 15 பேரை கைது செய்தது இன்னும் பிரச்சினையை மோசமாக்கியது.

இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததோடு குயின்ஸ்லாந்தின் வழிப்பாட்டுத்தலம் ஒன்றும் தாக்கப்பட்டது. அந்நாட்டின் தலைமை இமாமும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. மூன்று வாரத்தில் பெண்கள் மீதான 30 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். பெண்கள் வெளியில் தனியே செல்ல முடியாமல் பாதுகாவலர்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியொரு சூழ்நிலையில் அன்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்விதமாக முஸ்லிம் அல்லாத பெண்கள் ஹிஜாப் அணிந்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்கிறார்கள் ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள். நல்லதொரு மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கும் இந்தப் பெண்கள் பாராட்டுக்குரியவர்களே.

- இக்வான் அமீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x