Last Updated : 02 Mar, 2015 12:23 PM

 

Published : 02 Mar 2015 12:23 PM
Last Updated : 02 Mar 2015 12:23 PM

நாமெல்லாம் ‘கெட்ட’ பெண்களா?

இந்தியாவில் ஒரு பெண்ணை எப்படி ‘நல்ல’ பெண்ணாகவும், ‘கெட்ட’ பெண்ணாகவும் வரையறுக்கிறார்கள் என்பதை நையாண்டி செய்யும் விளக்கப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

இந்த விளக்கப்படம், இந்தியாவில் ஒரு ‘நல்ல’ பெண்ணை, ‘கெட்ட’ பெண்ணாக மாற்றும் பன்னிரண்டு பழக்கங்களை வரிசைப்படுத்துகிறது. ‘ஒரு கெட்ட பெண்’ என்ற தலைப்பில் பெங்களூருவில் இருக்கும் ‘ஸ்ருஷ்டி ஸ்கூல் ஆஃப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜி’ கல்லூரி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்கப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கடந்த வாரம், பேஸ்புக், டிவிட்டர், ரெட்டிட் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த விளக்கப்படம் பலதரப்பிலும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் வகுப்பறைகளில், எண்பதுகளில் ‘ஒரு சிறந்த பையன் - நல்ல பழக்கங்கள்’ (An Ideal Boy - Good Habits) என்னும் தலைப்பில் விளக்கப்படம் இடம்பெற்றிருந்தது. அதை மாதிரியாக வைத்துதான் ஃபர்கான் ஜாவத் என்னும் மாணவி, தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த ‘கெட்ட பெண்’ விளக்கப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

யாரெல்லாம் ‘கெட்ட’ பெண்கள்?

நீங்கள் உதட்டைப் பிதுக்குவீர்களா? அதிகமாக சாப்பிடுவீர்களா? உங்களுக்கு வட்டமாகச் சப்பாத்தி சுடத் தெரியாதா? கோவாவுக்கு பயணம் செல்வீர்களா? தலைமுடியை விரித்துவிட்டிருப்பீர்களா? குறைவாகச் சாப்பிடுவீர்களா? பூங்காவில் காதலிப்பீர்களா? வண்டி ஓட்டுவீர்களா? புகை, மது பழக்கம் இருக்கிறதா? பாலியல் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா? இது எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருக்கின்றதா? மேலே சொல்லப்பட்டிருக்கும் எந்த விஷயமாவது உங்களுக்கு இருக்கிறதா?

அப்படியானால் இந்தியாவில் நீங்கள் நிச்சயமாக ஒரு ‘கெட்ட’ பெண்ணாகத்தான் இருக்கமுடியும். இந்த விஷயங்களை வைத்துதான் இந்தியாவின் ‘ஆணாதிக்க’ சமூகத்தில் ஒரு பெண் ‘நல்ல’வளாகவும், ‘கெட்ட’வளாகவும் வரையறுக்கப்படுகிறாள் என்று அந்த விளக்கப்படம் நையாண்டி செய்திருக்கிறது.

அந்தப் படத்தை வெறும் நையாண்டியாக மட்டும் நினைத்து ஒதுக்கித்தள்ள முடியாமல் சுடும் உண்மைகள் பல அதில் அடங்கியிருக்கின்றன. அதில் சொல்லப்பட்டிருக்கும் ‘கெட்ட’ பெண்களின் பழக்கங்களோடு இன்னும் பலவற்றையும் குறிப்பிடமுடியும்.

‘அதிகமாகப் பேசும் பெண், ஆண் நண்பர்கள் இருக்கும் பெண், இரவு தாமதமாக வீட்டுக்கு வரும் பெண், சத்தமாக சிரிக்கும் பெண், அறிவுத் தளங்களில் நடக்கும் விவாதத்தில் கலந்துகொள்ளும் பெண், முட்டிக்கு மேல் ஆடையணியும் பெண், ஆண்களுடன் வண்டியில் பயணிக்கும் பெண்’ என்று இந்த ‘கெட்ட’ பெண்களின் பழக்கங்கள் இந்தியாவில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகின்றன.

பின்தங்கும் இந்திய பெண்ணியம்

இப்படி ஒரு பெண்ணின் இருத்தலையும், அவளது அடிப்படை செயல்பாடுகளையும் தொடர்ந்து கேள்விக்கேட்டு கொண்டிருப்பதன் சிறுவெளிப்பாடுதான் இந்த ‘கெட்ட பெண்’ விளக்கப்படம். இந்தியாவின் நவீன பெண்களும் இந்தப் படத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். ‘கெட்ட பெண்ணாக’ இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் வெகுஜன பெண்ணியம், இன்னும் ‘தந்தைவழி’ சமூகத்திடம் ‘பாலியல் சுதந்திரத்திற்காகப்’ போராடிக்கொண்டிருக்கும்போது, நவீன உலகின் பெண்ணியம் அதையெல்லாம் கடந்து எங்கோ சென்றிருக்கிறது. முதலாவது சாத்தியமாகும் போதுதான் இரண்டாவதைப் பற்றி யோசிக்கவே முடியும் என்னும் உண் மையை இப்போது அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

சர்வதேச பெண்ணியம், பணியில் சமத்துவமான ஊதியத்தைப் பற்றியும், ஆணுக்கும் - பெண்ணுக்குமான சமமான இனப்பெருக்க உரிமையைப் பற்றியும் இப்போது பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே இன்னும் பெண்களின் காதல் திருமணத்துக்கான உரிமைப் பற்றியும், ஜீன்ஸ் அணியும் உரிமைப் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மறுக்கப்படும் அரசியல் உரிமை

ஒருபுறம், இந்தியாவின் தலைநகரம் பெண்களின் சமூக இருத்தலைப் பாதுகாக்கக் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. மறுபுறம், இந்திய அரசியல் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கு எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப் படுவதில்லை. சர்வதேச அளவில் இந்தியா, பெண்களின் அரசியல் பங்களிப்பில் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

இந்திய அரசியலில், பெண்களின் சதவீதம் அதல பாதாளத்தில் இருப்பதால்தான் பெண்களின் பிரச்சினைகள் எதுவும் முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்படுவதில்லை. பாலின ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்தவரை, உலகில் இருக்கும் 142 நாடுகளில் இந்தியா 114-வது இடத்தில் இருக்கிறது. பெண்களின் பொருளாதார பங்களிப்பு, கல்வியுரிமை, ஆரோக்கியம் போன்ற விஷயங்களிலும் சராசரிக்கும் கீழேதான் இந்தியா இருக்கிறது.

பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார பங்களிப்பை உறுதிப்படுத்தவும் எந்த முயற்சிகளையும் எடுக்காமல் அவர்களை வெறும் ‘நல்ல’ பெண், ‘கெட்ட’ பெண் ஆகிய வரையறைக்குள் வைத்திருக்க மட்டுமே இந்திய சமூகம் விரும்பும் என்றால் அதற்கான விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.

நீங்க என்ன சொல்றீங்க?

நம் சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுகோலால் கெட்ட பெண், நல்ல பெண் என்று வரையறுக்கப்படுகிறாள்? இங்கே நல்ல பெண்ணுக்கான அடையாளம் எது? இது பற்றி உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x