Last Updated : 19 Oct, 2014 12:48 PM

 

Published : 19 Oct 2014 12:48 PM
Last Updated : 19 Oct 2014 12:48 PM

கண்ணீரை மீறி ஒளிரும் புன்னகை

கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், பெண்கள் வாழ்வின் மீதான அதன் தாக்கத்தையும் நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதிகாரப்பரவல், வறுமை ஒழிப்பில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் அணுகுமுறை ஆகிய பல விஷயங்களின் ஒட்டுமொத்தத் தாக்கம் பெண்கள் வாழ்வில் மிக நிச்சயமாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இந்தியா தொழில்நுட்பப் புரட்சியில் காலடி எடுத்து வைத்து, கல்லூரிகளில் கணினிக் கல்வியை அறிமுகப்படுத்தியபோதே பெண்களின் வாழ்வைப் பிணைத்திருந்த பிற்போக்குச் சங்கிலிகளின் பிடி தளரத் தொடங்கியது. அடுத்த கண்ணியைத் தொலைபேசிக் கம்பிகள் அறுக்கத் தொடங்கின. இவையிரண்டும் ஏற்படுத்தக்கூடிய மகத்தான தாக்கத்தைத் தெளிவாக உணர்ந்திருந்த அரசு, அதிகாரத்தைப் பரவலாக்கியதோடு 33 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கான இடத்தையும் உறுதிசெய்தது. இந்த முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தைத் தொடர்ந்து பொருளாதாரம் உலகமயமானது. அடுத்து வந்த இரு பத்தாண்டுகளில் இவை பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் அசாதாரணமானவை. (நன்றி: ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ்)

உலகமயமாக்கலுக்குப் பின் நிகழ்ந்த வேகமான தொழில் வளர்ச்சி பெண்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் பெண்களின் கடும் உழைப்பும், நுட்பமான அறிவும், மனித நேயம் சார்ந்த அணுகுமுறையும், பொறுப்புணர்வும் பெண்களே வேலைக்கான முதல் தேர்வாக உள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்திரா நூயி, சாந்தா கொச்சார் போன்றோர் இதற்கு உதாரணங்கள். தற்போது பொதுத்துறை நிறுவனங்களும் பெண்களின் திறமை மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் எஸ்பிஐ வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா.

பங்குச் சந்தை, உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள், அங்காடிகள், சுற்றுலா என்று சிறு தொழில்கள் முதல் சேவை, ஊடகம், ஆட்டோ மொபைல், ஜவுளி போன்ற பல முக்கியத் தொழில் நிறுவனங்கள்வரை தலைமையேற்று நடத்தும் தொழில்முனைவோராகப் பெண்கள் உருவாகியுள்ளனர்.

பிரிவினைவாதம், கலவரம், ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் பகுதிகள், சமூக விரோத சக்திகளை எதிர்கொள்வது என்று சவாலான அனைத்துச் சூழ்நிலைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர்.

ஊடகங்களில் பெண்கள்

ஊடகங்களின் எண்ணிக்கையும், சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. வெள்ளித்திரையில் மிகுந்த போராட்டங்களுக்கும், சிரமங்களுக்கும் இடையே முகம் காட்டிக்கொண்டிருந்த சில பெண்களைத் தாண்டி சின்னத்திரையெங்கும் பெண்கள் நிருபர்களாக, செய்தி வாசிப்பாளர்களாக, தொகுப்பாளர்களாக, விவாத மேடைகளின் ஒருங்கி ணைப்பாளர்களாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக, தொழில்நுட்ப ஆலோசகர்களாக, இசை அமைப்பாளர்களாக, நடிகைகளாக வலம் வருகின்றனர்.

முன்பெல்லாம் அச்சு ஊடகங்களில்கூடப் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள். பிறகு இந்த நிலைமை கொஞ்சம் மாறியபோதும், அரசியல், சட்டம் ஒழுங்கு, கலவரம் இந்தப் பக்கமெல்லாம் பெண்கள் எட்டிக்கூடப் பார்க்க முடியாது. இன்று நாடாளுமன்றம், சட்டமன்றம், பிரதமர் அலுவலகம், உள்துறை, வெளியுறவு, நிதி, பாதுகாப்பு அமைச்சகங்கள் போன்ற முக்கிய இடங்கள் பங்குச் சந்தை, விளையாட்டு, தொழிற்துறை, போர்முனை, கலவரப் பகுதிகள், வெளிநாட்டுப் பணிகள் என்று பெண் ஊடகவியலாளர்கள் போகாத இடங்களோ, துறைகளோ இல்லை.

பெண்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரச் சுதந்திரத்தோடு பாலியல் சுதந்திரத்தையும் அளித்திருக்கிறது. முன்பு பெண்கள் தங்கள் கணவரிடம்கூடப் பேசத் தயங்கிய பாலுறவு சார்ந்த விஷயங்களை வெளிப்படையாக விவாதிக்கிறார்கள், தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பற்றிய தெளிவோடு இருப்பதோடல்லாமல், வாழ்க்கைத் துணைவரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாற்றத்தின் மறுபக்கம்

இம்மாற்றங்கள் இந்தியாவில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் இன்னும் சாத்தியமாகிவிடவில்லை. இதே தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்பும், வெளியுலகத் தொடர்பும் எட்டாத எத்தனையோ லட்சம் பெண்களும் வறுமையிலும், சாதிய நுகத்தடிக்குக் கீழும் இன்னும் உழன்றபடியேதான் இருக்கிறார்கள். பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கடுமையான பாலியல் குற்றங்கள், அமில வீச்சு போன்றவை வர்க்க, சாதி, கிராமப்புற, நகர்ப்புற வித்தியாசமில்லாமல் பெண்களை அச்சுறுத்தி வருகின்றன.

வீட்டிலும், வீட்டிற்கு வெளியிலும் ஏராளமான போராட்டங்களைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஏற்றுக்கொண்ட குடும்பமும், சமூகமும் அதனால் ஏற்படுகிற அதீதப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை. பெண்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த அனைத்துப் பொறுப்புகளும் அவர்கள் மீதே மீண்டும் சுமத்தப்பட்டுவிட்டன.

பணிச்சூழல் காரணமாக நீண்ட நாட்களுக்குத் தாய்ப்பால் தர முடியாமை, குழந்தையோடு போதிய நேரம் செலவிட முடியாமை, நோய்வாய்ப் பட்டிருக்கும்போது முழுவதுமாகக் குணமாகும்வரை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள முடியாத சூழல் போன்றவை வேலைக்குப் போகும் தாய்மார்களிடம் மிகுந்த குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றன. பெண்கள் வேலைக்கும், உணர்வுப் போராட்டத்திற்கும் இடையே சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது.

வீட்டில் இருக்கும் நேரத்தைவிட அலுவலகத்தில் கழியும் நேரம் அதிகம். சக பணியாளர்களான ஆண்களோடு பணி நிமித்தம் நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளது. தொடர்ந்து ஒருவரோடு நீண்ட காலம் பணியாற்றும்போது சில நேரங்களில் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படும் சந்தர்ப்பங்களையும் பெண்கள் கடந்து வர வேண்டியிருக்கிறது. பெண்ணின் உணர்வுகளை எப்போதும் சந்தேகத்தின் நிழல் படிந்த கண்களோடு உற்று நோக்கும் சமூகத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கணினி, ஊடகம் போன்ற துறைகளில் வேலை செய்கிற பெண்கள் பதவி உயர்வு, போட்டிச் சூழலை முன்னிட்டுத் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றைத் தள்ளிப்போடவும் நேர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கணினி, ஊடகம் போன்ற துறைகளில் வேலை செய்கிற பெண்கள் பதவி உயர்வு, போட்டிச் சூழலை முன்னிட்டுத் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றைத் தள்ளிப்போடவும் நேர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் ஆகும்போதே அவை பெண்களுக்கு எதிராகப் பயன்படுகிற ஆயுதங்களாகக் கூர்தீட்டப்படும் சாத்தியங்களும் அதிகமாகிவருகின்றன. ஆனால் அதே தொழில்நுட்பத்தை நவயுகப் பெண்கள் இன்னும் கூர்மையான எதிர் ஆயுதமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதுதான் இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தின் வெற்றி.

எல்லா இடர்களையும், நெருக்கடிகளையும் தாண்டி நம்பிக்கை மிகுந்த நாட்களையே பெண்கள் இந்தத் தேசத்திற்குப் பரிசளித்திருக்கி றார்கள் என்பதும், பெண்கள் வாழ்வில் ஏற்பட்ட இந்தத் தாக்கம் கூண்டுகளை உடைத்துச் சிறகுகளை விரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத நிஜம்.

இக்கட்டுரையின் விரிவான வடிவத்தை ‘தி இந்து’ தீபாவளி மலரில் காணலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x