Last Updated : 16 Sep, 2014 07:40 PM

 

Published : 16 Sep 2014 07:40 PM
Last Updated : 16 Sep 2014 07:40 PM

எம்.எஸ் - கர்னாடக சங்கீதத்தின் ஆன்மா

செப்டம்பர் 16: எம்.எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள்

கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காக்கும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பிறந்த நாளும் இன்றுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் கச்சேரியும், முடிவுக் கச்சேரியும் நடந்தது சங்கீத வித்வத் சபை என்ற மியூசிக் அகாடமியில்தான். இந்த மியூசிக் அகாடமியின் தற்போதைய தலைவராக இருப்பவர் ‘தி இந்து’ குழுமத்தின் இணைத் தலைவர் என்.முரளி என்பது கூடுதல் தகவல். பிரபல கர்னாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். அம்மா என்று அன்புடன் கர்னாடக சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல, இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.

இவரது காலத்தில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும், இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவியதற்கு அவரது உழைப்புதான் காரணம் என்று அவரது கணவர் சதாசிவம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உணவுக்காவது, விரதம் இருந்தால் விடுமுறை விடுவது இவரது வழக்கம். ஆனால், பாடல் பயிற்சியை அனுதினமும் செய்வதால் அதற்கு மட்டும் விடுமுறையே கிடையாது. எம்.எஸ். பாட நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

ஆத்மநாதன்

(சதாசிவம் – எம்.எஸ். சுப்புலட்சுமி தம்பதியரின் ஐம்பது ஆண்டு கால உதவியாளர்)

எம்.எஸ் அம்மாவின் இனிய இசையை விட அவர் மிக இனிமையானவர் என்பது அவரது புகழ் வெளிச்சத்தில் மறைந்துதான் போய்விட்டது. எப்பொழுதுமே எளிமையானவர். பலரிடம் கீர்த்தனைகளைக் கற்றிருந்தாலும் ஒவ்வொரு கீர்த்தனையும் உயர்தரமாக இருந்ததற்கு, அவரின் சாதகமே காரணம். இதற்கான அவரின் உழைப்பு அசாத்தியமானது. அதற்கு உதாரணமாக ‘காலைத் தூக்கி நின்றாடும், குறை ஒன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய பாடல்களைக் கூறலாம். அவர் கச்சேரிகளில் தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே பாடினார். ஆனால், இதனைக் கேட்ட அனைத்து ரசிகர்களுக்கும் அந்த இசை ஆத்ம திருப்தியை அளித்து அவர்களின் நிலை உயரக் காரணமானது என்பதுதான் நிதர்சனம்.

இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர் இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர் மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு என்று சொன்னால் மிகையில்லை. அவரை அறிந்த நாளில் இருந்தே அவர்நல்ல ஆரோக்கியத்தில் இருந்தார் என்றுசொல்ல முடியாது. ஆனால், உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக ஒரு கச்சேரியைக் கூட அவர் வாழ்நாளில் ரத்து செய்தது இல்லை என்பது ஆச்சரியகரமானது. தன்னை விட இளைய இசைஞர்களின் இசையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை.

கெளரி ராம்நாரயணன்

(மூத்த பத்திரிகையாளர் (ஓய்வு) - தி இந்து)

பிரபல வாக்கேயக்காரர்கள் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடல்கள் இயற்றி இருக்க, அதனையே பலரும் பல முறை மேடைகளில் பாட அவை பிரபலமாகிக் கொண்டே வந்தது. தமிழ் இசைக்காக எம்.எஸ். செய்த சேவை தமிழ் இசை என்ற இயக்கமாகவே மாறிவிட்டது.

சுத்தானந்த பாரதியின் பாடல்கள் இவரது கணவர் சதாசிவத்துக்கு மிகவும் பிடித்திருந்த தால், கச்சேரியின் முதல் பாடலாக இருக்க ஹிந்தோள ராகத்தில் அமைந்த ‘அருள் புரிவாய் கருணைக் கடலே’ உகந்தது என்று கூறி இந்த தமிழ் பாடலை எடுத்துக் கொடுத்தார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல் தேனினும் இனிய அவரது குரலில், வெளிவந்து, மிகவும் பிரபலமடைந்தது. வாக்கேயக்காரரான பாபநாசம் சிவன் நேரடியாகவே தனது பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு கற்றுக்கொடுத்தாராம். இதனைக் குறிப்பிட்டு கூறிய எம்.எஸ், இது பெரும் கொடுப்பினை என்று ஒரு பேட்டியில் சொல்லி வியந்திருக்கிறார்.

கல்கியின் மகள் ஆனந்தியும், சதாசிவம் மகள் ராதாவும் இணைந்து அரங்கேற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, எம்.எஸ்.தான் வாய்ப்பாட்டு. அந்நாளில் `யாரோ இவர் யாரோ’ மற்றும் `ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ ஆகிய பாடல்கள் அவரது குரலின் இனிமையையும், கம்பீரத்தையும் பெற்று வலம்வந்தன. தமிழ் பாடல்கள் தன் தகுதியைப் பெறத் தொடங்கின. யதிகுல காம்போதியில், மத்யம சுருதியில் அவர் பாடிய `காலைத் தூக்கி’ என்றுதொடங்கும் பாடல் இன்றும் பிரபலம்தான். உச்ச ஸ்தாயியில் அவர் பாடிய `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற சுப்பிரமணிய பாரதியின் பாடலில் அவரது முழு சக்தியும் குடிகொண்டிருந்தது.

கல்கி சதாசிவம், சுப்பிரமணிய பாரதியின் பாடல்களுக்கு ரசிகர். ஒரு முறை கார்ப்ப ரேஷன் ரேடியோவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி பதிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, பிரிட்டிஷ் அரசு, பாரதியாரின் பாடல்களுக்குத் தடைவிதித்திருந்தது. அதனால் அப்பாடலைப் பாட ரேடியோ அனுமதிக்க வில்லை. அதனால் சதாசிவம், பாதியிலேயே அக்கச்சேரியை நிறுத்தி, எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி சொல்வதில் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆச்சரியகரமான ஆர்வம் கொண்டிருந்தார். இவர் பல மொழிகளில் பாடியிருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களைப் பிரபலப்படுத்தியது சரித்திரமாகிவிட்டது.

சபரி கிரிஷ்

(பாடகர், திருப்பதி இசைக் கல்லூரி விரிவுரையாளர்)

கீர்த்தனைகள்தான் எம்.எஸ். பாடுவார் என்றே எண்ணியிருந்த காலம். அப்போது வானொலியில் மீரா பஜன் ஒன்றை ஒலிபரப்பினார்கள். அவர் இசையில் பன்முகத் திறமை கொண்டவர் என்பதை அறிய வியப்பாய் இருந்தது. அது 1988-ம் ஆண்டு, எனக்கு 10 வயது. அப்போது புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பள்ளியில், ஆதிசங்கரர் இயற்றியவற்றை மட்டுமே கொண்ட கச்சேரி நிகழ்ந்தது. கச்சேரி முடிந்து அவர் எழுந்து நடந்து வந்ததைப் பார்த்தபோது, தேனினும் இனிய குரலில் பாடிய தேவதை நடந்து வந்ததுபோல் பிரம்மிப்பாக இருந்தது.

சென்னை சுந்தரத்தில் சாய் பாபா முன்னிலையில் பஜன் பாட, நாங்கள் கூடி இருந்தோம். அப்போது எம்.எஸ். அம்மா, சதாசிவம் மாமாவுடன் வந்திருந்தார். நாங்கள் பாடிய பஜனைப் பாடல்களை, வாங்கிப் பாடினார் எம்.எஸ். உலகளாவிய புகழ் கொண்ட கர்னாடக இசைப் பாடகி இவ்வளவு எளிமையாகக்கூட இருப்பாரா என்று ஆச்சரியமாக இருந்தது.

திருப்பதியில் எம்.எஸ். கச்சேரி அன்றைய தினம் மாலையில் இருந்தது. அதற்கு முன்னர் பெருமாள் தரிசனம் செய்ய முடிவுசெய்தனர் அத்தம்பதியர். அப்போது கூட்ட வரிசையை நிறுத்தி, வி.ஐ.பி தரிசனத்துக்கு வழிவிடும் வரை சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதிக்கு அருகே காத்திருக்க வேண்டிவந்தது. ஒரு கோணிப்பையை விரித்திருந்தார்கள் நிர்வாகத்தினர், அதில் முகமலர்ச்சியோடு அமர்ந்து காத்திருந்தார்கள் அத்தம்பதியினர். அவரது பகட்டில்லாத எளிய பக்திக்கு இதுவும் ஒரு சான்று. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி. கச்சேரியில் ‘ஹரி தும ஹரோ’ பாடல் இடம் பெற்றதைவிட ஆச்சரியம், மேடையேற பல படிகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் 89 வயது சதாசிவம் மாமாவும், 74 வயது எம்.எஸ். அம்மாவும் கைகோத்துக்கொண்டு, கிடுகிடு என்று படிகளில் ஓடி ஏறினார்கள். சங்கீதம் அவர்களுக்குத் தந்த சக்தி இது.

திருநீர்மலையில், மலை மீதுதான் தன்னை விட 15 வயது மூத்த சதாசிவத்தை எம்.எஸ். மணந்துகொண்டார். பின்னர், சதாசிவத்துக்கு 90-வது பிறந்தநாள் அன்று திருப்பதியில் நிர்வாகத்தினர் கொடுத்த மாலையினை இருவரும் மாற்றிக்கொண்டார்கள். அப்போது எம்.எஸ். முகத்தில் பளீரிட்ட வெட்கத்துக்கு அளவே இல்லை. திருப்பதி தயிர் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் சர்க்கரை கலந்து சாப்பிடுவார். பீமாஸ் ஹோட்டலில் தங்கியிருந்த எம்.எஸ். அங்கு ஆந்திரா ஸ்பெஷல் பெசரெட் தோசையும், இஞ்சி வெல்லச் சட்னியும் கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சித்தூர் புளி போட்ட ரசத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இறுதி நாட்களில் அவரை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டவர் ஆத்மாதான். அவரது கச்சேரிகளில் அவரும் பாடலும் வேறு வேறு என்று இல்லாமல் ஒன்றி இருந்ததுதான் அபூர்வமான மாயாஜாலத்தை உருவாக்கியது என்று சொல்ல வேண்டும்.

துக்கடாக்கள்

* தனது 88 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் இசை சாதனையைச் செய்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி என்றால் மிகையாகாது.

* எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சங்கீத கலாநிதி, பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டதில், அவ்விருதுகள் பெருமையடைந்தன என்றே சொல்லலாம். மீரா பஜன் என்றாலே எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவுகள்தான் ரசிகர்களின் நெஞ்சில் நின்றாடும். மீரா வேறு, எம்.எஸ். சுப்புலட்சுமி வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது குரல், மீராவின் பக்தி பாவத்துடன் இணைந்திருக்கும்.

* ஒரு கோயில் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பறை அறிவித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. கச்சேரியும் நல்ல களைகட்டிவிட்டது.

இக்கச்சேரியைக் கேட்க அரியலூரில் இருந்து ஒரு தம்பதியினர் 30 மைல், தூரம் நடந்தே வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கச்சேரி முடிந்துவிட்டது. அவர்கள் நடந்து வந்ததால் தூசியும் தும்பும் அப்பிய ஆடையுடன் பதறி அடித்துக்கொண்டு கச்சேரி நடக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். கச்சேரி முடிந்துவிட்டது என்பதைத் தாங்க முடியாத ஏமாற்றத்துடன் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அவர்களுக்காக இரவு 12 மணியைக் கடந்த பின்னும் ஒரு பாடலைப் பாடித் திருப்தி அளித்தார் எம்.எஸ். ரசிகர்களின்உணர்வுகளை இசையைப் போலவே மதிப்பவர் எம்.எஸ். என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x