Published : 19 Oct 2014 12:45 PM
Last Updated : 19 Oct 2014 12:45 PM

இரண்டு ரூபாயில் இருந்து இரண்டாயிரத்துக்கு!

மதுரை தெற்குவாசல் பகுதியில் வசிக்கும் மகாலட்சுமியின் வீட்டுக்குச் சென்றால் இரண்டு விஷயம் கிடைக்கும். ஒன்று பலவித கைவேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகான ஆடைகள், மற்றொன்று எப்போதும் மங்காத நம்பிக்கை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொள்கிற அற்புதம் கைவரப்பெற்றிருக்கிறார் மகாலட்சுமி. முதல் சந்திப்பிலேயே யாரையும் சிநேகமாக்கிவிடுகின்றன இவரது அன்புநிறை வார்த்தைகள்.

இளமையில் திறமை

பத்துக்குப் பத்து அளவில் இருக்கிறது அந்த வீடு. அதற்குள்ளேயே ஒரு ஓரத்தில் சமையலுக்கு எனச் சிறிய இடம். நான்கு பேர் சேர்ந்தாற்போல் உட்கார முடியாத இந்த இடத்தில்தான் தையல்மிஷினை வைத்து சுயமாகத் தொழில் நடத்திவருகிறார் மகாலட்சுமி. பதிமூன்று வயதில் தையில் மிஷினை மிதிக்கத் தொடங்கிய இவருடைய கால்கள் 34 வருடங்கள் கடந்தும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கின்றன.

“எப்பவுமே எதுக்காகவும் சோர்ந்து உட்கார்ந்துடக்கூடாது. அப்படி உட்கார்ந்துட்டா வாழ்க்கையில எந்த மாற்றமுமே இருக்காது” அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைச் சொல்கிற மகாலட்சுமிக்கு சொந்த ஊர் மதுரை. இவர் பிறந்த வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண் என பெரிய குடும்பம். அதனால் சிறு வயது முதலே குடும்பத்தின் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்க வேண்டிய பொறுப்பும் மகாலட்சுமிக்கு இருந்தது. முறைப்படி தையல் கற்றுக் கொண்டு, ஆர்டர் பிடித்து ஆடைகள் தைத்துக் கொடுத்தார். பதினைந்து வயதிலேயே 8 தையல் மிஷின்களும் ஒரு ஓவர் லாக் மிஷினும் வைத்து தையல் வகுப்பும் நடத்திய மகாலட்சுமியின் மன உறுதியையும் திறமையையும் வியக்காதவர்கள் குறைவு.

வறுமையை விரட்ட

தாய்மாமன் மகன் கண்ணனை மணந்த பிறகு வீட்டுவேலைகள் சரியாக இருந்ததால் தொடர்ச்சியான தையலுக்குச் சிறிது ஓய்வு கொடுத்தார். அவ்வப்போது சில துணிகளைத் தைத்துத் தருவதும் மகனையும் மகளையும் கவனித்துக் கொள்வதுமாகக் கழிந்தது பொழுது. நவீனமயமாக்கலும் உலகமயமாக்கலும் தங்க நகை செய்யும் தொழிலைச் செய்துவந்த மகாலட்சுமியின் கணவரது வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தன. தங்க நகை தொழிலில் மிஷின் கட்டிங் ஆதிக்கம் செலுத்தியதால் நகை செய்யும் தொழில் நசிந்தது. தன் கணவருக்குத் தொடர்ச்சியான வேலை கிடைக்காததால் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த மீண்டும் முழு மூச்சாகத் தையல் தொழிலில் இறங்கினார் மகாலட்சுமி.

“குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்துட்டாங்க. அதனால திரும்பவும் தைக்க உட்கார்ந்துட்டேன். நிறையப் பேரு என்கிட்டே புடவையைத் தந்துடுவாங்க. நான் அதுக்கு எந்த மாதிரி பிளவுஸ் போட்டா நல்லா இருக்குமோ அந்த டிசைனை சொல்வேன். அது அவங்களுக்குப் பிடிச்சிருந்தா அதே மாதிரி டிசைன் பண்ணித் தருவேன். அவங்க மனம் கோணாம இருந்தாதானே என்னை அடுத்த முறை தேடி வருவாங்க?” என்று யதார்த்தம் பேசுகிற மகாலட்சுமியைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

கைவேலை பலவிதம்

சிலர் வெளிநாட்டில் இருந்து வரும்போது அந்த வருடத்துக்குத் தேவையான துணிகளை மகாலட்சுமியிடம் கொடுத்து தைத்து வாங்கிச் செல்கிறார்கள். மும்பை, பெங்களூர், மலேஷியா என்று பலவிதமான கட்டிங் வகைகளையும் கற்று வைத்திருக்கிறார். தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தன்னுடைய நாத்தனாருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தன்னிடம் வரும் ஆர்டர்களில் எம்ப்ராய்டரி ரகங்களை அவருக்குப் பிரித்துத் தருகிறார்.

“நான் பிளவுஸ் தைக்கத் தொடங்கியபோது தைக்கூலியா 2 ரூபாய் வாங்கினேன். அது 4, 7, 10 ரூபாய்னு உயர்ந்து இன்னைக்கு 70 ரூபாய்ல வந்து நிக்குது. டிசைனர் பிளவுஸ் ரகங்களுக்கு வெளியே 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். என்னிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு வேலைபாடுகள் நிறைந்த பிளவுஸ் கிடைப்பதால் பலர் என்னைத் தேடி வர்றாங்க” என்று பெருமிதப்படுகிறார்.

குடும்பமே அச்சாணி

தனக்கு உதவியாக இருக்கும் கணவரையும் மகளையும் வார்த்தைக்கு வார்த்தை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

“என் வேலையில பாதி வேலையை என் வீட்டுக்காரரே செய்துடுவார். ஸ்டோன் ஒட்டறது, மணிகளைக் கோர்க்கறதுன்னு எல்லா வேலையும் செய்வார். கடைக்குப் போய் மெட்டீரியல் வாங்கிட்டு வருவார். நான் கொடுத்த டிரெயினிங்கால அவரே இந்த மாடலுக்கு இந்த மாதிரி டிசைன்தான் சரியா வரும்னு கச்சிதமா முடிவு பண்ணி பொருள்களை வாங்கிட்டு வருவார். ஒன்பதாவது படிக்கிற என் பொண்ணும் எனக்கு ரொம்ப உதவியா இருப்பா. நேத்துகூட வீட்டுப்பாடத்தை எழுதி முடிச்சிட்டு ஒரு டிரெஸ்ல மணிகளை அழகா ஒட்டிக் கொடுத்துட்டுத்தான் தூங்கினா. இந்த வயசுலேயே அவளுக்கு அவ்ளோ பொறுப்பு” என்று சொல்லும் மகாலட்சுமி தன்னைப் பற்றிய விமர்சனங்கள் அனைத்தையுமே ஒரே மாதிரிதான் எதிர்கொள்கிறார்.

“இந்த உலகத்துல எப்பவுமே நாலு பேர் நாலு விதமா பேசிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அதை நினைச்சா எந்த வேலையையும் உருப்படியா செய்ய முடியாது. பாராட்டிப் பேசினா சந்தோஷப்படுவேன். என்னை அவமானப்படுத்தற மாதிரியோ, குறைவாகவோ பேசினா அதைக் காதுலயே போட்டுக்க மாட்டேன். அதுதான் என்னை இப்ப மட்டுமில்ல, எப்பவுமே மகிழ்ச்சியாவும் நிறைவாவும் இருக்க முடியுது” என்று புன்னகையோடு சொல்கிறார் மகாலட்சுமி. அந்தப் புன்னகையோடு இசைந்தபடி பெய்கிறது மென்தூறல்.

தொடர்புக்கு: 09944964187

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x