Published : 29 Mar 2015 01:19 PM
Last Updated : 29 Mar 2015 01:19 PM

இந்தியாவுக்கே பாட்டி

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து குன்னங்குளம் - குருவாயூர் செல்லும் சாலையில் சுமார் 30-வது கி.மீ தொலைவில் உள்ளது பாறனூரு, சூண்டல். இங்கே இருக்கும் வாழேபிள்ளி ஹவுஸ் என்ற சின்னதொரு கூரை வீடு, குஞ்ஞன்னம் இறந்த பின்னும் வாழும் வீடாகக் காட்சியளிக்கிறது. குஞ்ஞன்னத்தின் மரணச் செய்தியைக் கேட்டு கேரளத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மட்டுமல்ல, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் என்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிலர் வந்து துக்கம் விசாரித்துச் செல்கிறார்கள். குஞ்ஞன்னம் பெரும் அரசியல் புள்ளியோ, ஊரறிந்த தொழிலதிபரோ இல்லை. அதைவிடப் பெரிய தகுதிக்குச் சொந்தக்காரர். ஆம், இந்தியாவின் மிக மூத்த பெண்மணி இவர். பிறப்புச் சான்றிதழுடன் (20.05.1903) 112 வருடங்கள் உயிருடன் இருந்தது இவராகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

இவரது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் யுபி பள்ளியில் ஐந்து வருடங்களுக்கு முன் நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்கிறார்கள். பள்ளிப் பதிவேடு மூலம் பழைய மாணவர்களைத் தேடியிருக்கிறார்கள். அப்படி அவர்களால் அடையாளம் காணப்பட்டவர் குஞ்ஞன்னம் அந்தோணி. அப்போதே அவருக்கு 108 வயது. இந்தச் செய்தி, பத்திரிகைகளில் வெளியானது.

வயதே சாதனை

“என் பையன் ஜேம்ஸும் அவனோட நண்பர்களும் அதை லிம்கா சாதனைக்கு அனுப்பினாங்க. லிம்கா அமைப்பினர் வந்து குஞ்ஞன்னத்தோட பிறந்த தேதி, ஸ்கூல் ரெக்கார்ட்ஸ் எல்லாம் பரிசோதிச்சுட்டுப் போச்சு. போன வருஷம் குஞ்ஞன்னம் தோள்பட்டை எலும்பு முறிஞ்சு சிகிச்சை எடுத்திட்டிருந்தப்ப, நாட்டிலேயே வயதான பெண்மணிங்கிற சர்டிபிகேட்டை ஆஸ்பத்திரியிலேயே கொண்டு வந்து கொடுத்துப் பாராட்டினாங்க. அதுக்குப் பிறகுதான் குஞ்ஞன்னத்தோட பேரு நாடு பூராவும் பரவிடுச்சு” - குஞ்ஞன்னத்தைப் பற்றி விவரிப்பதில் அந்தக் குடும்பத்துக்கே அலாதிப் பிரியம் என்பதை அங்கே காணமுடிந்தது.

தன் அண்ணன் கொச்சாப்பூவின் இரண்டாவது மகன் ஜோஸூவின் வீட்டில்தான் இறுதிக்காலம் வரை இருந்துள்ளார் குஞ்ஞன்னம்.

ஜோஸூ, “குஞ்ஞன்னத்தின் உடன்பிறப்புக்கள் மொத்தம் 11 பேர். அவர்களில் ஐந்து பேர் இறந்துட்டாங்க. மரியம்மா, தோமஸ், தாண்டம்மா, கொச்சாப்பூ, மாத்தூ, குஞ்ஞன்னம் மட்டும் இருந்தாங்க. பிறப்புல குஞ்ஞன்னம் 9-ம் ஆளு. இறப்புல கடைசி ஆளு. தாண்டம்மையும் குஞ்ஞன்னமும் விவாகம் செய்துக்கலை. இவருக்கு முன்னே மத்தவங்க ஐந்து பேரும் ரொம்ப காலம் முன்பே இறந்தாச்சு. கடைசியா மாத்தூ தன்னோட 70-வது பிராயத்துல 42 வருஷம் முன்னால இறந்தது” என்று குஞ்ஞன்னம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

குறையில்லா நல வாழ்வு

சிறு வயதிலேயே அப்பா, அம்மா இறந்துவிட்டதால் குஞ்ஞன்னத்தைக் கவனிக்க ஆளில்லை. அதனால் இரண்டாம் வகுப்பு வரையே படித்திருக்கிறார். எட்டு வயது வரை பள்ளிக்கூடத்தில் மணலில் எழுதிப் பழகியவருக்குக் கையெழுத்து போடத் தெரியும். செய்தித்தாள்களை எழுத்துக் கூட்டிப் படிப்பார். இறுதிவரை கண்ணாடியே போட்டதில்லை. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் இருந்ததில்லை.

“இந்த வீடு எங்க தலைமுறை தலைமுறையா 300 வருஷமா இருக்கு. அதுல அதிக வயசு இருந்தது குஞ்ஞன்னம்தான். இப்பக் கணக்குக்குப் பார்த்தா விவாகமே கழிச்சிராத குஞ்சன்னத்துக்கு மரியம்மா வகையில் 50 பேர், தாமஸ் வகையில் 20 பேர்,கொச்சாப்பூ வகையில் 10 பேர் இப்படி மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், கொள்ளு, எள்ளுப் பேரன், பேத்திகள்ன்னு 150 பேருக்கு மேல் இருக்கும்!” என்கிறார் ஜோஸூ.

குஞ்ஞன்னத்தின் பேத்தி,பேரன்கள் ஜீஸி, ஜேம்ஸ், ஜீசன் ஆகியோரும் தங்கள் பாட்டி குறித்து நெகிழ்ந்து போய்ப் பேசினர்.

“மீனு, கறி இறைச்சி, காய்கறி, பழங்கள் எல்லாமே பாட்டி சாப்பிடும். 40 வருஷத்துக்கு முன்னே இறைச்சியை மட்டும் விட்டுடுச்சு. ஆனா மீனும், காய்கறி, கஞ்சியை மட்டும் இடைவிடாம சாப்பிட்டது. அதுவும் சில வருஷமா குறைஞ்சிடுச்சு. எதுவுமே சாப்பிடாது. நாங்களா நிர்ப்பந்திச்சா மட்டும் கஞ்சியோ, கொஞ்சம் அன்னக்கூழோ, காபியோ சாப்பிடும். அதிக உயரமோ, குண்டாகவோ இல்லாத உடம்பு. கவலை, டென்ஷன் இல்லவே இல்லை. சின்ன வயசுல நாயர் வீட்டுல வேலை. அதுல அதுக்குச் சோறு கிடைக்கும், அதுக்கான துணிமணிக கிடைக்கும். பாடுபடறதை மத்தவங்களுக்கும் கொடுத்துட்டுத் தானும் சாப்பிட்டு வந்தது. கடைசிக் காலத்துலகூடச் சும்மாயிருந்ததில்லை. அங்கங்கே சாக்குப் பையைத் தூக்கிட்டுப் போய் இலை தழைகளை ரொப்பீட்டு வந்து வீட்டுல அடுப்பெரிக்க வைக்கும். ஓயாம அங்கேயும் இங்கேயும் நடந்துட்டே இருக்கும்.

அதுக்கு என்ன வயசுன்னு மட்டும் கேட்கக் கூடாது. கேட்டா 25 வயசுன்னு சொல்லும். யாராவது 90 வயசு, 100 வயசுன்னு சொன்னா மட்டும் கோபம் ஒரு பாடு வந்துடும். ஒரு முறை சைக்கிள் இடிச்சு ஒரு கை முறிஞ்சது. இன்னொரு முறை ஆட்டோவுல மோதி மற்றொரு கை முறிஞ்சது. அப்புறம் கீழே விழுந்து ரெண்டு கால்களும் முறிஞ்சிருக்கு. நாங்க பேசுவோம்ன்னு எலும்பு முறிவைப் பத்தி எங்ககிட்டே சொல்லாம மறைச்சிருக்கு. எண்ணெய் கட்டு போட்டு சரி செஞ்சிருக்கு. ஒரு வருஷம் முன்னால கட்டில்ல இருந்து இறங்கி இடுப்பு எலும்பு உடைஞ்சது. அதுக்குத்தான் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற வேண்டி வந்தது. அப்பயிருந்து வீட்ல படுக்கைதான். இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து இந்த வருஷம் 113-வது பிறந்தநாளைக் கொண்டாடலாம்ன்னு இருந்தோம். அதுக்குள்ளே இறந்துடுச்சு” என்றனர் கண்ணீர் மல்க.

கிடைக்காத அங்கீகாரம்

குஞ்ஞன்னத்தின் குடும்பத்தில் யாருக்கும் பெரிய வசதியில்லை. ஜோஸூ தேங்காய் மட்டை உரிக்கும் வேலை செய்கிறார். தினசரி 200 ரூபாய் கூலி கிடைக்கும். அவருடைய மகன்களில் ஒருவர் பெயின்டர். இன்னொருவர் டிஷ் ஆன்டெனா மாட்டும் வேலை செய்கிறார்.

“பத்திரிகைகள், இன்டர்நெட், வாட்ஸ்-அப், ட்விட்டர், ஃபேஸ்புக், யுடியூப்னு பல வகையில செய்தி தெரிஞ்சு பல்வேறு மாநிலங்களில் இருந்து யார் யாரோ வந்து அதிசயமாய்ப் பாட்டியைப் பார்த்துட்டுப் போனாங்க. ஆனா இங்க இருக்கிற வி.ஏ.ஓ, தாசில்தார், கலெக்டர், மந்திரிகள்னு யாருமே குஞ்ஞன்னத்தோட இறப்புக்குக்கூட வரலை. முதியோர் பென்ஷன் விண்ணப்பிச்சதுல அரசாங்கம் மூலம் 15 வருஷம் முன்னாலதான் வந்தது. அதுவும் 60 ரூபாயில் தொடங்கி சமீபத்தில்தான் ஐநூறு ரூபாயா உயர்ந்தது. அதுவும் கடைசிக் காலத்தில் சரியாகக்கூடக் கிடைக்கலை” என்று அவரது குடும்பத்தினர் சொன்னபோது, ஒரு மூத்த குடிமகளுக்குக் கிடைத்த புறக்கணிப்பை நினைத்து வேதனையாக இருந்தது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x