Last Updated : 31 May, 2015 11:27 AM

 

Published : 31 May 2015 11:27 AM
Last Updated : 31 May 2015 11:27 AM

யசோதாவின் நாட்குறிப்பிலிருந்து!

பொதுவாக சுயசரிதை என்பது சமூக அளவில் சாதனை படைத்தவர்கள் எழுதி வைத்ததாகத்தான் இருக்கிறது. சாதாரண இல்லத்தரசியாக வாழ்ந்த யசோதா தனது எழுபதாவது வயதில் கடந்த கால அனுபவங்களை நோட்டுப் புத்தகம் ஒன்றில் எழுதத் தொடங்கினார். அடித்தல் திருத்தல் இன்றி எழுதப்பட்ட அவரது சுயசரிதை 96 வயதில் அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தாரால் படிகள் எடுக்கப்பட்டு நெருங்கிய உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் மட்டும் வாசிக்கக் கிடைத்தது.

1916-ம் ஆண்டு பிறந்தார் யசோதா. அவர் தந்தை கால்நடை மருத்துவர். இளம் வயதில் அவரது குடும்பம் திருவண்ணாமலையில் வசித்திருக்கிறது. தான் வாழ்ந்த சூழ்நிலை, அப்போது நிலவிய விலைவாசி, கோயில் திருவிழாக்கள், தெருக்களின் பெயர்கள், அந்தப் பெயர்களுக்கான காரணங்கள், பள்ளிச் சூழல் என்று அனைத்தையும் சுவாரசியமாகத் தனது சுயசரிதையில் விவரிக்கிறார் யசோதா.

யசோதாவின் வாழ்வோடு கால மாற்றங்களும் பதிவாகியிருக்கின்றன. இளம் வயதில் தாம் பார்த்த நாடகங்களை வசனங்களுடன் நினைவுகூர்கிறார் யசோதா. கிராமபோன் அறிமுகமானபோது அதைக் கண்டு வியந்திருக்கிறார்.

சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது முதன்முதலில் மின்சார விளக்கைப் பார்த்த யசோதா பள்ளியில் தோழிகளிடம் விவரித்திருக்கிறார். “பட்டனை அழுத்தினால் விளக்கு எரியுமாம். நல்ல கற்பனைதான்” என்று கேலி செய்தார்களாம்.

பள்ளியில் ராஜ வாழ்த்து

அது காலனி ஆதிக்கக் காலம். பள்ளிக்கூடத்தில் இறை வணக்கத்துடன் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைக் குறித்து ராஜ வாழ்த்து பாடும் வழக்கம் அப்போது இருந்ததாம். இரண்டு மூன்று தலைமுறைகளாகப் படித்தவர்கள் நிறைந்த குடும்பம் என்பதால் யசோதாவுக்குக் கல்வி, இசைப் பயிற்சி, தேவாரம், திருவாசகங்களை மனப்பாடம் செய்தல் என்று அத்தனை விஷயங்களிலும் உற்சாகமூட்டும் குடும்பம் வாய்த்திருத்து.

குழந்தைத் திருமணம் நிலவிய காலம் அது. பள்ளிக்குத் தாலி அணிந்துவரும் சிறுமிகளுக்குள் சண்டை ஏற்படும்போது ஒருவருக்கொருவர் தாலியைப் பிடித்து இழுப்பதும், அறுந்த தாலியை டீச்சர்கள் கட்டிவிடுவதும் சகஜமாம்.

ஓயாத வீட்டு வேலைகள்

அந்தக் காலத்துக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது ?

“அப்போது எல்லோரும் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தார்கள். உதாரணத்துக்கு எங்கள் பக்கத்து வீட்டு சதாசிவ முதலியார் குடும்பத்தைப் பற்றி எழுதுகிறேன். நாங்கள் இருந்த வீட்டுக்கு அவர்தான் சொந்தக்காரர். நிறைய நிலங்கள், பாத்திரக் கடை, ஜவுளிக் கடை எல்லாம் உண்டு. சதாசிவ முதலியார் இறந்துவிட்டார். அவர் மனைவி பாட்டியம்மாள்தான் குடும்பத் தலைவி. அந்த வீட்டில் அவருடைய ஐந்து மகன்கள், ஐந்து மருமகள்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து அல்லது ஆறு பசங்கள் என்று வீடு நிறைந்திருக்கும்.

காலை நாலரை மணிக்கு எழுந்து வெந்நீர் அடுப்பை மூட்டிக் குளித்து முடித்து அடுப்பங்கரைக்குப் போவார்கள். குளிக்காமல் போகக் கூடாது. ஒருவர் காப்பி தயாரிக்க, ஒருவர் இட்லி செய்ய, ஒருவர் சட்னி அரைக்க, ஒருவர் பாத்திரங்களைத் துலக்க, ஒருவர் பூஜை அறையை அலங்கரிக்க என்று சுறுசுறுப்பாக இயங்குவார்கள். ஆண்கள் குளித்துப் பூஜை முடித்துவிட்டு வந்ததும் டிபன் காபி பரிமாறுவார்கள். ஒரு மருமகள் பசங்களை எழுப்பிக் குளிக்க வைத்துத் துணி உடுத்துவார். இன்னொரு மருமகள் டிபன் கொடுத்துப் பள்ளிக்குத் தயார் செய்வார். மற்றொரு மருமகள் சிறிய குழந்தைகளுக்குப் பால் புகட்டிக் குளிக்கத் தயார் செய்வார். ஆண்கள் கடைக்குச் சென்ற பிறகு வீட்டுப் பெண்கள் டிபன் சாப்பிடப் பத்து மணி ஆகும்.

வீடுகளில் பண்டமாற்று

இதற்குள் வீட்டுப் பெரியவரான பாட்டியம்மாள் குளித்து, பூஜை, டிபன் முடித்து விபூதிப் பட்டையோடு சிவப்பழமாகக் கால்படி அரிசியும் முறங்களுமாகத் தெரு திண்ணையில் உட்கார்ந்துவிடுவார். கீரைக்காரி போவாளேயானால் கூப்பிட்டு ஒரு பிடி அரிசியைக் கொடுப்பார்கள்.

அவள் அதைத் தன் பையில் கொட்டிக்கொண்டு முறம் நிறைய கீரையை அழுத்தி அழுத்தித் தருவாள். பிறகு காய்கறிக்காரி வருவாள். அரிசியைக் கொடுத்து வெண்டைக்காய், கத்தரிக்காய் எல்லாம் வாங்கிய பிறகு இன்ன சமையல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுவிட்டுச் சமையல் கட்டுக்கு அனுப்புவார்கள்.

ஒருவர் உலை வைக்க, ஒருவர் கீரை ஆய, ஒருவர் காய் நறுக்க என்று சமையலை முடித்து ஆண்களுக்குச் சாப்பாடு கட்டி அனுப்புவார்கள். மாமியாருக்குச் சாப்பாடு போட்டுவிட்டு மருமகள்கள் சாப்பிட இரண்டு மணியாகும். இரண்டிலிருந்து மூன்றுவரை ரெஸ்ட். ஆனால் தங்கள் அறைக்குப் போய்ப் படுக்கக் கூடாது. படுத்தால் மறுபடியும் குளிக்க வேண்டும். ஆகையால் பின்கட்டில் பாய் விரித்து மணைக் கட்டைகளைத் தலைக்கு வைத்துப் படுப்பார்கள்.

சிறிது நேரத்தில் எழுந்து முகம் கழுவிக் கொண்டு வேலையை ஆரம்பிப்பார்கள். ஒருவர் காப்பி போட, ஒருவர் இட்லிக்கு அரைக்க, ஒருவர் எந்திரத்தில் பருப்பு பொடி அரிசிமாவு என்று எதையாவது அரைக்க, ஒருவர் ராந்தல், காடா விளக்கு, தொங்கும் விளக்கு, சுவரில் மாட்டும் விளக்கு எனப் பலவித விளக்குகளை எடுத்துச் சிம்னியைத் துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றித் தயார் செய்வார்கள். இதற்குள் பாட்டியம்மாளிடமிருந்து இரவு சமையலுக்கு உத்தரவு வரும். சமையல் முடித்து விளக்குகளை ஏற்றி அதனதன் இடத்தில் வைத்துவிட்டுப் பூஜை விளக்கை ஏற்றிச் சாமி கும்பிடுவார்கள்.

பள்ளியிலிருந்து வந்து விளையாடப் போன சிறுவர் சிறுமிகள் வீட்டுக்கு வந்து கை, கால் அலம்பி விபூதியணிந்து சாமி கும்பிட்டுப் பிறகு ராந்தல் விளக்கை வைத்துக்கொண்டு பாடம் படிப்பார்கள். அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு சமையலறையைக் கழுவி, அடுப்பைச் சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டுவிட்டுத் தூங்கப்போவதற்குப் பதினோரு மணிக்கு மேல் ஆகிவிடும்.

விலக்கின் போதும் விடாத பணிகள்

இதன் நடுவில் வீட்டுப் பெண்கள் ஒருவர் மாற்றி ஒருவராக மாத விலக்காகித் தோட்டத்து வராந்தாவில் உட்கார்ந்திருப்பார்கள். அப்போதாவது ஓய்வாக இருப்பார்களா என்றால் இல்லை. கூடை கூடையாகப் புளியை ஆய்ந்து கோது எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். இல்லையென்றால் தென்னங்கீற்றைக் கிழித்துத் துடைப்பம் கட்ட வேண்டும்.

வெயில் காலத்தில் வற்றல், அப்பளம், வடகம் செய்வது, வருஷத்துக்கு வேண்டிய தானியங்களை வாங்கி உடைத்துச் சீர் செய்வது, ஊறுகாய் போடுவது என்று ஓயாமல் வேலை செய்வார்கள்.”

இவ்வாறாகக் கூட்டுக் குடும்பங்களில் பெண்களின் அயராத பங்களிப்பை விவரித்திருக்கிறார் யசோதா.

திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்களை வளர்த்து ஆளாக்கிய யசோதா பேரன் பேத்திகளின் வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்து மாற்றங்களை ஒப்பிடுகிறார். இவற்றில் அவரது வெளிநாட்டு அனுபவங்கள், எரிமலை, பூகம்பம், புயல் போன்ற நிகழ்வுகளும் முக்கியப் பதிவுகளாக இருக்கின்றன.

மறைந்துபோன மனித மாண்புகள்

எறும்புப் புற்றுக்கு அரிசி போடுவதும், பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பதும், காக்கைக்கு உணவளிப்பதுமான வழக்கங்களைப் பின்பற்றி எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கும் அந்தக் கால மனோபாவத்தை நுகர்வு கலாச்சாரம் ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலத்துடன் ஒப்பிட்டு வருத்தம் தெரிவிக்கிறார் யசோதா.

அரசியல் இயக்கங்கள் அவரைக் கடந்து போயிருக்கின்றன. ஆனாலும் அவற்றை அவர் விவாதிக்கவில்லை. தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் அவர் அதிகம் பதிவு செய்யவில்லை.

ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து பயணம் செய்யும் உற்சாகமான ஒரு சிறுமியின் பார்வையில் தன்னைக் கடந்துபோன விஷயங்களை அவர் விவரித்திருக்கிறார். அவரது புத்திக் கூர்மையும் நினைவாற்றலும் பிரமிக்கத்தக்கதாக இருக்கின்றன.

மூன்று தலைமுறையில் மாறிப்போன வாழ்க்கைச் சூழலையும், விஞ்ஞானத் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், மருத்துவ அதிசயங்களையும், மாறாத சில நம்பிக்கைகளையும் ஒரு பார்வையாளரைப் போல் அவர் பதிவு செய்திருப்பது படிப்பதற்குச் சுவாரசியமாகவே இருக்கிறது. தனிநபர் வரலாற்றுப் பதிவுகள் கவனம் பெறும் இன்றைய காலகட்டத்தில் யசோதாவின் பங்களிப்பு முக்கியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x