Published : 15 Jul 2018 10:05 AM
Last Updated : 15 Jul 2018 10:05 AM

வாசகர் வாசல் : படிப்புடன் பண்பும் வேண்டும்

என் பள்ளி நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் மனம் இன்ப மழையில் நனைந்துவிடும். 55 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பள்ளி நாட்கள் என் மனத்தில் பசுமையாக நிறைந்திருக்கின்றன. அப்போது, முதுகு வலிக்கப் புத்தகப் பையைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டுக்கு வந்ததும் கை வலிக்க வீட்டுப் பாடம் எழுத வேண்டியதும் இல்லை. பள்ளிக்குச் செல்லப் பயந்ததில்லை, புராஜெக்ட் வொர்க் என்று அம்மாவைப் படுத்தியதில்லை. என் பள்ளி வாழ்க்கை அப்படித்தான் என் வாழ்வின் இன்ப ஊற்றாக இருந்தது.

ஆனால், இன்றோ வீடுகளே பள்ளிகளாகிவிட்டன. நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் இன்றும் என் நினைவில் நிறைந்துள்ளார்கள். ஆசிரியர்களாக மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாகவும் அவர்கள் இருந்தார்கள். படிப்பில் மட்டுமல்ல; எங்கள் உடல்நலத்திலும் அவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.

அன்று படிப்பு சார்ந்த வகுப்புகளுடன் நல்லொழுக்கம், பொது அறிவு, ஓவியம், பாட்டு, தையல் எனத் தினமும் ஏதாவது ஒரு சிறப்பு வகுப்பு இருக்கும். இத்தகைய வகுப்புகளுக்குத் தனித் தனி ஆசிரியர்கள் இருப்பார்கள். எனக்குப் பாடத்தைவிடத் தையல் வகுப்புதான் பிடிக்கும். என் ஆர்வத்தைக் கவனித்த செல்லமணி டீச்சர், எம்ப்ராய்டரி செய்யக் கற்றுத் தந்தார்.

அப்போது கற்றுக்கொண்ட எம்ப்ராய்டரி பயிற்சி எனக்குப் பின்னாளில் உதவியது. புடவைகளுக்கு எம்பிராய்டரி போட்டுக் கொடுப்பதைச் சிறிது காலம் செய்துவந்தேன். அதில் கணிசமான வருமானமும் கிடைத்தது. ஆனால், இப்போது கல்வி நிறுவனங்கள் வியாபாரக் கூடங்களாக மாறிவிட்டன. கல்வி அதன் சேவைத் தன்மையை விரைவாக இழந்துவருகிறது.

பெற்றோரின் கடமை

மாணவர்களின் சுகாதாரம் குறித்துகூடத் தற்போதைய கல்வி நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. என் பேத்திகளும் இது போன்ற பிரச்சினைகளைத் தினமும் சந்தித்துவருகிறார்கள். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் அவர்கள் பள்ளிகளில் அனுபவிக்கும் கஷ்டங்களை எழுத வார்த்தைகள் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் படிப்பது அதிகப் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளியில்தான்.

குழந்தைகள் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளிகளில் அவர்களுக்கு ஏற்படும் மற்ற பிரச்சினைகள் பற்றியும் பெற்றோர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் நல்லொழுக்கத்தைப் பெற்றோர் வளர்க்க வேண்டும். ஆரோக்கியத்தின் அவசியத்தை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். வயதுக்கு ஏற்ப வீட்டு நிர்வாகத்தைத் தெரிந்துகொள்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். படிப்பைவிட இவை அனைத்தையும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பெற்றோரின் முக்கியக் கடமை. படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும்படி பிள்ளைகளை வளர்ப்பதைவிடச் சமுதாயத்தில் அதிக மதிப்பு பெறும்விதமாகப் பிள்ளைகளை வளர்ப்பதில்தான் பெற்றோரின் கவனம் இருக்க வேண்டும். அத்தகைய பெற்றோரே இன்றைய சமூகத்துக்கு அதிகம் தேவை.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். அதனால் தயங்காமல் எழுதுங்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x