Published : 28 Jan 2018 11:50 AM
Last Updated : 28 Jan 2018 11:50 AM

முகம் நூறு: விருது பெற்றுத்தந்த மயான பூமி

கரி படிந்த சுவர்கள், புகை போக்கி வழியாக வெளியேறிக்கொண்டியிருக்கும் கரும்புகை, கருகும் வாடை, மனதை உலுக்கும் அழுகை இவற்றுக்கு நடுவே மின் மயானத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரவீனா சாலமன். பெற்ற பிள்ளையோ கணவனோ இறந்தால்கூடப் பெண்கள் மயானத்துக்கு வருவது இப்போதும் அரிதாக உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் மயானத்தின் பராமரிப்புப் பணிகளைக் கவனித்துவருகிறார் அவர்.

பெரும்பாலும் ஆண்களே பணியாற்றிவந்த மயானப் பணிகளில் பெண் ஒருவர் முதன்முறையாக பணியற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சவாலான துறையில் சாதித்த முதல் பெண் என்ற தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் பிரவீனா. தற்போது அவர் ஆலந்தூர் மின் மயானத்தில் பணிப் புரிந்து வருகிறார்.

சிறுவதிலிருந்தே துணிச்சல் பெண்ணாக வளர்ந்த பிரவீனா, தனக்குத் தவறு என்று பட்டதைத் தைரியமாகக் கேட்டுவிடுவாராம். செவிலியர் பயிற்சி முடித்திருக்கும் இவர், விரும்பத்துடன்தான் இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மனநிறைவு தந்த சேவை

மூட்டு வலி காரணமாக செவிலியர் வேலையை இவரால் தொடர முடியவில்லை. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தவருக்கு அவருடைய அம்மா விஜயலட்சுமி ஊக்கம் அளித்தார்.

“அவங்க சென்னை மாநகராட்சியில் அறிவொளி இயக்கத்தில் இருந்தாங்க. அதனால ஒரு சில தொண்டு நிறுவனங்களோட அறிமுகம் அம்மாவுக்கு இருந்தது. எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஐ.சி.டபுள்யூ.ஓ. (Indian Community Welfare Organisation) என்ற தொண்டு நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. அங்கு சேர்ந்த பிறகுதான் என் பார்வை விசாலமானது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் மத்தியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதும் அவர்களின் மனக்குறையைக் கேட்டு ஆறுதல் சொல்வதும்தான் என் வேலை.

அது எனக்கு நிறைவா இருந்தது. அப்போதான் மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள சில மின் மயானங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தப் பணி எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. தொண்டு நிறுவன செயலாளர் ஹரிஹரன், பெண்கள் மின் மயானத்தைப் பராமரித்தால் நல்லா இருக்கும்னு சொன்னதுடன் இருபது பெண்களை அழைத்துப் பேசினார். அதுல நான் மட்டும்தான் இந்த வேலையைச் செய்ய முன்வந்தேன்” என்கிறார் பிரவீனா.

முதல் நாள் பட்டினி

அண்ணாநகரில் உள்ள வேளங்காடு மின் மயானத்தில் கடந்த 2014-ல் வேலைக்குச் சேர்ந்தார். இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சாங்கியங்களும் சம்பிரதாயங்களும் கிறிஸ்தவப் பெண்ணான தனக்குப் புதிதாக இருந்ததாகச் சொல்கிறார் அவர். “நான் பயந்த சுபாவம் கொண்டவள். இருட்டைப் பார்க்கவே மாட்டேன். முதன்முறையா இடுகாட்டில் நுழைந்தது திகிலா இருந்தது. அந்த மயானத்தில் நான் ஒருத்தி மட்டுமே பெண். மின் மயானத்துக்கு வரும் இறந்தவரின் முழு விவரம், மருத்துவச் சான்றிதழ் சரிபார்ப்பு, மயானச் சான்றிதழ் அளிப்பது இவைதான் என் வேலை. சடலங்களைத் தகனம் செய்யும்போது வாடை வரும்.

நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மயானத்தில் சாப்பிடப் பிடிக்காமல் பட்டினியாக இருந்தேன். ஆனால், நான் செய்யும் வேலை புனிதமானது எனத் தோன்றியதில் இருந்து எனக்குள் இருந்த பயம் மறைந்துவிட்டது. சில நேரம் சின்னக் குழந்தைகளின் உடல்கள்கூட வரும். அப்போதெல்லாம் என் குழந்தைகள் நினைவுக்கு வருவார்கள். அந்த நொடியின் வேதனையைச் சொல்லத் தெரியவில்லை” என்று சொல்லும்போதே பிரவீனாவுக்குக் குரல் உடைகிறது.

குப்பை மேடாக இருந்த மின் மயானத்தைப் பூந்தோட்டமாக இவர் மாற்றியிருக்கிறார். “எங்கள் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால்தான் இது சாத்தியமானது. ஆனால், நன்றாக வளர்ந்த மரங்கள் எல்லாம் வர்தா புயலின்போது விழுந்துவிட்டன. அதேபோல் கடந்த 2016-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பலர் இறந்து போனார்கள். அப்போது சில மின் மயானங்களில் வெள்ள நீர் புகுந்துவிட்டது.

இதனால் எங்கள் மயானத்தைக் காலை ஏழு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை சிறப்பு அனுமதி பெற்று திறந்துவைத்திருந்தோம். அப்போது ஒரு நாளைக்கு சுமார் 7, 8 உடல்களைத் தகனம் செய்யக் கொண்டுவந்தார்கள். சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய செல்வாக்கை மயானத்தில் பயன்படுத்த நினைத்து என்னிடம் வாதம் செய்வார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து அன்றைய நாளை கடப்பது கடினமாக இருந்தது” என்கிறார் பிரவீனா.

penn-2 பிரவீனா சாலமன் எதிர்கொண்ட கேள்விகள்

மயானத்தில் வேலை செய்யும் பிரவீனாவை நோக்கி இந்தச் சமூகம் எழுப்பிய கேள்விகள் ஏராளம். “நான் மயானத்தில் வேலை செய்வதைப் பல நாட்கள் என் உறவினர்களிடம்கூட சொல்லாமல் இருந்தேன். அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது.

ஆனால், என்னைப் பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளைப் பார்த்த என் உறவினர்கள் என்னை போனில் அழைத்து, ‘உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, தைரியமான ஆள்தான் நீ’ எனப் புகழ்ந்தார்கள். உறவினர்களைக்கூடச் சமாளித்துவிடலாம் ஆனால், இந்த வேலை காரணமாக என் குழந்தைகள் எதிர்கொள்ளும் கேள்விகள்தாம் வேதனையா இருக்கும்.

அப்படி ஒருமுறை என்னைப் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியை என் குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் சென்று அவர்களின் ஆசிரியரிடம் காண்பித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த அந்த ஆசிரியை, “ஏன் உங்க அம்மாவுக்கு வேற வேலையே கிடைக்கலையா?” எனக் கேட்டிருக்கிறார். குழந்தைகள் இதை என்னிடம் சொன்னபோது மனசே உடைந்துவிட்டது. படித்தவர்களுக்கே நான் செய்யும் வேலை குறித்த சரியான புரிதல் இல்லாதபோது படிக்காதவர்கள் கேட்கும் கேள்விகளுக்காகச் சங்கடப்படுவது அவசியமற்றது” என்று தெளிவுடன் சொல்கிறார் அவர்.

விருதும் பாராட்டும்

தன் மீது ஏவப்பட்ட கேள்விகளையும் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள கட்டுப்பாடுகளையும் தகர்த்துத் தற்போது தேசிய விருது பெற்றிருப்பதைப் பெரிய அங்கீகாரமாகவே அவர் பார்க்கிறார். “எந்தச் சூழ்நிலையிலும் வேலையை விட வேண்டும் என நினைத்ததில்லை. மற்ற வேலைக்குச் சென்றிருந்தால் நான் இந்த அளவுக்குச் சமூகத்தால் கவனிக்கப்பட்டிருப்பேனா எனத் தெரியாது. இந்த உயர்வுக்குக் காரணம் மயான பூமிதான். தேசிய விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றது உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னைப் போல வெவ்வேறு துறையில் முதல் பெண்ணாகச் சாதித்த சுமார் 112 பெண்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தார்கள். என் மகனின் பாடப் புத்தகத்தில் படித்த பச்சேந்தரி பால் நான் தங்கியிருந்த அறைக்கு எதிரில் தங்கியிருந்தார்.

அதேபோல் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகார் ஆகியோரைச் சந்தித்தது புதிய அனுபவமாக இருந்தது. விருது பெற்ற பிறகு எங்கள் அனைவரையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த இடம் பிரம்மாண்டமாக இருந்தது. அப்படியொரு தருணத்தில்தான், ‘நீ செய்யும் வேலையையும் அதில் உன் அர்ப்பணிப்பையும் நினைத்தால் பெருமையா இருக்கு’ எனப் பாராட்டினார் என் கணவர். அது என் உற்சாகத்தை அதிகரித்தது” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் பிரவீனா சாலமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x