Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

புதிய ராகங்கள்: வசீகரக் குரல் காடு!

கா

தல், பிரிவு, மகிழ்ச்சி, கேலி, கோபம், பயம் என எல்லா உணர்ச்சிகளையும் குரலில் கொண்டுவந்து பாடுவதுபோலவே பேசவும் செய்கிறார் மானசி. பேசப் பேச... அவருடைய வசீகரக் குரல் காட்டுக்குள் எல்லோரும் தொலைந்து போய்விடுவார்கள்.

வாய்ப்பின் ஆரம்பம்

“இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் முதலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பின் `அன்னக்கொடி’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு பாடலைப் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். இரண்டுக்குப் பிறகும் நான் உண்டு என் படிப்பு உண்டு என்றுதான் இருந்தேன். `ஆரம்பம்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா எனக்குக் கொடுத்த `ஸ்டைலிஷ் தமிழச்சி...’ எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது” என்னும் மானசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 125-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இப்போது ஸ்ரீராம் பரசுராமிடம் இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டுவருகிறார். வாய்ப்புக் கிடைத்தால் செவ்வியல் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கும் தயாராக இருக்கிறார். எம் எம் மானசி என்னும் இவரின் முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஒரு வீடியோவைப் பகிர்வதை வழக்கமாகவைத்திருக்கிறார். பஜன், மேற்கத்திய இசை, கிராமிய இசை, திரைப் பாடல்கள் என பல மொழிகளில் இதுவரை 70 வீடியோக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

கவனம் கவர்ந்த கவர்-வெர்ஷன்

முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவதோடு, அவ்வப்போது பிரபல பாடல்களை வேறு ஒரு இசை பரிமாணத்தோடு அளிக்கும் முயற்சிகளிலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பதில் கவனம் ஈர்த்திருக்கிறார் மானசி. புகழ்பெற்ற டிஸ்க் ஜாக்கியான அஜ்மலோடு இணைந்து இவர் பாடிய ‘முதல் காதல்’ எனும் தனிப்பாடல் இளைஞர்களிடையே இவரைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. அதேபோல் ‘தமாஷா’ இந்தி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான `தும் ஃபாத் ஹோ’, ‘மொகஞ்சதாரோ’ படத்தில் இடம்பெற்ற ‘து ஹாய்’ போன்ற பாடல்களுக்கு இவர் பாடி யூடியூபில் வெளியிட்ட கவர் வெர்ஷன்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆயிரத்தில் நூறாவது

‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ (தலைவா), ‘கட்டிக்கிட’ (காக்கிசட்டை), ‘இறைவனாய் தந்த இறைவியே’ (விஐபி2), ‘வெறியேற’ (விவேகம்) என்று கவனம் ஈர்க்கும் பல பாடல்களை மானசி பாடியிருந்தாலும், இளையராஜாவின் இசையில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாடிய ’ஆட்டக்காரி மாமன் பொண்ணு’ பாடல் மிகவும் முக்கியமானது என்கிறார். “அது ஏன் ஸ்பெஷல்னா… அந்தப் படம் திரைத் துறையில் இளையராஜா என்னும் ஆளுமையின் 1000-வது படம். எதேச்சையாக நான் எல்லா மொழிகளிலும் பாடிய பாடல்களை எண்ணியபோது நான் பின்னணி பாடிய 100-வது பாடல் அவரது இசையில் அமைந்தது என்று தெரிந்தபோது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று சிலிர்க்கிறார் மானசி.

முன்னணிகளின் பின்னணி

`அஞ்சான்’ படத்தில் சமந்தாவுக்கு நான் பேசியது, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் என்னை அடையாளப்படுத்தியது. `பாகுபலி’ தொடங்கி தமன்னாவுக்குத் தொடர்ந்து நான் பின்னணி பேசிவருகிறேன். அவர் இடம்பெறும் விளம்பரங்களுக்குக்கூட என்னைப் பேசவைத்திருக்கிறார் தமன்னா. `கொடி’ படம் தொடங்கி அடுத்தடுத்து த்ரிஷா நடிக்கும் பல படங்களுக்கும் நான் அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்துவருகிறேன். பின்னணி பேசுவதால் என்னுடைய பாடும் திறனும், பாடுவதால் பின்னணி பேசும் திறனும் மேம்பட்டிருக்கின்றன என்றே சொல்வேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார். ‘சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி!’ என்ற பாடலையும் இவர் பாடியிருப்பது பொருத்தமானதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x