Published : 29 Oct 2017 12:34 PM
Last Updated : 29 Oct 2017 12:34 PM

எசப்பாட்டு 07: பட்டினிக் கொடுஞ்சிறை

உலகின் மிகப் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தில் ‘சந்தாரா’ என்றொரு சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மானுட உடம்பென்னும் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஆன்மாவை விடுதலை செய்யும் புனிதச் சடங்காக அது நிகழ்த்தப்படுகிறது. ‘சல்லேகனா’ என்றும் இது அழைக்கப்படுகிறது. மெலிந்துபோதல் என்ற பொருள் தரும் இந்தச் சடங்கில் இறங்குவோர் முதலில் திட உணவை மறுத்துப் பால் மட்டும் அருந்துவார்கள்.

பின்னர் பாலையும் நிறுத்தி முழுப் பட்டினியாகக் கிடந்து, உடல் மெலிந்து, ஆசைகள் மெலிந்து, பாவ எண்ணங்கள் மெலிந்து என எல்லாவற்றையும் மெலிய வைத்து இறுதியில் இந்த உடம்பிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது, அதாவது இறந்து போவதுதான் அந்தச் சடங்கின் நோக்கம். சுருக்கமாக, பட்டினி கிடந்து சாவதுதான். இது தற்கொலை முயற்சி என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சந்தாராவைத் தடை செய்தது.

ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 60 நொடிகளில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்தது. இது பேசப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும் அந்த வழக்குக்குள் இப்போது நாம் போகவில்லை.

பட்டினிப் பெண்கள்

இந்தச் சந்தாராவிலும் பட்டினி கிடந்து மோட்சம் அடைபவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள். இந்த உடலால் இனி யாருக்கும் பயனில்லை எனும்போது சந்தாராவில் இறங்கிச் சாகும் பழக்கம் இது. ஆண்டுதோறும் 250 முதல் 500 பேர்வரை இப்படித் தம்மை மாய்த்துக்கொள்கிறார்கள். ஒருவர் சந்தாரா சடங்கில் இறங்கினால் அது பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து அனைவரையும் வந்து இறப்பைத் தரிசிக்க அழைக்கிறார்கள். சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் மந்திரங்கள் ஓதியபடி பார்த்திருக்க இந்த மரணங்கள் நிகழ்கின்றன.

இதைப் பற்றி அறிய நேர்ந்தபோது நம் நாட்டுப் பெண்கள், நாம் எல்லோரும் பார்த்திருக்கப் பட்டினி கிடப்பதன் குறியீடாக இந்தச் சந்தாரா எனக்குப் பட்டது. அதீதமாக நான் சொல்லவில்லை. எங்கள் எல்லோருடைய நலனுக்காக எங்கள் அம்மா வாரத்தில் ஐந்து நாட்களாவது உண்ணாநோன்பிருந்து விரதம் முடிப்பார். அதற்காக மட்டுமின்றி அப்பா மீது கோபம் என்றாலும் பிள்ளைகளாகிய நாங்கள் சேட்டை செய்து அவர் சொன்னபடி கேட்காவிட்டாலும் அவர் சாப்பிடமாட்டார்.

நாங்கள் வருத்தம் தெரிவித்து அவரைச் சாப்பிட வைக்க மாலைப் பொழுதாகிவிடும். கோபத்தை வெளிப்படுத்த, அதிருப்தியை வெளிப்படுத்த, எதிர்ப்பை வெளிப்படுத்த பட்டினி கிடந்து தன்னை வருத்திக்கொள்வதை ஒரு ஆயுதமாக அல்லது வழிமுறையாகப் பெண்கள் கைக்கொள்வதைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். சமீபத்தில் சாதி மறுத்துக் காதல் மணம் புரிய முடிவு செய்தாள் ஒரு பெண். அவளது அப்பா அதை ஏற்கவில்லை.

அந்தப் பெண் பத்து நாட்களுக்கு மேலாக எதுவுமே சாப்பிடாமல் கிடந்து, மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வந்து, அதன் பிறகு அந்த அப்பா திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதைச் சொன்னாள்.

பெண்களின் ஆயுதங்கள்

பொருளாதாரத் தற்சார்பு இல்லாமல், ஆண்களை அண்டி வாழ விதிக்கப்பட்ட பெண்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் பலவிதமான ‘வீட்டு ஆயுதங்களை’ (domestic weapons) வடிவமைக்கிறார்கள். கொஞ்சிப் பேசுவது, சிணுங்கிச் சாதிப்பது, திட்டிச் சண்டை போடுவது, வீட்டு வேலைகளை வழக்கமான ஒழுங்கில் செய்யாமல் ஏனோ தானோ என்று செய்வது, பேசாமல் மௌனத்தில் உறைந்து கிடப்பது என்று அந்த ‘ஆயுதங்கள்’ பல. அதன் உச்சபட்சம் பட்டினியைக் கைகொள்வது.

என் நண்பரான கல்லூரிப் பேராசிரியர், தன் மனைவியின் சுடு சொற்களைத் தாங்க முடியாமல் அவருடைய முதுகில் ஓங்கி ரெண்டு குத்து குத்திவிட்டார். மாலையில் நாங்கள் சந்தித்தபோது, “இப்படி செஞ்சிட்டனே.. நானே இப்படி செஞ்சிட்டனே..” என்று புலம்பியபடி தனது வலது கையை இடது கையில் குத்தியபடி குற்ற உணர்வில் துடித்தார். சரி, பேசிப் பேசி அவர் சமநிலைக்கு வரட்டும் என்று அவரைப் பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பேச்சின் இடையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் இன்றைக்கும் அழுத்தமாக மனதில் நிற்கிறது. “நாம வெளியே சுத்துறவங்க. நம்ம கோபத்துக்கு எத்தனையோ வடிகால் இருக்கு. ஒண்ணுமில்லேன்னா கோவிச்சிக்கிட்டு வெளியே வந்துடலாம். பாவம், வீட்டிலேயே கிடக்கிற பொம்பளைங்களுக்கு என்ன வடிகால் இருக்கு? நம்மளைத் தாக்க அவங்களுக்கு வார்த்தைகளை விட்டா வேற என்ன ஆயுதத்தை நாம விட்டு வச்சிருக்கோம்.

நாம இல்லாதப்போ வரட்டும் அந்த மனுஷன்னு வார்த்தைகளைக் கூர் தீட்டித் தீட்டி வைத்திருப்பதைத் தவிர அவங்களாலே வேறென்ன செய்ய முடியும். நாம வந்த உடனே அந்தக் கூர் தீட்டப்பட்ட வார்த்தையைக் கத்தி மாதிரி நம்ம நெஞ்சிலே சொருகிடறாங்க. இத நாம புரிஞ்சிக்கிடறதில்லே.”

அந்த வகையில் பட்டினி என்கிற தன்னைக் கொல்லும் ஆயுதத்தைப் பெண்கள் கையிலெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு உள்ளது. அந்த அளவுக்கு நுண்ணுணர்வுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?

போராட்ட ஆயுதமாக மட்டுமில்லாமல் ஆணின் மனதுக்கு இனியவளாகத் தான் இருக்க வேண்டும் என்பதற்காகப் பட்டினி கிடந்து எடை குறைக்கும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் பிரச்சினையாக இருக்கிறது. உடல் மெலிந்து கொடியிடையோடு இருப்பதுதான் ஆணின் கண்ணுக்கு ‘விருந்தாகும்’ என்கிற கருத்து தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. முற்றிலும் தன் பிடிக்குள் அடங்குபவளாக (உடல் ரீதியாகவும்) இருக்கும் பெண்ணை விரும்புகிற ஆணின் உளவியலில் மாற்றம் தேவை.

நோயாய்ப் பரவும் பசியின்மை

Anorexia nervosa எனப்படும் ‘பசியற்ற உளநோய்’ இளம் பெண்களிடம் பரவலாக உள்ள மனோவியாதியாக இன்று மாறியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் பெண்கள் இந்நோய்க்கு ஆளாகி சிகிச்சைக்கு வருவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தான் குண்டாகி விடுவோமோ என்கிற அச்சம், ‘அய்யோ.. எடை கூடிவிட்டதே’ என்கிற பதற்றம் உளவியல் கூறாக அழுத்தம் பெற்று அதன் காரணமாக உணவை வெறுக்கும் மனநிலைக்குச் செல்வது, அதீதமான உடற்பயிற்சிகள், யோகா என உடம்பை வருத்துவது என்று இழுத்துச் செல்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் இது முற்றிலும் பெண்கள் விஷயமாக அவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகத் தெரியும். ஆனால், இதன் பின்னணியில் இருப்பது பெண் உடல் பற்றி இந்த ஆணாதிக்க சமூகம் தீட்டிக்கொண்டே இருக்கும் சித்திரம், செதுக்கிக்கொண்டே இருக்கும் சிற்பம். ‘இடுப்பு வளைவுகளோடும் ஒடுங்கிய தோள்களோடும்...’ என்பது மாதிரியான விளம்பரங்களும் திரைப்படங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகளும் முன்வைக்கும் பெண் உடலின் முன்மாதிரிகள் பெரும் தாக்கத்தைப் பெண் குழந்தைகளின் உளவியலில் ஏற்படுத்துகின்றன.

மெலிந்த பெண்தான் கதாநாயகி, பருமனான பெண் காமெடியனுக்கு ஜோடி என்கிற முன்வைப்புதான் எப்போதும் இருக்கிறது. அழகுசாதனப் பொருட்களின் விளம்பரங்கள் உலகமய ஊடகங்களின் வருகைக்குப்பின் வெள்ளம்போல நம் பெண் குழந்தைகளின் உள்ளங்களில் பாய்ந்து அவர்களை மூழ்கடிக்கின்றன.

பெண் உடலை வடிவமைக்கும் வெட்டி வேலையை ஆண்கள் கைவிட வேண்டும். ஆரோக்கியமான உடல்தான் பெண்ணுக்குத் தேவை. சரியான சாப்பாடு, சரியான தூக்கம் இவற்றை நம் பெண்கள் மேலே குறிப்பிட்ட பல்வேறு காரணங்களுக்காக இழந்துகொண்டிருப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அது ஆண்களின் கையில்தான் இருக்கிறது.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x