Published : 22 Oct 2017 12:53 PM
Last Updated : 22 Oct 2017 12:53 PM

புதுமைப்பெண்: திருமணத்தைக் கேள்வி கேட்கும் விளையாட்டு!

கள் திருமண வயதை எட்டிவிட்டதாக மனதில் பட்டவுடன் மாப்பிள்ளை தேடும் படலத்தில் பெற்றோர் இறங்கிவிடுவார்கள். அந்தத் தேடலில் முதல் கட்டமாக அவர்கள் அணுகுவது, அவர்களுடைய உற்றார் உறவினர்களில் அதிகாரம் படைத்த ஒரு பாட்டியைத்தான். உடனே அந்தப் பாட்டியும் அவர் கண்ணில்பட்ட (அதே சாதி-சமூகத்தைச் சேர்ந்த) இளைஞர்களை எல்லாம் பட்டியலிடுவார்.

அவரைப் பொறுத்தவரை ஒரு ஆணும் பெண்ணும் திருமண வயதை அடைந்துவிட்டாலே அவர்கள் தம்பதிகளாகும் தகுதி பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்த அணுகுமுறையில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் விருப்பத்துக்கும் தனித்துவத்துக்கும் ஏதாவது இடம் உள்ளதா?

விபரீதங்களுக்குள் தள்ளப்படும் பெண்

நிச்சயிக்கப்பட்ட திருமணம் பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இடம் தர மறுப்பது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தின் பெயரால் பல்வேறு விஷயங்களை அவள் மீது திணிக்கிறது. பூரணமான மணப்பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொள்ள செயற்கையாகப் பல விஷயங்களைச் செய்ய அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

சிவப்புதான் அழகு, ஒல்லியான உடல் அமைப்பு அத்தியாவசியம் என்பது போன்ற கற்பிதங்களில் சிக்கி சரும நிறத்தை சிவப்பாகக் காட்டும் களிம்புகளைப் பூசுவது, உடல் பருமனைக் குறைக்க மாத்திரை சாப்பிடுவது, அறுவைசிகிச்சை செய்துகொள்வது உள்ளிட்ட விபரீதங்களுக்கு அவள் தள்ளப்படுகிறாள். இது போதாதென்று, மாப்பிள்ளைக்கு வரதட்சிணை தர வேண்டும், கணவருக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பது போன்ற சுரண்டல்கள் வேறு.

இத்தகைய சமூகக் கட்டமைப்பில் தன்னுடைய பணிவாழ்க்கை, சுய விருப்பு-வெறுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண் புறந்தள்ளப்படுகிறாள்.

கேள்வி கேட்ட விளையாட்டு

இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெண்ணின் விருப்பத்துக்கும் உரிமைக்கும் இடம் உள்ளதா என்கிற கேள்வியைக் கேட்கத் தொடங்கினார் பாகிஸ்தானைச் சேர்ந்த நஷ்ரா பலகம்வாலா.

இந்தக் கேள்விகளைத் தன்னுடைய பெற்றோரிடம் மட்டும் கேட்டால் போதாது என்று உணர்ந்தவர், அதே கேள்விகளை சமூகத்தை நோக்கியும் எழுப்பத் தொடங்கிவிட்டார். தன்னைப் போலவே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் திருமணச் சந்தைக்குள் தள்ளப்படுவதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது எனச் சிந்திக்கத் தொடங்கி அவர் தேர்ந்தெடுத்த வழி ‘அரேஞ்ச்டு’ (‘Arranged’) என்னும் விளையாட்டு. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைக் கேள்விக்கு உள்ளாக்கச் சீட்டுக்கட்டு விளையாட்டைப் போன்ற ‘அரேஞ்ச்டு’ விளையாட்டை வடிவமைத்திருக்கிறார் நஷ்ரா. இந்த விளையாட்டுக்கான தயாரிப்புச் செலவைக் கிரவுட் ஃபண்டிங் வலைத்தளமான ‘கிக்ஸ்டார்ட்டர்’ ஏற்றுக்கொண்டது.

புதிய விதிகளை உருவாக்குபவர்

அவரைத் தொடர்புகொண்டபோது, “ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய அக்காவுக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது எனக்குப் 18 வயதுதான். ஆனால், கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் எனக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்வது பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அந்த வயதில் அதைப் பற்றி யோசிக்கும் நிலையில் நான் இல்லை. தொடர்ந்து இந்தப் பையனைப் பாரு, அந்தப் பையனப் பாரு என்று வருடங்கள் ஓடின.

ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைப் புத்திசாலித்தனமாகக் கண்டுபிடித்துச் சொல்லித் தட்டிக்கழித்துக்கொண்டே வந்தேன். இயல்பிலேயே எனக்கு விளையாட்டுத்தனம் அதிகம் என்பதால் என்னுடைய அனுபவங்களை ஒரு சுவாரசியமான விளையாட்டாக வடிவமைத்துவிட்டேன்” என்கிறார் நஷ்ரா.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பழமைவாதம் மிகுந்த குடும்பச் சூழலில் பிறந்த இவர், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கேம் டிசைனராகப் பணியாற்றிவருகிறார். “சிறுவயதிலிருந்து என்னுடைய சகோதர சகோதரிகளுடன் விளையாடும்போதே எந்த விளையாட்டையும் அதனுடைய விதிகளின்படி விளையாட எனக்குப் பிடிக்காது. சுயமாகப் புதிய விதிகளை உருவாக்குவேன்.

இதுவே என்னுடைய தனித்துவம் எனத் தெரிந்துகொண்ட பிறகு, கல்லூரியில் ‘கேம் டிசைனிங்’ படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். தற்போது பொம்மை தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘ஹேஸ்ப்ரோ’ உட்படப் பல நிறுவனங்களுக்கு விளையாட்டுகளை வடிவமைத்துவருகிறேன்” என்கிறார்.

அடிபணிய மாட்டேன்

குறும்புத்தனமான சிறுமியாக இருந்தபோதும் நாளடைவில் தன்னைச் சுற்றி நிகழும் சமூக நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கினார் நஷ்ரா. அதில் பல நிகழ்வுகள் அவரை சிந்திக்கத் தூண்டின. “நான் பதின்பருவத்தை எட்டியபோது என்னைத் தொந்தரவு செய்த சம்பிரதாயங்களை மறுக்கத் தொடங்கினேன்.

என்னுடைய அண்ணன் மட்டும் தன்னுடைய இஷ்டம்போல வெளியே சுற்றித் திரியலாம், ஆனால் நான் மட்டும் பொழுது சாய்வதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்பது ஏன்? அவனுக்குப் படிக்கும் ஆர்வமே இல்லாதபோதும் எப்படியாவது அவனைக் கல்லூரியில் சேர்க்க என்னுடைய பெற்றோர் முட்டி மோதினர். ஆனால், நான் மேற்படிப்பு படிக்க என்னுடைய பெற்றோரிடம் சண்டை போட வேண்டிவந்தது ஏன் எனக் கேட்க ஆரம்பித்தேன்.

சமூகக் கட்டுப்பாடுகளுக்கு நான் அடிபணியத் தயாராக இல்லை. அதனால்தான் பாடுபட்டு பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கலை மற்றும் வடிவமைப்புக்காக உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகமான ‘ரோட் ஐலாண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’-ல் படிக்கப் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்கா சென்றேன்.

சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கும் பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்கவும், எனக்குள் எழுந்த அறசீற்றத்தை வெளிப்படுத்தவும் இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார்.

உரிமைக் குரல்

அப்படி இந்த விளையாட்டில் என்னதான் இருக்கிறது?, “பதின்பருவச் சிறுமிகளைத் துரத்தித் துரத்திப் பிடித்து ஏதாவது ஒரு பையனை அவர்களுக்குக் கல்யாணம் செய்துவைக்க முயல்பவர் ‘ரிஷ்தா ஆண்டி’. அவர் இந்த விளையாட்டில் முக்கியக் கதாபாத்திரம். இத்தகைய ஏற்பாட்டுத் திருமணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அந்த இளம்பெண்கள் பல காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.

 ‘மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன்’, ’வேலைக்குப் போக ஆசை’, ‘நான் மாலில் காதலனோடு சுற்று திரிந்ததைப் பலர் பார்த்துவிட்டார்கள்’ என்று கற்பனைக்கு எட்டியதைச் சொல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ‘தங்கமான மாப்பிள்ளை’யைப் கண்டுபிடித்து இந்தப் பெண்களின் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் ரிஷ்தா ஆண்டி. இப்போது விளையாட்டு வேறு கோணத்தில் திரும்புகிறது. இதுவரை கல்யாணம் வேண்டாம் எனச் சொன்ன இளம்பெண்கள், இப்போது எப்படியாவது அந்த அதிசிறந்த மாப்பிள்ளையை அடைவதற்காகப் போட்டி போடுகிறார்கள். ‘தினந்தோறும் 5 முறை தொழுவேன்’, ‘எனக்குப் பெண் தோழிகள் மட்டுமே இருக்கிறார்கள்’ எனத் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்” என்கிறார் நஷ்ரா.

இப்படியாகச் சமூகக் கட்டமைப்பு எவ்வாறு பெண்ணின் திருமணத்தைச் சந்தைப்படுத்தி, அதன் மூலம் அவளுடைய தனித்துவத்தை மழுங்கடிக்கிறது என்பதை இந்த விளையாட்டின் மூலம் சுட்டிக்காட்டுகிறார் நஷ்ரா. பெற்றோருடன் இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் தங்களுடைய தரப்பை முன்வைத்துப் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகப் பாகிஸ்தானிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இளம் பெண்கள் இவருக்கு முகநூலில் பாராட்டைப் பதிவிட்டுவருகிறார்கள்.

கல்வி, பணிவாழ்க்கை, காதல், திருமணம் ஆகிய தளங்களில் பெண்களின் உரிமைக் குரலாக ஒலிக்கத் தான் எடுத்திருக்கும் முயற்சி இது என்கிறார் நஷ்ரா. கேளிக்கையாக மட்டுமே விளையாட்டுகளை அணுகாமல், சமூக மாற்றத்துக்கான கருவியாகவும் அவற்றைக் கையில் எடுத்திருக்கும் நஷ்ரா புதிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

கூடுதல் தகவலுக்கு:

http://nashra.co/store/arranged

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x