Published : 27 Aug 2017 02:52 PM
Last Updated : 27 Aug 2017 02:52 PM

பணி உரிமை: ஐ.டி. துறை சமத்துவம்: பகல் கனவா?

கூ

குள் தமிழர் சுந்தர் பிச்சை தனது நிறுவன ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 8 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், “பணி இடத்தில் பாகுபாடு, துன்புறுத்தல், பழிவாங்குதலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை கூகுள் நிறுவனம் எடுக்கும். ‘கூகுளர்ஸ்’-ன் கருத்துரிமையை நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம். கலகலப்பான விவாதங்களை நாங்கள் எப்போதுமே வரவேற்கிறோம். அதற்காக எதை வேண்டுமானாலும் பேச அனுமதிக்க முடியாது. மற்ற நிறுவனங்களைப் போலவே இது கூகுளுக்கும் பொருந்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை அனுப்பப்பட்டதற்கு முந்தைய நாள், ஒழுங்கீனம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கூகுளின் பொறியாளர் ஜேம்ஸ் டமோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

சம்பளமும் பதவி உயர்வும்

அப்படி அவர் என்ன ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டார்? “தன்னுடைய பெண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் பாகுபாடாக நடத்துகிறது” என்று குற்றம்சாட்டியதுதான் ஜேம்ஸ் டமோர் செய்த தவறு. இதனால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் அசரவில்லை அவர். சட்டரீதியாகத் தற்போது கூகுள் நிறுவனத்தைக் கேள்வி கேட்டுக் குடைந்துகொண்டிருக்கிறார். அவர் முன்னெடுத்த நடவடிக்கையால், கூகுள் தன்னுடைய ஆண் ஊழியர்களைவிடப் பெண் ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் அளிக்கிறதா, பதவி உயர்வில் பாகுபாடு காட்டுகிறதா, தொழில்நுட்ப அடிப்படையிலான பணிகளில் அமர்த்துவதில் ஏற்றத்தாழ்வு காட்டுகிறதா எனத் துப்பறிய ஆரம்பித்துள்ளது அமெரிக்கத் தொழிலாளர் நலத் துறை. இதன் நிமித்தமாகக் கடந்த சில வாரங்களில் 80-க்கும் மேற்பட்ட முன்னாள், இன்னாள் கூகுள் பெண் ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண்களுக்கு இணையான பணியைப் பெண் ஊழியர்கள் செய்து முடித்த பின்பும் குறைவான சம்பளமும் கீழ்மட்டப் பதவிகளும் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டுவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதிலும் ஒட்டுமொத்த கூகுள் ஊழியர்களில் 31 சதவீதத்தினர் பெண்களாக இருந்தாலும் 20 சதவீதத்தினர் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அமெரிக்க அரசியல் களத்திலும் இது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இன்றைய இந்தியப் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரமும் கவுரவமான பணிச் சூழலும் வழங்கியதில் ஐ.டி. நிறுவனங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனமே தன்னுடைய பெண் ஊழியர்களை ஏற்றத்தாழ்வுடன் நடத்துவது தெரிய வந்திருப்பது, நம்முடைய நிறுவனங்களைப் பார்த்தும் இதே கேள்விகளை எழுப்பத் தூண்டுகிறது.

ஆடம்பரத்துக்கா வேலைக்கு வருகிறோம்?

ஒரே விதமான ஐ.டி. வேலையை ஆண்களும் பெண்களும் செய்தாலும் சம்பளம், பதவி உயர்வில் மாற்றுக் கருத்துக்கு இடமின்றி பாகுபாடு நிலவுகிறது என்கிறார் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் புராஜக்ட் லீட் பொறுப்பு வகிக்கும் சித்திக்கா. “கம்பெனி நஷ்டப்படுவதாகச் சொல்லி ஆட்குறைப்பு செய்யும்போது முதலில் வெளியேற்றப்படுவது பெண் ஊழியர்கள்தான். ஏனென்று கேட்டால், ஆண்களுக்கு வேலை ரொம்பவும் முக்கியம், பெண்களுக்கு அப்படியில்லை என்கிறார்கள். ஏதோ ஆடம்பரத்துக்காகத்தான் பெண்கள் வேலைக்கு வருவதாகவே பலர் நினைக்கிறார்கள். ஆன்சைட் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஒரு குழுவுக்குக் கிடைத்தால் மேனேஜர் கண்ணை மூடிக்கொண்டு ஆண்களைத்தான் தேர்வுசெய்கிறார். எங்களுக்குத் திறமையும் அனுபவமும் இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் சண்டைபோட வேண்டியுள்ளது. அதிலும் எங்களுக்கான சங்கம் வலுப்பெறாததால் எங்களுடைய கருத்துகளைப் பேசுவதற்கே இடமில்லை” என்கிறார் சித்திக்கா.

திண்டாட்டத்துக்கு யார் காரணம்?

‘இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வேலையில் அமர்த்தப்படுவதுதான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் காரணம்’ என்று சத்தீஸ்கர் மாநில 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டது ஞாபகத்துக்கு வருகிறது எனப் பேசத் தொடங்குகிறார் ஏழு ஆண்டுகளாக ஐ.டி. துறையில் பணிபுரிந்துவரும் ஷாகிரா. “வேலையில்லாத் திண்டாட்டம் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதானே! அதை ஆண்களுக்கானதாக மட்டும் பார்க்கும் சமூகத்தில்தான் இன்றும் நாம் இருக்கிறோம். இதேபோல் வறட்டுப் பிடிவாதமான பார்வைதான் ஐ.டி. நிறுவனங்களிலும் நிலவுகிறது.

இரவுப் பணி, திருமணத்துக்குப் பிறகு வேலையைத் தொடர்வது, மகப்பேறுக்குப் பிறகு மீண்டும் பணியில் இணைவது இப்படி ஒவ்வொன்றிலும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என முன்கூட்டியே தீர்மானித்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாகச் செயல்திறனை வெளிப்படுத்தினாலும் பதவிஉயர்வு வழங்க மறுக்கிறார்கள். தற்போது விவாதத்தை எழுப்பியிருக்கும் மாதவிடாய் விடுப்பை பெண் ஊழியர்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைக்குவந்தால், பெண்களைப் பணியமர்த்துவதில் கூடுதல் பின்னடைவு ஏற்படுமோ என்ற பயம் அதிகரிக்கிறது” என்கிறார் ஷாகிரா.

அப்புறம் அவ்வளவுதானா?

“ஐ.டி. வேலையைப் பொறுத்தவரை முதல் ஐந்து ஆண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரி வளர்ச்சி இருக்கிறது. ஆனால், அதற்கும் மேலாக அனுபவம் அதிகரிக்கும்போது, வளர அனுமதிப்பதில்லை. இதனால் பதவி உயர்வு கிடைக்காது. பதவி உயர்வு மறுகப்படுவதால் சம்பள உயர்வும் கிடைப்பதில்லை. திருமணம் ஆகாத இளம் பெண் வேலைக்குச் சேர்ந்தாலே, ‘இப்போ நல்லா வேலை பார்ப்பீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அவ்வளவுதான்’ என்னும் பேச்சைச் சகஜமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனக்குச் சமீபத்தில்தான் திருமணம் ஆனது. பேச்சுவாக்கில், ‘மெட்டர்னிட்டி பிளான் பண்ணிட்டீங்களா?’ என உயர் அதிகாரி என்னிடம் கேட்பதுண்டு. நிறுவனம் இக்கட்டான சூழலில் இருக்கும் காலகட்டத்தில் அதன் பெண் ஊழியர் கர்ப்பம் தரித்தால் முதலில் வேலையில்லா இடைநிலையான ‘பெஞ்ச்’-ல் அவர்களைத்தான் போடுகிறார்கள். பொதுவாக பெஞ்சில் அமர்த்தப்பட்டால் மூன்று மாதத்துக்குள்ளாக வேறொரு புராஜெக்ட்டில் சேர்ந்துவிட வேண்டும். அப்படி இல்லை என்றால், பணிநீக்கம் செய்துவிடுவார்கள். இந்த மாதிரிச் சூழலில் மகப்பேறுக்கு முன்னதாகவே வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள்” என்கிறார் அனு காயத்ரி.

தொழில்நுட்பத் துறை வளர்ச்சி முதற்கொண்டு எத்தகைய வளர்ச்சியும் மேலோட்டமாக இருக்கும்வரை பெண்களுக்கான விடுதலை என்பது பகல் கனவுதான் என்பதை இன்றைய ஐ.டி. சூழல் பட்டவர்த்தனமாக்கி உள்ளது. இந்நிலையை மாற்றும் நடவடிக்கையில் அமெரிக்கத் தொழிலாளர் நலத் துறை இறங்கியிருப்பது போலவே, நம்முடைய தொழிலாளர் நலத்துறையும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x