Published : 13 Aug 2017 01:47 PM
Last Updated : 13 Aug 2017 01:47 PM

விவாதம்: வரதட்சணைக் கொடுமை இணைந்து களைவோம்

பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்னைவிடப் பெண்களின் நிலை எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் வரதட்சணை தொடர்பான வழக்கு ஒன்றுக்காக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்து வாசகர்களின் கருத்துகளை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வரதட்சணைக் கொடுமையைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஒட்டுமொத்த சமூகமும் அந்தக் கொடுமையை அகற்ற கரம்கோக்க வேண்டும் என்றும் பலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு.

ரு பக்கம் ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் எனக் கூறிக்கொண்டே மறுபுறம் பெண்களுக்கு எதிராக வரதட்சணை என்னும் வன்முறை ஆங்காங்கே தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. படிப்பிலும் ஊதியத்திலும் ஆணுக்குப் பெண் சமமாக இருந்தாலும் இன்னும் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிய நிலைதான் உள்ளது. வரதட்சணைக்காகப் பெண்களை மிரட்டுவதும் கொடுமைப்படுத்துவதும் அல்ல ஆண்மையின் அடையாளம்.

வாழ்க்கையைப் பங்கிட்டுக் கொள்ளும் சக மனிஷியின் மனதை வெற்றிகொள்ளாதவரையில், சமூகத்தின் எத்தனை உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவர் தோற்றுப்போனவரே. அடிப்படையில் ஆண்களின் மனம் மாறாதவரை இந்த வன்முறைக்குத் தீர்வு காண்பது கடினம். இதை எதிர்த்து மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். வரும் தலைமுறைப் பெண்களாவது இந்த வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க, இப்போதிருந்தே அதற்கான பணியைத் தொடங்குவோம்.

- சித்ரா, ஆரணி.

 

ரதட்சணை என்னும் வன்முறை இன்று சில இடங்களில் நடக்கலாம். ஆனால், இன்று பெண்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். படித்த பெண்கள் சம்பாதிப்பதால் தைரியமாக இருக்கிறார்கள். தங்கள் மகள் வரதட்சணையால் வன்முறைக்கு ஆளானால், அந்தப் பெண்ணின் பெற்றோர் எதற்கும் பயப்படாமல் காவல்துறையிடம் செல்ல வேண்டும். அவர்கள் வாய் மூடி மௌனம் சாதிப்பதால், மற்றவர்களும் இதேபோல் செய்யத் துணிவு கொள்வார்கள்.

தன் பெற்றோர், உடன் பிறந்தோர் என அனைவரையும் விட்டுவரும் பெண் தைரியமாக இருக்க வேண்டும். நாம் தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். மாமியார், மாமனார் பெரியோர் என்பதால் மதிக்க வேண்டும். அவர்கள் நம்மை மிதித்தால் கவலைப்படாமல் எதிர்த்துப் போராட வேண்டும். ஆண்கள் மனம் மாறி ‘இவள் என்னுடையவள். அவள் கொண்டுவரும் பணத்தில் நாம் சுவாசிப்பதா’என்று எண்ணத்துடன் இருந்தால், இது போன்ற வன்முறைகளை சமூகத்தில் இருந்து ஒழித்துவிடலாம். ஆண்களே சிந்தியுங்கள்.

- உஷா முத்துராமன், திருநகர்

 

ரதட்சணை என்னும் வன்முறை கட்டுரை வாசித்தேன். நதிகள், ஆறுகள் போன்றவற்றுக்குப் பெண்களின் பெயர்களை வைத்து வழிபடும் நமது நாட்டில்தான் பெண்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வரதட்சணைக் கொடுமையால் எத்தனையோ கொலைகள், தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. வளர்ச்சியடைந்துள்ள இந்தியாவில் இன்னும் முதிர்ச்சியடையாத மனங்களால்தான் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன. கல்வியறிவின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, சமூகத்தில் கிடைக்கும் மரியாதை (?) போன்ற காரணங்களுக்காகவே தங்களுக்கு நேரும் கொடுமைகளை பெரும்பாலான பெண்கள் வெளியே சொல்வதில்லை.

என்றாலும், சில பெண்கள் மட்டுமே வரதட்சணைக் கொடுமை என்ற விஷயத்தை தவறான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற பொய்வழக்குகள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. இதற்காக உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பு அளித்திருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும்போது அதை ஆதாரத்துடன் சட்டரீதியாக எதிர்கொள்ளும் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எத்தனையோ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் சக உயிரான பெண்களை மதித்து நடக்கும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். இனியாவது இத்தகைய வரதட்சணைச் சாவுகள் நடக்காமலிருக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

- தேஜஸ், கோவை.

 

ரு பெண்ணுக்குத் திருமணமே மோட்சம், கணவனே தெய்வம் என்ற எண்ணத்தைப் பெண்களும் பெண்களைப் பெற்றோரும் தங்கள் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். தாய் வீட்டில் பெற்றோர்களிடமும் சகோதரர்களிடமும் சண்டையிட்டுத் தன் உரிமையை நிலைநாட்டும் பெண்கள், கணவன் வீட்டில் ஊமையாய், ஆமையாய் அடங்கிப்போவது விசித்திரம் மட்டுமல்ல; தனக்கு வேறு வழியில்லை என்று அவள் நினைப்பதாலும்தான். ‘வாழாவெட்டி’ என்ற பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்ற பயமும்தான். தாலிக்கயிறு வெளியே செல்லும்போது பெண்ணுக்கு வேலியாகவும், வீட்டுக்குள் தூக்குக்கயிறாகவும் இருப்பது விந்தை.

பெரியாரும் பெரியவாளும் வரதட்சணையை எதிர்த்தாலும், அது இன்னமும் அடங்கவில்லை. திருமணம் பேசி முடிக்கும்போதும், திருமண மேடை அருகேயும் வரதட்சணை பற்றிக் கறாராகப் பேசுபவர்கள் விஷயத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணங்கள் மாதிரி மறுமணங்களும் ஆதரிக்கப்பட வேண்டும். வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு மாற்று, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின் செய்துகொள்ளும் காதல் திருமணமே. நெடுவாசல், கதிராமங்கலம் விஷயத்தில் களத்தில் இறங்கும் அரசியல் கட்சிகள் வரதட்சணை,குடும்ப வன்முறை,பெண் எரிப்பு போன்ற விஷயத்தில் மௌனம் கலைக்க வேண்டும்.

சாதி ஒழிப்பு மாநாடுகள் போன்று வரதட்சணை ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். ‘வரதட்சிணை ஒழிப்பு தினம்’ என்று ஒரு நாளை அனுசரிக்க வேண்டும். சாதிச் சங்கங்கள் வரதட்சணை ஒழிப்பை முதன்மை செயல்திட்டமாக்கிச் செயல்பட வேண்டும். எந்தச் சட்டத்திலும் துஷ்பிரயோகம் இருக்கும். வரதட்சணைக்கொடுமை வழக்கில் உரிய விசாரணையின்றி யாரையும் உடனடியாகக் கைது செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவே. மேலும், வரதட்சிணைக் கொடுமையால் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டாலும்,போராட்டம் நடத்தினாலன்றி நம்ம ஊர் போலீஸ் யாரையும் கைதுசெய்வதில்லையே?

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

 

பொதுவாக வரதட்சிணை என்றாலே நமக்கு மாப்பிள்ளை வீட்டாரின் நினைவுதான் வருகிறது. அது உண்மைதான் என்றாலும், நம் மகள் வசதியான வீட்டுக்குச் சென்றால் மிகவும் நன்றாக இருப்பாள் என்ற பெண்ணைப் பெற்றவர்களின் அறியாமையே வரதட்சிணையின் எல்லை விரிவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பெண் வீட்டார் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கும்போது, மாப்பிள்ளை வீட்டாரும் கொள்ளையடிக்கத் தயாராகிறார்கள்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இரு வீட்டாருமே இதைப் பெருமையாக நினைப்பதுதான். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பெரும்பங்கு பெண் வீட்டாரின் கையில்தான் இருக்கிறது. பணம்தான் நிம்மதியைத் தரும் என்ற மாயையில் இருந்து விடுபட்டு மாப்பிள்ளையின் குணம், தரத்தைக் கணக்கிட ஆரம்பித்தால் இக்கொடுமைகள் குறைய சிறிதாவது வாய்ப்பிருக்கிறது. பையன் எனக்கு வரதட்சிணையே பிடிக்காது . ஆனால், பெற்றோருக்காகச் சம்மதிக்கிறேன் என்று ஜகா வாங்காமல் உண்மையான தைரியத்துடன் எதிர்த்து நின்றாலும் வரதட்சிணை தன் வீரியத்தை இழக்க வாய்ப்பிருக்கிறது.பெண்ணின் பெற்றோர் கொஞ்சம் கடுமை காட்டினாலே இப்பிரச்சினை ஒரு முடிவை நோக்கி நகரும்.

பெண்ணுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்ற அச்சமே பெண்ணின் பெற்றோரை இப்பாழுங்கிணற்றில் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டுக் கல்வி பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கை, துணிச்சல் போன்ற நற்பண்புகளைப் புகட்டுவதாக இல்லை. கல்வியைச் சரி செய்தாலே பல பிரச்சினைகளும் சரியாகும். கல்வி கை கொடுக்காததால் பெற்றோர்கள்தான் பெண்ணைத் துணிச்சல் மிக்கவளாக வளர்க்க வேண்டும். எக்காலத்திலும் பெண்களுக்குத் துணிவு மட்டுமே உற்ற துணை. வரதட்சிணை பிரச்சினை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதைக் கிள்ளி எறிவதுதான் புத்திசாலித்தனமானது.

வளர விடுவது நல்லதே அல்ல. இந்த விஷயத்தில் சட்ட அறிவு பெண்களுக்கு மிக மிக அவசியம். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு மிகக் கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எந்த ஒரு முன்னேற்றமும் மனிதர்களின் நல்ல மனமாற்றத்தால் மட்டுமே வரும். இந்த விஷயத்தில் பெண் வீட்டார் துணிந்து முதல் அடி எடுத்து வைத்தால்தான் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்.

- ஜே .லூர்து, மதுரை.

 

தன் மகளின் திருமணத்துக்காகப் பொன்னையும் பொருளையும் சேர்ப்பதில் கவனம் கொள்ளும் பெற்றோர்கள் பெண்ணின் கல்வி, வேலை, வேலையின் மூலம் அவள் பெறக்கூடிய பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே பெண்களின் பிரச்சினைகள் அகலும்.

பெண்ணின் சுயசிந்தனை, சுயசார்புத்தன்மை, தன்னம்பிக்கையைக் குற்றமாகக் கருதுகிற பெற்றோர்களும், அவள் சார்ந்த சமூகமும் வரதட்சிணைக்கு எதிராக முழக்கமிடுவதில் எவ்வித நியாயமுமில்லை. என்றைக்குப் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் உண்மையில் செயலாக்கம் பெறுமோ, என்றைக்குப் பெண்களுக்கு எதிரான கலாச்சார முரண்பாடுகள் களையப்படுமோ, என்றைக்குப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குரிய தண்டனைகள் பல மடங்கு கொடூரமாக்கப்படுமோ அன்றைக்கு வரதட்சிணை என்ற வார்த்தை வரலாற்றில் இருந்து அகலும்.

- மா.சினேகா, ஈரோடு.

புகுந்த வீட்டில் ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்த பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது சென்று பெற்றோர்கள் அல்லது மற்ற உறவினர்கள் பார்த்துவிட்டு வர வேண்டும். வரதட்சிணை எனப் பேச்சு எடுத்தவுடன் பெண்கள் அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நம்முடைய மகள் நலமாகத்தான் இருக்கிறாளா எனக் கண்காணிக்க சம்பந்தி வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடம் நட்பு பாராட்டி, சம்பந்தி வீட்டாரைக் கண்காணிக்கச் சொல்ல வேண்டும். புகுந்த வீட்டுக்குச் செல்லும் முன்பு துணிந்து நிற்கும் தன்மையை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

- குரு.பழனிசாமி, கோவை.

 

ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதற்கு முன்பு புகுந்த வீட்டாரைப் பற்றித் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். இப்போது பல துப்பறியும் நிறுவனங்கள் உள்ளன அவற்றின் உதவியுடன் தெளிவாக விசாரணை செய்த பின்னர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யலாம். வரதட்சிணை குறித்து புகார் அளிக்கச் சென்றால் காவல்துறை பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளுக்குத்தான் பெரும்பாலும் சாதகமாக நடந்துகொள்கிறது. பெண் கொடுக்கும் முன் ஊர் கூடி ‘வரதட்சிணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம்’ என உறுதி மொழி எடுக்க செய்ய வேண்டும்.

- சி.செல்வராஜ், புலிவலம்.

 

உழைத்து நிற்க முடியாமல், முதுகெலும்பு இல்லாத ஆண்கள் கேட்கும் பிச்சைதான் வரதட்சிணை. வரதட்சிணை கேட்கும் மாமியார், கணவன் ஆகியோர் மீது தைரியமாகக் காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். ஆண் குழந்தைகளைப் பெற்ற பெண்கள் வரதட்சிணை வாங்குவது குற்றச் செயல் எனத் தங்களின் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

- வெ.ஜெயலட்சுமி, கோவை.

 

'பெண்கள் வீட்டின் கண்கள்’ எனப் போற்றும் நாட்டில் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சிணை கேட்பது இழிவான செயலாகும். நம் வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதேபோல் வீட்டுக்குத் திருமணமாகிவரும் பெண்களையும் நடத்த வேண்டும். - மனோகர், மேட்டுப்பாளையம். தன் மகள் எந்தக் குறையுமின்றி வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் பெற்றோர் மனமுவந்து அளிக்கும் வாழ்வாதாரமே வரதட்சிணை. தற்போது மாப்பிள்ளை வீட்டார், பெண் அழகற்றவளாக இருந்தால் வரதட்சிணை அதிகமாகவும், அழகனாவளாக இருந்தால் கொடுக்கும் பொருட்களை ஏற்றுக்கொண்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆண் என்றால் வரவும், பெண் என்றால் செலவும் என சிசுவிலிருந்தே பெண் பிள்ளைகளை புறந்தள்ளும் மனோபாவத்தை மாற்றினால்தான், பெண் என்பவள் இச்சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது.

- பி.கவிபிரதா பிரபு, தேனி.

 

மருமகளை மகளாய் நினைத்த காலம் போய், பெண் வீட்டில் எவ்வளவு நகை, சீர், நாலு சக்கர வாகனம் தருவார்கள் என எதிர்பார்க்கும் காலமாக மாறிப்போனது. எத்தனை லட்சம் வரதட்சிணை கொண்டுவந்தாலும் பெண்களைப் புகுந்த வீடுகளில் அசிங்கப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் மிகச் சாதாரணமாகிவிட்டது.

பெண் என்றாலே எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது, எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது. சம்பாதிக்கும் பணத்தைக் கணவரிடம்தான் கொடுக்க வேண்டும். வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டுப் பல பெண்கள் தற்கொலைசெய்துகொள்கிறார்கள் என்று செய்திகள் வந்தாலும், இந்தச் சமுகம் மீண்டும் பெண்ணுக்கு என்ன தருவீர்கள் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

- தேவஜோதி, மதுரை.

 

பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் முன் மாப்பிள்ளையின் ஒழுக்கம், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோரின் தகுதிகளை விசாரிக்க வேண்டும். படிப்பும் - படோடாபமும் முக்கியம் அல்ல. எதையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைப் பெண்கள் பெற்றால் எல்லாம் நன்மையாய் மாறும். - டி.கே.மூர்த்தி, தலைஞாயிறு. பொருளாதார ரீதியில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள், திருமணத்தின்போது கிடைக்கும் வரதட்சிணையால் மேலும் பலன் அடைகிறார்கள்.

வரதட்சிணை வாங்க நினைக்காத ஆண்களிடமும் ‘உன் மாமனார் என்ன செய்தார்? உன்னுடைய கஷ்ட காலத்தில் உதவினாரா?’ என்பது போன்ற கேள்விகளை இச்சமூகம் கேட்டு எதிர்பார்ப்பு மனோநிலையை உண்டாக்கி விடுகிறது. தனியொரு மனிதனாய் தன் மனைவி, மக்களைக் காப்பாற்ற தகுதியற்ற ஆண்களுக்குத் திருமணம், குழந்தைப்பேறு எதற்கு?

- எம். சுதாமதி பிரபு, தேனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x