Last Updated : 11 May, 2014 10:00 AM

 

Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

வெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள்

ஆரம்ப காலப் பெண் எழுத்தாளர்களில் சிலர் அவர்களின் குடும்பத்துக்கு வெளியில் எழுத்தாளராக அறியப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் எழுத்துகள் அச்சில் ஏறவில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரங்கநாயகி அம்மாள். சில நாவல்களையும், கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

அச்சில் ஏறினால்தான் எழுத்தாளரா? அவரது எழுத்தார்வம், தீவிரமானது. இரவு தூங்கப் போகும்போதுகூடத் தலையணைக்கு அருகில் பேனாவும், காகிதமும் வைத்திருப்பாராம். திடீரென்று நள்ளிரவில் கவிதைக்கான ஒரு சிந்தனை அல்லது எழுதிக்கொண்டிருக்கும் கவிதையில் ஒரு மாற்றுச் சொல் அல்லது வரி தோன்றினால் உடனே எழுந்து அதைக் குறித்துக்கொள்வாராம்.

ரங்கநாயகி அம்மாளின் கணவர் அக்காலத்தில் பிரபல வழக்கறிஞ ராக இருந்த எஸ்.டி. நிவாச கோபாலாச்சாரியார். சுதந்திரப் போராட்ட மும், காந்திய மதிப்பீடுகளும் அக்காலத்தில் வாழ்ந்த ரங்கநாயகி அம்மாளையும் வெகுவாகப் பாதித்திருப்பதை அவரது எழுத்துகள் மூலம் அறிய முடிகிறது.

ரங்கநாயகி அம்மாளின் எழுத்துகள் அவர் எழுதிய காலத்திலேயே (1920-30) அச்சேறியிருந்தால் தலைசிறந்த பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அவர் பெயரும் இடம்பெற்றிருக்கும். தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு குடும்பத்தை முன்னேற்றும் கடமைகளில் எத்தனையோ பெண்களின் திறமைகள் வெளிச்சத்துக்கு வராமலே போய்விடுகின்றன. தன் கதைகளை அச்சேற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிக்காட்டாமலே அவர் வாழ்ந்திருக்கிறார்.

1962-ம் ஆண்டு தான் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் தன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏறக்குறைய இறுதி ஆசையாகப் பேத்தி ஆர். சூடாமணியிடம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

புத்தக ஆசை

அவரது மகள் வயிற்றுப் பேத்தியான ஆர். சூடாமணி அறுபதுகளில் ஒரு எழுத்தாளராக அங்கீகாரம் பெற்று அவரது எழுத்துகள் புத்தக வடிவமும் பெறுவதைக் கண்டு மகிழ்ந்தவர் ரங்கநாயகி அம்மாள்.

“என் கதைகளில் ஏதாவதொன்றை நீ தேர்ந்தெடுத்துப் புத்தகமாய் வெளியிட வேண்டும். நான் எழுதிய நடையிலேயே வெளியிட்டால் இந்த நாளில் எடுபடாது என்று உனக்குத் தோன்றினால், அவசிய மான சிறிய மாற்றங்களோ, திருத்தங்களோ நீ செய்துகொள்ளலாம். ஆனால் என் எழுத்துக்களில் ஒன்று புத்தகமாக வெளிவர வேண்டும் என்பது என் ஆசை. அது என் காலத்துக்கு அப்புறமானாலும் சரி” என்பதே ரங்கநாயகி அம்மாளின் ஆசை.

பாட்டி அபயம்மா (ரங்கநாயகி அம்மாள்) தன் ஆசையை முன்னதாகவே தெரிவித்திருந்தால் அவர் உயிருடன் இருந்தபோதே அதைச் செயல்படுத்தியிருக் கலாமே என்று ஆதங்கப்பட்டார் சூடாமணி.

சூடாமணியும், அவர் சகோதரி பத்மாசனியும் பாட்டியாரின் நாவல்களில் சிறந்ததொன்றைத் தேர்வு செய்தார்கள். 1920-களில் எழுதப்பட்ட ‘சந்தியா’ என்ற நாவலில்தான் பாட்டியார் தந்த சலுகையைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்தக் கதையின் தேர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம். பழங்கால நடையமைப்பில் மட்டும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிருந்தது. மற்றபடி கதையின் உள்ளடக்கத்திலோ, நிகழ்ச்சி வரிசையிலோ, பாத்திரத்தன்மையிலோ எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

1970-ல் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தது. விற்பனைக்காகக் கொண்டுவராமல் தானே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிட்டுத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார் சூடாமணி.

கவனம் ஈர்த்த நாவல்

1990-களில் பழந்தலைமுறையினரின் எழுத்துக்களின்பால் கவனம் திரும்பியது. அவர்களின் கருத்துகள், செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் அக்கறை செலுத்தத் தொடங்கினர். இத்தகைய சூழலில் ரங்கநாயகி அம்மாளின் மற்ற எழுத்துக்களையும் பதிப்பிக்க விரும்பினார் சூடாமணி. ஆனால் முதற்பதிப்பு முயற்சிக்குப் பின் இருபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்தக் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் செல்லரித்துப் போய்விட்டன.

வேறு வழியின்றி ‘சந்தியா’ நாவலையே இரண்டாம் பதிப்பாக வெளியிடும் முயற்சியை மேற்கொண்டார் சூடாமணி. பாட்டியாரின் கவிதைகளில் இரண்டும் தேறியது. அவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார்.

‘சந்தியா’ நாவலின் சிறப்பான அம்சம் விறுவிறுப்பான கதையோட்டம். சுவாரசியம் குறையாத கட்டமைப்பு. கடற்கரையோரம் ஒரு வீடு. அதில் தங்கியிருக்கும் ஒற்றைப் பெண்மணி. அவள்தான் சந்தியா. மிதவை ஒன்றைப் பற்றிக்கொண்டு கரையில் ஒதுங்கும் ஓர் அகதியை மீட்டு உணவளித்துக் காப்பாற்றுகின்றனர் சந்தியாவின் வேலையாட்கள்.

தற்செயலாகச் சந்தியாவைப் பார்த்து விடும் அவன், அவள் யாரென அடையாளம் கண்டுகொள்கிறான். அவன் பழிவாங்கத் துடிக்கும் ஒரு துரோகியின் மனைவி அவள். அவளைத் தேடிக்கொண்டு ஒரு நாள் அவள் கணவன் வருவான், அப்போது அவனைக் கொல்லலாம் என்பதே அவன் திட்டம். அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறான்.

புதுமைப்பெண் சந்தியா

ஒரு நாள் சந்தியாவின் கதையை அவள் வாயிலாகவே தெரிந்துகொள்ளும் அவன் நெகிழ்ந்துபோகிறான். நண்பனுடன் வியாபாரம் செய்துவந்த கணவன் தன் நண்பனுக்குச் செய்த துரோகத்தை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. சிறையிலிருந்த தப்பி வந்த அவனை அடியோடு நிராகரித்து வீட்டிலேயே தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வாழ்கிறாள். மதிப்பீடுகள் சார்ந்த அவளது தனித்தன்மையே நாவலின் மையப்புள்ளி.

சிறையிலிருந்து தப்பிவிடும் சந்தியாவின் கணவன் வேறெங்கும் போகவில்லை. தன்னால் பாதிக்கப்பட்ட நண்பனின் குடும்பத்தாரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுகிறான். அவனுடைய மகன்களைப் படிக்க வைத்து ஆளாக்குகிறான். சந்தியாவைச் சந்தித்து இவ்வாறு தான் பிராயச்சித்தம் செய்துவிட்டதைச் சொல்லும்போது கொலை வெறியுடன் அலையும் அந்த நண்பன் மனம் மாறிப்போகிறான். இருவரும் மீண்டும் நண்பர்களாகின்றனர். வியாபாரத்தையும் புதுப்பிக்கின்றனர். ஆனால் கடைசிவரை சந்தியா கணவனுடன் சேர மறுத்துத் தன் தனி வாழ்வைத் தொடர்கிறாள். நீண்ட பிரிவுக்குப் பின் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்றும், தான் ஒரு சமன்பட்ட மனநிலையை அடைந்து விட்டதாகவும் விளக்கம் தருகிறாள்.

பெண்ணின் தனித்துவம், கொள்கைப் பற்று, மதிப்பீடுகள் ஆகியவற்றை முன்வைக்கும் இந்த நாவல், காலத்துக்கு முற்பட்ட ஒரு சிந்தனைதான். தன் எழுத்துக்கள் அச்சேற வேண்டும் என்பதை உரிமையாகக் கோரிப் பெற்றுக்கொள்ளத் தயங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண் எழுத்தாளரின் உள்ளம் எத்தகைய ஓர் உரிமை உணர்வை எழுத்தில் வெளிப்படுத்தி யிருக்கிறது என்பது பிரமிக்க வைக்கிறது.

கவிதைக் களம்

அக்காலத்தில், சமூக அரசியல் தளத்தில் வலியுறுத்தப்பட்ட இந்து, முஸ்லிம் ஒற்றுமை உணர்வு இந்த நாவலில் ஓர் இழையாகப் பின்னப்பட்டுள்ளது. சந்தியாவின் வீடே அவளது இஸ்லாமியத் தோழி ஸலிமாவுக்குரியது. பிற்காலத்தில் கணவனை இழந்த ஸலிமாவுடன் சந்தியாவும் சேர்ந்து வசிக்கிறாள்.

பதிப்பிக்கப்பட்ட ரங்கநாயகி அம்மாளின் கவிதைகளில் ஒன்று சுதந்திர தினக் கும்மி. 15.8.1947 சர்வஜித்து வருஷம் ஆடி மாதம் 30-ம் தேதி எழுதப்பட்டதாக அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.

நேதாஜியின் முயற்சிகளையும், காந்திஜியின் முயற்சிகளையும் ஒரு சேரப் பாராட்டும் இந்தக் கவிதை நாட்டு விடுதலைக்குப் பங்களித்த எத்தனையோ பெண்களின் பிரதிநிதியாக சரோஜினி நாயுடுவையும் குறிப்பிடத் தவறவில்லை.

மற்றொரு கவிதை மகாத்மா காந்தி – சரம கவி

புத்தரைப் பின்பற்றிய புண்ணிய

மூர்த்தி காந்தி, அந்த

உத்தமரை யிழந்த வகை

ஒரு நாளும் மறந்திடாதே

நீண்ட கவிதையின் ஒவ்வொரு பத்தியும் உருகி உருகிச் சொல்லும் ஒரே விஷயம் காந்திக்கு சாவு நேர்ந்த விதம், அந்த அகிம்சா மூர்த்தி இம்சித்துக் கொல்லப்பட்ட குரூரம்! உண்ணாநோன்பில் போகாத அவர் உயிரைத் திட்டமிட்டுச் சமயமறிந்து கொன்ற அந்தப் பாதகச் செயல்.

தான் வாழ்ந்த காலத்தின் சூழலை உள்வாங்கிக்கொண்டு தன் கருத்தியலைப் பதிவு செய்திருக்கும் ரங்கநாயகி அம்மாளின் ஏனைய படைப்புகளை மீட்க முடியாமல் போனதை எண்ணி நம் மனம் ஏங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x