Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

வெண்டி டோனிகர் - தடை செய்யப்பட்ட பெண் அறிஞர்

அமெரிக்க இந்தியவியல் அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய தி இந்தூஸ்: ஆன் ஆல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி என்ற புத்தகம் திரும்பப் பெறப்பட இருப்பது, சமீபத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஏற்கெனவே சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானிக் வெர்சஸ், தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா ஆகிய புத்தகங்கள் நேரடித் தடையைச் சந்தித்துள்ளன. ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது என்றால், அதற்கு எதிர்க்கருத்தை முன்வைக்கலாம். அதற்குப் பதிலாக எந்தக் கருத்தையும் பேசக்கூடாது என்று தணிக்கை செய்வது எப்படிச் சரியான ஒரு நடைமுறையாகும்? இதில் ஒரு தனிநபரின் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை பலி கொடுக்கப்படுகிறது.

வெண்டி டோனிகரின் இந்தப் புத்தகம் 2009இல் பென்குவின், வைகிங் பதிப்பாக வந்து, விற்பனையில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. 2010இல் அமெரிக்க தேசியப் புத்தக விமர்சகர் வட்டம் தி இந்தூஸ் புத்தகத்தைத் தங்களது புத்தக விருது பரிசீலனைப் பட்டியலில் சேர்த்தது. அப்போது அந்தப் புத்தகத்தில் தகவல் பிழைகள் இருப்பதாகவும் ஒரு சார்பாக இருப்பதாகவும் இந்து அமெரிக்க அறக்கட்டளை குற்றம்சாட்டியது.

இந்து மரபு என்று டோனிகர் குறிப்பிடுவதன் துல்லியத்தன்மை குறித்து இந்தியாவில் இந்துத்வா அமைப்புகள் 2000த்தின் தொடக்கத்தில் கேள்வி எழுப்பின. "எனது ஆய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு பார்வையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளே அன்றி, இந்திய சுயஅடையாளத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டியதில்லை. அவற்றை ஆராய்ச்சியாகவே பார்க்க வேண்டும்" என்று வெண்டி அப்போது தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இந்தப் புத்தகத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சிக்ஷா பச்சாவ் ஆந்தோலன் என்ற சிறிய அமைப்பைச் சேர்ந்த தீனாநாத் பத்ராவுடன், பென்குவின் நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொண்டுள்ளது. இதையடுத்து பென்குவின் இந்தியா நிறுவனம் ‘தி இந்தூஸ்' நூலை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதற்கு வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பார்த்தா சாட்டர்ஜி, அறிஞர்கள் டேவிட் ஷுல்மான், ஜீத் தைய்யில் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பென்குவின் பதிப்பகத்துக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதியுள்ள திறந்த கடிதத்தில், "இந்த முடிவு அச்சமூட்டுகிறது. காரணம், அந்தப் புத்தகத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. பாசிசவாதிகள் ஆட்சிக்கு வர இப்போது பிரசாரம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் அதிகாரத்தைப் பிடிக்காத நிலையிலேயே பென்குவின் பதிப்பகம் இந்த முடிவை எடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பென்குவின் பதிப்பகம் சமரசம் செய்துகொண்டு, புத்தகத்தை திரும்பப் பெற ஒப்புக்கொண்டதற்குச் சில அமைப்புகள் கண்மூடித்தனமாகப் பிரயோகிக்க வாய்ப்புள்ள வன்முறைக்கு அஞ்சியதே காரணம் என்றும் கருதப்படுகிறது. ஏற்கெனவே இது போன்றதொரு வன்முறையை எம்.எஃப். ஹூசேனும், பெண் இயக்குநர் தீபா மேத்தாவும் சந்தித்துள்ளனர்.

"புத்தக்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வளவு முட்டாள்தனமானவை என்றும், ஒரு பதிப்பாளரின் உயிருக்கு உள்ள ஆபத்தையும் கொண்ட கிரிமினல் குற்றத்தைக் கணக்கில் எடுக்காமல், இந்துக்களை பற்றிய ஒரு புத்தகத்தை பதிப்பிப்பதில் உள்ள சிவில் குற்றத்தையே இந்தியச் சட்டம் பெரிதாகக் கருதுகிறது.

அதேநேரம் இந்த இணையதள யுகத்தில், எந்தப் புத்தகத்தையும் ஒடுக்கிவிட முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படியும் என் புத்தகம் தடை செய்யப்பட்டால், அந்தப் புத்தகத்தை மற்ற வகைகளில் இணையதளம் சுற்றில் வைத்திருக்கும்" என்று வெண்டி டோனிகர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரியது எது?

சரி, டோனிகரின் புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய அம்சங்கள்தான் என்ன?

மகாபாரதத்தின் உண்மையான பிரதியில் பெண்கள் சார்ந்து நிறைய முற்போக்கான விஷயங்கள் பதிவாகியுள்ளன. குந்தி தேவி கர்ணனை மகனாகப் பெறுவதற்கு எப்படி கர்ப்பமடைந்தார் என்பதற்குச் சில காரணங்களை வெண்டி டோனிகர் கூறியுள்ளார். மேலும் ராமாயணத்தை ஒரு கதை என்று கூறியுள்ளார்.

அறிஞர்களின் ஆராய்ச்சி எப்போதும் விவாதத்துக்கு உட்பட்ட ஒன்றுதான். ஆனால், அவர்கள் எதையும் வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே தடுக்கும் வகையில், அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயகரீதியிலும், நேர்மையாகவும் அவர்கள் ஆராய்ச்சி செய்வதைத் தடுக்கும் வகையில் இருக்கிறது என்பதே பலரும் முன்வைக்கும் கவலை.

தங்கள் மதத்தையும் உணர்வையும் காயப்படுத்துவதாகக் கூறும் குறிப்பிட்ட சில குழுக்கள் பேச்சுரிமையைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும், பொதுக் கருத்து மூலமாகவும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன. இது குறுகிய நோக்கத்துடன் இருப்பது மட்டுமில்லாமல், அறிஞர்களையும், ஆராய்ச்சிகளையும் அவர்கள் காயப்படுத்துவது கண்டுகொள்ளப்படாமல் போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x