Published : 06 Nov 2016 02:13 PM
Last Updated : 06 Nov 2016 02:13 PM

வானவில் பெண்கள்: சூப் கடையால் சீரான வாழ்க்கை

சூழ்நிலையும் சந்தர்ப்பமும் ஒருவருக்குச் சாதிக்கத் தூண்டும் ஆற்றலை உருவாக்கித் தருகின்றன. வாழ்க்கை தரும் சவால்களைக் கண்டு துவண்டு விடாமல், துணிச்சலோடு எதிர்கொள்பவர்கள் தனித்தன்மை மிக்கவர்களாக, சாதனையாளர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஓமனா. காதல் திருமணத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட ஓமனா, ஆதி நாராயணனோடு சென்னையில் இல்லறத்தைத் தொடங்கினார். ஹோட்டலில் வேலை செய்த கணவரின் வழிகாட்டுதலில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் உருவானதுதான் ஜே.ஆர்.ஹாட் ஹெர்பல் அண்ட் வெஜ் சூப்ஸ்.

ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், விரைவில் வளர்ச்சி கண்டது இவரது கடை. அன்றாடம் கிடைக்கும் மூலிகை சூப்புடன், நாள்தோறும் ஒரு கீரை சூப் என்பது இந்தக் கடையின் அடையாளம். ஆயிரக்கணக்கானவர்கள் இவரது கடையின் வாடிக்கையாளர்கள்.

சூப் கடை வைக்கும் எண்ணம் எப்படி வந்தது?

என் கணவர் பணியாற்றிய ஹோட்டலில் அவர் செய்த சூப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அந்தக் கைப்பக்குவத்தைக் கற்றுக்கொண்டு, நான் ஒரு சூப் கடை வைக்க முடிவு செய்தேன். இன்று மூன்று கிளைகளாக வளர்ந்து விட்டது!

உங்கள் கடையில் என்ன சிறப்பு?

மற்ற சூப் கடைகளிலிருந்து ஏதாவது ஒரு விதத்தில் நாம் வித்தியாசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உதித்ததுதான் நாள்தோறும் ஒரு சூப். இங்கே தினமும் மூலிகை சூப் கிடைக்கும்.

மூலிகை சூப் என்றால் என்ன?

மூலிகை சூப் என்பது ரோஜா, வல்லாரை, வால்மிளகு, மிளகு, சுக்கு, துளசி, கருந்துளசி, சித்தரத்தை, சதக்குப்பை என்று 25 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதைக் குடிப்பதால் சளி, இருமல், சர்க்கரை, மூட்டுவலி, உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். இதனால் ஆரோக்கிய சூப் என்ற பெயரும் கிடைத்தது.

மிர்தானியா சூப் என்றால் என்ன?

மிளகு, பூண்டு, இஞ்சி, தனியா, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் வாயு, சளி, இருமல் தொல்லை தீரும்.

சூப் விற்பனை எப்போது?

மாலை 4.30 மணி முதல் இரவு 11 மணிவரை ஒரு நாளைக்குக் குறைந்தது 100 லிட்டர் சூப் விற்பனை செய்கிறோம். மாலை நேரத்துக்கு உகந்த ஆரோக்கிய பானம் என்பதால் தேடி வரும் வாடிக்கையாளர்கள் அதிகம். கார்த்திகை, மார்கழி, தை போன்ற குளிர்காலங்களில் விற்பனை களைகட்டும். சூப்பில் முறுக்கு போட்டுத் தருவது எங்கள் சிறப்பு. ஒரு ரூபாய் ஐம்பது பைசாவில் தொடங்கிய சூப், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் மூலிகை சூப் குடிப்பது நல்லதா?

நல்லதுதான். அன்றாடம் தயாரிப்பதால் ரசாயனம் எதுவும் கலப்பதில்லை. சூப் பவுடரையும் விற்பனை செய்கிறோம். அவற்றில் பாதுகாப்புக்காக ரசாயனம் சேர்ப்பது கட்டாயமாகிறது. சூப் பவுடரைத் தண்ணீர் விட்டுக் கலந்து, கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பருகலாம்.

30 வருட அனுபவம் எப்படி இருக்கிறது?

கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் அடிக்கடி வழக்கு போட்டுவிடுவார்கள். அதிலிருந்து மீள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. சில நல்ல மனிதர்களின் உதவியால் அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டோம். இப்போது வயதாகி விட்டதால், என் மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டோம். அவன் சான்ட்விச் வகைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களைக் கவர்ந்துவருகிறான்.

வாடிக்கையாளர்கள்?

திரை நட்சத்திரங்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், சின்னத்திரை நட்சத் திரங்கள் என்று பலரும் எங்களது வாடிக்கையாளர்கள். காரில் இருந்தபடியே சூப்பை சுவைத்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x