Last Updated : 20 Nov, 2016 01:23 PM

 

Published : 20 Nov 2016 01:23 PM
Last Updated : 20 Nov 2016 01:23 PM

முகம் நூறு: கதவு திறக்கும் கனவு விரியும்

மழை தூறி ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில் அந்தத் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது ஆச்சரியமாக இருந்தது. சென்னை வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் இருக்கிற அந்தத் தொழிற்சாலை முழுக்கப் பெண்கள் நிறைந்திருந்தார்கள்! மின்சாரப் பயன்பாட்டைச் சீர்செய்யும் ஸ்டெபிலைசர், கேபிள்கள் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையில் அவ்வளவு பெண்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களால் இயக்கப்படும் இந்தத் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருபவரும் ஒரு பெண்தான்!

“எல்லாக் கதவுகளும் தட்டியவுடன் திறந்து விடுவதில்லை. முழு முயற்சியுடன் மோதும்போது கதவும் திறக்கும்; நம் கனவும் விரியும்” என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்கிற ஜெயலட்சுமி, அந்தத் தொழிற்சாலையின் வெற்றிக்கு ஆணிவேர்.

“கன்னியாகுமரிதான் என் சொந்த ஊர். எங்க ஊர்ல பெண்கள் படிப்பாங்க. ஆனா கிராமத்தைத் தாண்டி வெளியே வர மாட்டாங்க. நான் ஸ்கூல் படிக்கும்போதே யாரையும் சார்ந்து இல்லாம ஒரு தொழில்முனைவோரா ஆகணும்ங்கற குறிக்கோளோடு இருந்தேன். ஒரு பெண் முன்னேறினால் ஒரு குடும்பமே முன்னேறும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தேன். அதனால் நான் ஒரு தொழிற்சாலை அமைத்தால் அதில் பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கணும்னு அப்போவே முடிவெடுத்திருந்தேன்” என்று சொல்லும் ஜெயலட்சுமி, இன்று தன் கனவை மெய்ப்பித்திருக்கிறார். தான் நடத்திவரும் இரண்டு தொழிற்சாலைகளிலும் 110 பெண்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்! தன்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாடுவதற்காகத் தொழிற்சாலையிலேயே பூங்காவையும் காப்பகத்தையும் அமைத்திருக்கிறார்.

ஜெயிக்க வைத்த வேட்கை

“திருமணமாகி சென்னை வந்தபோது எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடித்தவுடன், இந்தத் துறையில் தனியாகத் தொழில் தொடங்கணும்னு விரும்பினேன். ஆனால் அதிலுள்ள சிரமங்களைத் தெரிஞ்சுக்கணும்னா அடிப்படை வலுவா இருக்கணுமே. அதனால் ஐந்து நிறுவனங்களில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். நடுவில் வாய்ப்பு கிடைக்கும்போது கான்டிராக்ட் எடுத்து, தனியா தொழில் செய்தேன். தனியே தொழில் தொடங்கியபோது வங்கிக் கடன் முதல் வட்டிவரை பயமுறுத்தின. ஆனா எப்படியாவது ஜெயிக்கணும்ங்கற உந்துதல் பயத்தைப் போக்கி, என்னை உத்வேகப்படுத்துச்சு. குடும்பத்தையும் தொழிலையும் சரியான விகிதத்துல பேலன்ஸ் செய்தேன். தொழிற்சாலைக்கு என் மகன்களையும் அழைத்துச் செல்வேன். என் கனவை அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. அவமானங்கள், கஷ்டங்களைத் தாண்டி வந்து திரும்பிப் பார்க்கும்போது, 16 ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன” என்று முழுமூச்சாகச் சொல்லி முடிக்கிறார் ஜெயலட்சுமி.

மேலும் “குறித்த நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்வதும் தொடர்ச்சியான தர மேம்பாடும்தான் தன் வளர்ச்சிக்குக் காரணம்” என்றும் சொல்கிறார் அவர்.

பூஜ்யத்திலிருந்து…

வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் திரைப்படத்தைவிடவும் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. கொடுத்த ஆர்டரை நிறுவனங்கள் கேன்சல் செய்ய, ஒரே இரவில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார் ஜெயலட்சுமி. முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து, வேலைக்கு அமர்த்திய 300 தொழிலாளர்களும் வீட்டைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். செய்வதற்கு வேலை இல்லை, ஆனால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் யாரும் உடைந்துதானே போவார்கள்.

“ஒரே தொழிலை மட்டும் செய்யும்போது, மாற்று ஏற்பாடு இல்லாத நெருக்கடியை அப்போதுதான் உணர்ந்தேன். இருந்த பணத்தைப் பகிர்ந்தளித்து விட்டு, மறுநாள் வங்கிக்கு ஓடினேன். ஏற்கெனவே கடன் பெற்றுச் சரியாகத் திருப்பிச் செலுத்தியிருந்ததால், மீண்டும் கடன்பெற முடிந்தது. மறு படியும் பூஜ்யத்திலிருந்து தொடங்கினேன். அனுபவம்தான் சிறந்த ஆசான்” என்று சொல்கிறார் ஜெயலட்சுமி. அதற்குப் பிறகு மருத்துவத்துறை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

பெண்ணுக்கு வேலை வேண்டும்

பிரசவ கால நாப்கின்கள், டிஸ்போசபிள் பெட் பிராடக்ட்ஸ், குழந்தைகளுக்கான டயபர்கள் என்று மருத்துவமனைகளின் தேவைகளைக் கேட்டறிந்து, தயார் செய்து கொடுத்தார்.

“இந்த நிறுவனத்திலும் முழுக்கப் பெண்களையே பணியில் அமர்த்தினேன். இயக்குவதற்குப் பயிற்சி அளித்தேன். நாப்கின்களில் பிளாஸ்டிக், கெமிக்கல் இல்லாமல் தயாரிக்க, தைவான் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறேன். சென்னையைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு நாப்கின் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பொருட்களை விற்பனை செய்துவருகிறேன்” என்பவர், மருத்துவத்தையும் பொறியியலையும் ஒன்றாக இணைப்பது குறித்த ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுவருகிறார். பிகினி நாப்கின் (பெல்ட் மாடல்) உள்ளிட்ட புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்.

“தேடலையும் புது முயற்சிகளையும் நிறுத்திவிட்டால் ஒரே இடத்தில் தேங்கி விடுவோம். அடுத்த கட்டமாக இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, இன்னும் நிறையப் பெண்களுக்கு வேலை தர வேண்டும்” என்று தன் திட்டங்களை அடுக்கிக் கொண்டேபோகிறார் ஜெயலட்சுமி. சுற்றி நிற்கும் பெண்கள் அதை ஆமோதித்துப் புன்னகைக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x