Last Updated : 04 Jan, 2015 02:12 PM

 

Published : 04 Jan 2015 02:12 PM
Last Updated : 04 Jan 2015 02:12 PM

பெண் சக்தி: சட்டத்தின் முன்னோடிகள்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளில் பெண்கள் கால் பதிப்பதற்கான கடுமையான போராட்டத்தைத் தொடங்கிய முன்னோடி கார்னேலியா சோரப்ஜி. அந்தப் போராட்டத்தை மதராஸ் மாகாணத்தில் தொடர்ந்தவர் பி. ஆனந்தா பாய்.

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னேலியா சோரப்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு 1894-ல் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், 1924-ல்தான் சட்டத் துறையில் பெண்கள் நுழைய இந்தியச் சட்டத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட்டது.

அதற்கு அடுத்த 4 ஆண்டுகளிலேயே சட்டத் துறைக்குள் பெண்கள் நுழைவதற்கான போராட்டத்தை பி. ஆனந்தா பாய் சென்னையில் தொடங்கி வைத்தார். கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழகம் அடங்கிய அன்றைய மதராஸ் மாகாணத்தில் ஒரே பெண் சட்டப் பட்டதாரியாக அவர் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப் படிப்பை அவர் நிறைவு செய்தார். அன்றைய மதராஸ் மாகாணத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்த முதல் பெண் அவர்.

ஆனால், அவரால் உடனடியாக வழக்கறிஞராக மாற முடியவில்லை. அவர் வழக்கறிஞராக மாற முதலில் விரும்பவும் இல்லை. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'மெட்ராஸ்: தி லாண்ட், தி பீப்பிள் அண்ட் தேர் கவர்னன்ஸ்' என்ற புத்தகத்தில் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பு உள்ளது.

ஆனந்தா பாய், முதலில் அரசுப் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அது நிராகரிக்கப்படவே, நீதிமன்றம் சென்று வழக்கறிஞராக மாறுவதைப் பற்றி அவர் யோசித்தார். வி.வி. னிவாச அய்யங்காரிடம் தீவிர பயிற்சி பெற்ற பிறகு, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 1929 ஏப்ரல் 22-ம் தேதி வழக்கறிஞராகத் தன்னை அவர் பதிவு செய்துகொண்டார். இதன் மூலம் சென்னை நகரத்தில் பயிற்சி பெற்ற, அந்நகரை நன்கு அறிந்த முதல் பெண் வழக்கறிஞர் என்ற தனிப் பெருமையையும் பெற்றார்.

இன்றைய தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்கள் அந்தக் காலத்தில் தெற்கு கனரா மண்டலம் என்று அறியப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா பாய். அவருடைய அப்பா டாக்டர் கிருஷ்ண ராவ், தன் குடும்பப் பெண்கள் சுதந்திரமான, முறைசார்ந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

“நாட்டில் பெண்கள் எழுச்சி பெற ஆரம்பித்த காலகட்டம் 1920-30. அந்தக் காலத்தில்தான் சமூக சீர்திருத்த இயக்கம் பரவலானது. அந்தக் காலத்தில் மிகப் பெரிய பேசுபொருளாக இருந்த பெண்களை மையப்படுத்திய விவாதங்களில் சட்டமே மையப் பொருளாக இருந்தது. இந்து பெண்கள், முஸ்லிம் பெண்கள் என இரண்டு தரப்பினர் நடத்திய அகில இந்திய பெண்கள் மாநாடு களிலும், சட்ட ரீதியி லான மாற்றங் கள் மூலம் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டன” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வ. கீதா. அதேநேரம் ஆனந்தா பாய், கல்வி உரிமை பெற்ற சிறுபான்மைப் பெண்களில் ஒருவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேற்படிப்பும், மருத்துவமும் பெண்களிடையே பிரபலமடைந்து வருகின்றன. ஆனால், சட்டத் துறையில் அந்த ஆர்வம் இல்லை. அந்தத் திசையில் ஒரு நல்ல தொடக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது பெரும் உத்வேகம் தரும், என்று ஆனந்தா பாய் வழக்கறிஞர் ஆனதைப் பாராட்டி 1929-ல் நடந்த ஒரு விழாவில் இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் ருக்மணி லட்சுமிபதி குறிப்பிட்டுள்ளார்.

“அன்றைக்கு ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பெண்களிடம் வழக்கை ஒப்படைக்க மக்களும் தயங்கினார்கள். கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவதற்குத் தடையாக சமூக நம்பிக்கைளும் இருந்தன. இதன் காரணமாக சட்டம் படித்த பல பெண்கள், ஆண் வழக்கறிஞர்களின் கீழ் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டியிருந்தது” என்கிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி.

இந்தப் பின்னணியில் கார்னேலியா சோரப்ஜியும் ஆனந்தா பாயும் பல தடைகளைக் கடந்து சட்டத் துறையில் முன்னோடிகளாக இருந்துள்ளனர். தென்னிந்தியாவில் புதிய துறைக்குள் தைரியமாகக் கால் பதித்த ஆனந்தா பாயின், துணிச்சலுக்கு நாம் தலை வணங்க வேண்டும்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்: தமிழில்: ஆதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x